கவிப்பேரரசின் 'கருவாச்சி காவியம்'
'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்கள் எழுதிய 'கருவாச்சி காவியம்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் சிறப்பாக நடை பெற்றது.

கலைஞர் கருணாநிதி நூலை வெளியிட, முதல் நூலை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பெற்றுக் கொண்டார்.

நூலை வெளியிட்ட முதல்வர் கருணாநிதிக்கு தங்கமுலாம் பூசப்பட்ட பேனாவையும், செங்கோலையும் கவிஞர் வைரமுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், 'கவிப்பேரரசு வைரமுத்து எங்களோடு எவ்வளவு தொடர்பு கொண்ட வர், அதைப் போல நாங்கள் அவரோடு எந்த அளவிற்கு நட்பும், தொடர்பும் கொண்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் ஈடுபட்டிருக் கின்ற அரசியலுக்கு சில நேரங்களில் இடையூறுகள், விபத்துக்கள் வந்தபோது அவர் எப்படியெல்லாம் கொதித்துப் போனார் என்பதை அவருடைய கவிதை வரிகள் நாட்டிற்கு எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

"1991-ம் ஆண்டு நான் தலைமையேற்றிருந்த கழக அரசு திடீரென்று கலைக்கப்பட்டது. ஒருநாள் மாலை இல்லம் திரும்புகிற நேரத்தில் இல்லத்தில் இருந்தவர்கள் ஆட்சி கலைக்கப் பட்டுவிட்டது என்ற செய்தியை சொன்னார் கள். மறுநாள் பத்திரிகைகளில் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. நான்கைந்து வரிகள்தான். அடியே அனார்கலி, உனக்குப் பிறகு இந்த நாட்டில் உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம் தாண்டி என்று எழுதியிருந்தார். அவரையும் என்னையும் நீக்கமற ஒன்று சேர்ப்பதற்கு இந்த வரிகள் போதாதா?'' என்று கவிஞருக்கு தன் மீதும் தங்கள் இயக்கத்தின் மீதும் உள்ள பிடிப்பை, உணர்வைப் பற்றி நினைவுகூர்ந்த முதல்வர் மேலும் கூறுகையில், ''இந்த நூலிலே ஓரிடத்தில் கதாசிரியர் ''மனிதன் பயமுறுத் தினால்தான் பயப்படுவான், தெம்பு கூறினால் நம்பமாட்டான் என்கிறார். அதைப்போலவே பேய், பிசாசு இருக்கிறது என்று சொன்னால் நம்புவான், இல்லை என்று சொன்னால் நம்பமாட்டான்..'' என்று கூறினார்.

நூலைக் பெற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பேசுகையில், ''கவிஞர் வைரமுத்து மனம் உருகி நெகிழும் படி இந்த நூலை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் போல் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார்.'' 'போறாளே பொன்னுதாயி'' என்ற பாடலை எழுதிய போதே கருவாச்சி பிறந்துவிட்டது என்று கருதுகிறேன். கருவாச்சி மீது விழுகிற ஒவ்வொரு அடியும், நம் மீது விழுந்தது போல படைத்திருக்கிறார்..'' என்று சிலாகித்து பேசினார்.

இவ்விழாவில் முத்தையா, சாரதா நம்பி ஆரூரன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் வருகைத்தந்து சிறப்புரையாற்றினர். விழாவில் கலந்து கொண்டு பேசிய தவத்திரு பொன்னம்பல அடிகளார், ''கவிப்பேரரசு வைரமுத்து படைப்பான 'கருவாச்சி காவியத்தில்' ஒரு பட்டிக்காடு கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் போராட்டம் விளக்கப்படுகிறது. இன்றும் தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் 300 ஆண்டுகள் பின்தங்கிய வாழ்க்கையை பலர் வசிக்கின்றனர். குலைந்து போன ஒரு பண்பாட்டின் அடையாளமாக இந்த நூலை வைரமுத்து எழுதியிருக்கிறார். 'கருவாச்சி காவியம்' நெஞ்சை நெகிழ வைக்கும் காவியமாக விளங்குகிறது..'' என்று நூலுக்கு புகழாரம் சூட்டினார்.

விழாவில் பேசிய மரபின் முத்தையா ''கண்ணகிக்கு சிலை வைத்தது போல கருவாச்சிக்கும் சிலை வைக்க வேண்டும்'' என்று முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். தொடர்ந்து பேசிய முனைவர் சாரதா நம்பி ஆரூரன், ''கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய 'கருவாச்சி காவியம்' ஒரு பாமர பெண்ணின் வாழ்க்கை முறையை மிக தெளிவாக சொல்கிறது..'' என்று பேசினார்.

விழாவில் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்தும் ஐந்து பெண்களுக்கு வைரமுத்து சார்பில், தலா ரூ. 20 ஆயிரத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

விழா நாயகன் கவிஞர் வைரமுத்து பேசுகையில், ''முதல்வர் கையால் நூல் வெளியிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் விழா நடத்துகிறேன்... 'கருவாச்சி காவியம்' நூலைப் படித்தீர்களா என்று முதல்வரிடம் கேட்டேன். அதற்கு, ''பொதுவாக புத்தகங்களை காரில் போகும் போதும் ஓய்வாக இருக்கும் போதும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதும் படிப்பேன் ஆனால் உன்னுடைய புத்தகத்தை மட்டும் வீட்டில் கதவை மூடிக்கொண்டு தொடர்ச்சியாக படித்து முடித்தேன். ஏனென்றால் நான் அழுவதை யாரும் பார்த்துவிடக் கூடாது அல்லவா? என்று கூறினார். இதைவிட எனக்கு வேறு பரிசு என்ன வேண்டும்?'' என்றார்.

நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் முடிவு வரை அழகாக தொகுத்து வழங்கினார் கவிப் பேரரசின் மகன் கபிலன் வைரமுத்து.

'அறுபதுகளில்தான் கணிப்பொறியின் மவுஸ் கண்டறியப்பட்டது. ஆனால் அறுபதாண்டு களுக்கும் மேலாய் 'மவுசோடு' விளங்கும் முதல்வர் கணிப்பொறியாய்ச் செயல் படுகிறீர்கள் என்றும் ஐந்தாவது முறை நீங்கள் முதல்வராகியிருக்கிறீர்கள் இருந்தும் ஒருநாள் முதல்வர் போல் செயல்படத் துடிக்கிறீர்கள் என்றும் முதல்வரை கபிலன் வைரமுத்து பாராட்டி பேசியது சிறப்பு.

கேடிஸ்ரீ

© TamilOnline.com