சிகாகோ 'நிருத்யாஞ்சலி'யின் ஆண்டுவிழா
சிகாகோ நிருத்யாஞ்சலியின் இரண்டாவது ஆண்டு விழா லெமான்ட் கோவிலில் நவம்பர் 9ம் தேதியன்று கோலாகலமாக நடைபெற்றது. குரு சுஷ்மிதா அருண்குமார் அவர்களின் இயக்கத்தில் நடத்தப்பட்ட சுமார் 80 குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி இதன் முக்கிய அம்சமாகும்.

நிருத்யாஞ்சலி 1996ல் நான்கே குழந்தை களுடன் தொடங்கியது. இன்று ஏராளமான மாணவர் கள் இங்கு ஆர்வத்தோடு நடனம் பயில்வது இதன் வளர்ச்சிக்குச் சான்று.

ஆபோகி ராகசுலோகத் துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சி, அமிர்தவர்ஷிணியில் அன்னமாச்சாரியாரின் கீர்த்தனை யில் பொலிவடைந்தது. ஆரபியில் 'வந்தனம்', ஆனந்த பைரவியில் 'த்வமேவ சரணம்', ராகமாலிகையில் 'ஹப்தம்', பௌளியில் ' ஸ்ரீமன் நாராயண' என்று வகைவகையான ராகக் கீர்த்தனைகளுக்குக் குழந்தைகள் அமர்க்களமாக ஆடியது கண்ணுக்கும் காதுக்கும் விருந்து.

முத்தாய்ப்பாக அமைந்தது அடுத்துவந்த தசாவதார ராகமாலிகை. இதில் குரு சுஷ்மிதாவும் மாணவர்களுடன் சேர்ந்து ஆடிப் பிரமிக்க வைத்தார். பிரகலாதனாக ஆடிய சிறுமியும், அனிதா பதியும் அழகாக முகபாவத்துடன் ஆடினர். இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

அடுத்து ஆடிய ஸ்வாதி ரெட்டி இப்பள்ளியின் முதல் 'பட்டதாரி'. நாட்டியம் நன்றாகவே வருகிறது. தமிழ்க் கலைகளான கும்மி மற்றும் கோலாட்டம் இவற்றை எளிமைப்படுத்திச் சிறப்பாகச் செய்தார்கள். பிருந்தாவன சாரங்காவில் தில்லானாவும், குறிஞ்சியில் மங்களமும் தேன் விருந்து.

அத்தனைக் குழந்தைகளையும் நேர்த்தியாக ஆட்டுவித்த சுஷ்மிதாவைப் பாராட்டியே தீரவேண்டும். இவரது குரு நடன பிதாமகர் பத்மஸ்ரீ அடையாறு லக்ஷ்மணன் பார்த்திருந்தால் மிகவும் பெருமிதப்பட்டிருப்பார்.

ஜோலியட் ரகு

© TamilOnline.com