சிகாகோ தமிழ்ச்சங்கமும், பாலாஜி கோவிலும் அக்டோபர் 25ம் தேதியன்று இணைந்து வழங்கிய நாட்டிய தாரகை நடிகை ஷோபனா மற்றும் குழுவினரின் நடன நிகழ்ச்சி எல்லோராலும் பேசப் பட்டதாக இருந்தது. நிகழ்ச்சி நடந்த இடம் பாலாஜி கோவில், அரோரா.
நாட்டை ராகத்தோடு விறுவிறுப்பாகத் துவங்கிய நிகழ்ச்சி, சண்முகப்ரியாவில் லால்குடியின் வர்ணத்தில் களைகட்டத் தொடங்கியது. இந்த வர்ணத்தில் மஹா விஷ்ணுவின் லீலைகளைப் பாடியதோடு, பக்த பிரகலாதன், பக்த குசேலர் மற்றும் மாபலியின் புராண வரலாற்றை ஆடி அதிசயக்க வைத்தார்கள். அடுத்து வந்த ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதா கிருஷ்ணனுடன் கோபிகைகள் கூடி ஆடி மெய்மறக்கச் செய்தார்கள். இதில் உடை மற்றும் காட்சி அமைப்புக்கு ஒரு பலமான சபாஷ்.
அடுத்த ஆபேரியில் அமைந்த பாடல் ராஜேஷ்வைத்யாவின் வீணையில் மிளிர்ந்தது. இந்தப் பாடலுக்கு குருவுடன் போட்டி போட்டு நடனமாடிய அர்ச்சனா, ஷைலஜா மற்றும் அஸ்வினிக்கு நல்ல எதிர்காலம் உண்டு. தொடர்ந்த கிராமிய நடனத்தில் வளையல் வியாபாரி, பாம்பாட்டி, பயாஸ் கோப்புக்காரர், பேய் விரட்டுபவர் என்று பலவேஷங்கள் போட்டு, வந்திருந்தோரைக் களிப்பில் ஆழ்த்தினர். அதிலும் மகுடிப்பாட்டு பாடும் போது, சபையினர் மகுடிக்கு மயங்கிய நாகம்தான் போங்கள்!
கடைசியாக சரசாங்கியில் அமைந்த fusion நாட்டியத்திற்கு இசை அமைத்து வழங்கிய ராஜேஷ் வைத்யா மிகவும் பாராட்டுக்குரியவர். இசைப் பாரம்பரியத்தில் வந்த இவர் கடம் 'மேஸ்ட்ரோ' வைத்யநாதனின் புதல்வராவார். இந்த இசைக்கு அற்புதமான அபிநயம் செய்தனர் ஷோபனா குழுவினர்.
நிகழ்ச்சிக்குப் பக்கபலமாய் இருந்த கே. சிவராமன் (மிருதங்கம்), என். ராம கிருஷ்ணன் (கஞ்சிரா), ராஜேஷ் வைத்யா (வீணை) மற்றும் நந்தினி (வாய்ப்பாட்டு) ஆகியோர் வந்திருந்தோரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார்கள். இந்தியாவி லிருந்து இதற்காக வந்திருந்த 'டெக்னிகல் சூபர்வைசர்' முருகன் அசத்திவிட்டார்.
கட்டுக்கடங்காத கூட்டத்தினால் சில சிரமங்கள் ஏற்பட்ட போதிலும், நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்திக்கொடுத்த தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் பாலாஜி கோவிலைச் சேர்ந்த சாரதா வெங்கட்ராமன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஜோலியட் ரகு |