கர்நாடக இசைப் பயிலரங்கம்
இந்திய இசை மற்றும் நடனத்தை வளர்க்கும் 'சுருதி' அமைப்பின் சார்பில் கீதா பென்னட் மற்றும் திருச்சி சங்கரன் ஆகியோர் கர்நாடக இசைப் பயிலரங்கத்தை அக்டோபர் 11ஆம் தேதியன்று பென்சில்வேனியாவின் வில்லநோவா பல்கலைக்கழகத்தில் நடத்தினர்.

காலை நிகழ்ச்சியில் கீதா பென்னட் இந்திய இசையின் வரலாறு, மேளகர்த்தா ராகங்களின் அமைப்பு ஆகியன பற்றிப் பேசினார். ஏழாவது சுவரமான 'நி'யை எடுத்துக்கொண்டு சுருட்டி, ஆனந்த பைரவி ஆகியவற்றில் அது பயின்றுவரும் விதத்தை விளக்கினார். சுத்தசாவேரியில் 'தரிணி தெலுசுகோண்ட்டி'யின் மூலம் சங்கதிகளின் அடிப்படையை விவரித்தார்.

வீணையில் எவ்வாறு குரலின் நளினங்களை உண்டாக்கலாம் என அவர் விளக்கியது அற்புதமாக இருந்தது. கல்யாணி ராகத்தில் சிலவற்றைப் பாடிக்காட்டி அதை அப்படியே வீணையில் வாசித்தும் காட்டினார். அடுத்து அவர் வழங்கிய வீணைக் கச்சேரிக்கு டாக்டர் டேவிட் நெல்சன் மிருதங்கம் வாசித்தார்.

பிற்பகல் நிகழ்ச்சியில் திருச்சி சங்கரன் தாளக்கட்டுமானம் ஏற்பட்ட விதத்தை விவரித்தார். 1960ல் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயருடன் வாசித்த ஒரு ஒலிநாடாவைப் போட்டுக் காட்டி சங்கதிகள் பற்றியும் விளக்கினார். ஆதிதாளத்தில் அமைந்த தனியை வாசித்துக் காண்பித்ததும், 21 அக்ஷரங்களில் அமைந்த திருப்புகழ் தாளத்தின் ஒலி நாடாவும் பிரமிக்க வைத்தன.

சுருதியின் தலைவர் விஜி சுவாமிநாதன் அவர்களின் உரையோடு நிகழ்ச்சி நிறைவுற்றது.

'சுருதி' அமைப்பு

© TamilOnline.com