முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
சிகாகோவிலிருந்து 3 மணி நேரத்தில், அயோவா நகரிலிருந்து 50 மணித்துளிகளில் அடையக்கூடிய அமைதிநிறை அழகியதோர் அமெரிக்கக் கிராமம் மஸ்கடீன்! மக்கள் தொகை சுமார் 25,000 மட்டுமே. இருப்பினும் தக்காளி சட்டினியாகிய Heinz ketchup நிறுவனம் உட்பட ஐந்து பிரபல நிறுவனங்கள் இங்குள்ளன. 'டாம் சாயர்' புகழ் மார்க் ட்வெயின் இந்நகரில் வாழ்ந்தவர். அமெரிக்கப் பெருநதியான மிஸிஸிபி இங்கு கரைபுரண்டு ஓடுகிறது. மஸ்கடீனை 'மிசிசிபியின் முத்து' என்கிறார்கள். இங்கு தயாராகும் கிளிஞ்சல் பட்டன்கள் 19-20ம் நூற்றாண்டுகளில் மிகப் பிரபலம்.

நவம்பர் 8ம் தேதி நம்மவரது குடும்பங்கள் இணைந்து முதன்முதலாகக் கொண்டாடிய இந்தியப் பண்பாட்டுத் திருவிழாவாகத் 'தீபாவளித்திருநாள்' அமைந்தது. மஸ்கடீன் உயர்நிலைப்பள்ளியின் ஒரு பெரிய அரங்கம். தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோரணங்களாலும், கோலங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பன்னீர், சந்தனம் மலர்களுடன் வந்தோரை வரவேற்றனர்.

Mouline, Davenport, Rock Island, Betten Dorf என்ற நான்கு ஊர்கள் இணைந்தது Quadcity. இந்தக் குவாட்சிடி தமிழ் அமைப்பு நடத்திய இந்த விழாவில் அயோவாநகர், பெர்லிங்ன் மற்றும் பல இடங்களிலிருந்தும் தமிழ்க் குடும்பங்கள் மட்டுமல்ல பிறமொழி பேசும் பல இந்தியக் குடும்பங்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

குறையொன்றுமில்லை என்ற இறை வணக்கத்தோடு இவ்விழா தொடங்கியது. பால்மணம் மாறாக் குழந்தைகளின் வாயில் முப்பாலான திருக்குறள் நன்கு உச்சரிக்கப்பட்டு ஆங்கில மொழி பெயர்ப்பும் தரப்பட்டது. மஸ்கடீனின் சிறப்பு பற்றிய பேச்சு, தீபாவளியின் காரணம் என்று வடக்கேயும் தெற்கேயும் இந்தியாவில் வழங்கிவரும் புராணக்கதைகள், குழந்தைகள் வழங்கிய பியோனோ இசை, சுலோகங்கள், நடனம் ஆகியவை மனதைக் கொள்ளை கொண்டன. இதமான கஜல் பாடல்களும் ஒலித்தன.

அடுத்து வரும் முக்கிய பண்டிகையாகிய கார்த்திகை தீபமும், திருவண்ணாமலை கிரிவலமும் பற்றிய விளக்கம் இந்தியாவின் பிறமாநிலத்தவருக்கும், குழந்தைகளுக்கும் அருணாசலத்தின் பெருமை அறிய உதவியது.

குடும்பத் தலைவியர் தம் கைவண்ணத்தை செவிக்குணவு முடியுமுன், முடிந்தபின் என மாலைச் சிற்றுண்டியாகவும் இரவு விருந்தாகவும் அறுசுவையுடன் அமைத்து விட்டனர். பரிசுபெற்ற குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி. மியூசிகல் சேரில் குழந்தைகளும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த விழாவின் ஏற்பாடுகளை நண்பர் குழாத்தின் துணையோடு சிறப்பாகச் செய்து, டாக்டர் நாகராஜன், திருமதி பத்மா நாகராஜன், டாக்டர் ஜோதி சங்கர், டாக்டர் ஜோதி ஆகியோர் எல்லோரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.

Dr. கிருஷ்ணவேணி அருணாச்சலம்

© TamilOnline.com