தீஷிதர் ஆராதனை
தீபாவளித் திருநாளன்று இறைவனுடன் இரண்டறக் கலந்த சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதருக்கு அண்மையில் சிவவிஷ்ணு ஆலயத்தின் ஆதரவில் ஆராதனை விழா நடைபெற்றது.

நாதோபாசனை (இசை வழிபாடு) நலன் எல்லாம் தரும் என்று நம்பிய தீட்சிதர் தனக்குச் சொந்தமான சிறிது நிலத்தையும் தானமாகக் கொடுத்துவிட்டு, பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று அந்தத் தெய்வங்களைப் பற்றிக் கீர்த்தனைகள் புனைந்தார்.

பல காலமாக வளைகுடா பகுதியில் வசித்துவரும் இசைக்கலைஞர்களாகிய ஸ்ரீலக்ஷ்மி கோபாலவேணு, கலாஜயம், வாணி ரத்னம், கல்பகம் கெளசிக் ஆகியவர்கள் இணைந்து சிவ விஷ்ணு ஆலயத்தில் அமர்ந்திருக்கும் அனைத்து கடவுளர் பெயரிலும் அமைந்த பல கிருதிகளைப் பாடி ஆராதனையை செய்தனர். குறிப்பாக தீட்சிதரது முதல் கிருதியாகிய 'ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி', மணிப்பிரவாள கிருதி ஆகியவை இடம் பெற்றன. நடராஜனும் பார்வதி சங்கரும் வயலினிலும், சாயி கிருஷ்ணன் மிருதங்கத்திலும் உடன் வாசித்தனர்.

ஆங்கில மெட்டில் அம்பிகையைக் குறித்த பாடலை ஆறு வயதுச் சிறுமி ஸ்வசி (கல்பகம் கெளசிக் மாணவி) தன் மழலைக் குரலில் பாடியது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல இசைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவ மாணவியரும் கிருதிகள் பாடி ஆராதனையில் கலந்து கொண்டார்கள்.

'ஸ்ரீ விஸ்வநாதம்' என்ற ராகமாலிகையை ஸ்ரீகாந்த் சாயி வீணையில் வாசித்தார். அவருடன் வீணையில் அகிலேஷ், வயலினில் சாந்தி, மிருதங்கத்தில் நாகராஜன், புல்லாங்குழலில் ரஞ்சனி, கஞ்சிராவில் நடராஜன் ஆகியோர் சேர்ந்து வாசித்தனர். சுமார் 6 மணி நேரம் நடந்த ஆராதனை விழாவின் வரவேற்புரையில் ஸ்ரீ ரத்னம் அவர்கள் தீட்சிதருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கூறியது பயனுள்ளதாக இருந்தது. ஸ்ரீராகத்தில் அமைந்த மங்களத்தைக் கலாவும் கல்பகமும் இணைந்து பாட விழா இனிதே நிறைவு பெற்றது.

கற்பகம் கௌசிக்

© TamilOnline.com