சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சாண்டாகிளாரா கன்வ¦ன்ஷன் சென்டர் கலையரங்கத்தில் செப்டம்பர் 20, 2003, சனிக்கிழமையன்று பல்லவி ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம் ரசிகர்களின் கைதட்டலுடன் துவங்கியது.
முதல்படியாக கோவில் பிரகாரங்களில் ஆண்டவன் விக்ரகம் ஊர்வலம் வரும்போது பாடும் 'மல்லாரி'க்கு தக்கப்படி அவர் லாகவமாக ஆடின நடனமும், மேடைக்குள் நுழைந்ததிலிருந்து நிகழ்ச்சி முடியும் வரை பல்லவி மேற்கொண்ட அரைமண்டி பாணியும் வெகு அழகு. தொடர்ந்து ஆதிசங்கரரின் செளந்தரிய லஹரியிலிந்து 'சிவ சிருங்காரார்தரா' மற்றும் 'விபானச்யாகாயந்தி' என்ற இரண்டு ஸ்லோகங்களுக்கும் அவர் ஆடியபோது காட்டிய நேர்த்தி அவருக்கு வயது பதினாறுதான் என்பதை நம்பமுடியாமல் செய்தது. இந்த ஸ்லோகங்களுக்குப் பல்லவியின் தாத்தா சங்கீத வித்வான் ஆர். ராஜகோபாலன் இசையமைத்திருந்தார்.
அடுத்து வந்த வர்ணத்தில், வெங்கட முடையானின் அபாரப் புகழையும், மனிதகுலம் எப்படித் திரண்டு அவர் தரிசனத்திற்காக திருமலையை நோக்கி போகிறது என்பதையும், கண்ணனுடைய கீதாபேதசத்தையும், விஸ்வரூப தரிசனத் தையும், மற்றும் ஆண்டவன் எப்படி வாமன அவதாரம் பூண்டு எப்படி மஹாபலியின் அரக்கத்தனத்தை அடக்கினார் என்ப தையும் தத்ரூபமாக அபிநயித்துக் காண்பித்தார்.
தொடர்ந்து வந்த 'ஜாவளி'யில் ஒரு கிராமத்துக் கன்னி, தான் ஒரு ஆடவனை அடிக்கடி சந்திக்கும் அவதூற்றைக் கேட்டு எப்படியெல்லாம் மனமுடைந்து சங்கடப்படுகிறாள் என்பதை நுண்மையான முகபாவத்துடன் சித்திரித்தார். நடராஜர் ஆடுவதைப் பார்த்து பக்தர்கள் எப்படி வியப்புண்டார்கள் என்பதையும், தெருவில் அவர் ஊர்வலம் வரும் கண்கொள்ளாக் காட்சியையும் 'ஆடிக்கொண்டார்' என்ற பாடலுக்காக பல்லவி அபிநயிக்கையில் சிற்றம்பலமே நம் கண்முன் தோன்றியது.
கண்ணன் குழந்தையாக இருக்கும் பொழுது உறங்க வைக்க, தாய் யசோதை பாடும் 'அச்சுதானந்தா' என்கிற கிருதிக்கு ஒளிந்துகொள்ள முயலும் குட்டி கிருஷ்ணனை கையில் பாலுடன் அணுகி எப்படி அன்புடன் அழைத்தாள் என்பதைப் பல்லவி அற்புதமாக நடித்து காண்பித்தார்.
அவரது முழுத்திறனை வெளிப்படுத்திய 'தில்லானா', நிகழ்ச்சியின் மகுடமாகவே அமைந்தது. நிகழ்ச்சி முழுவதுமே பல்லவியின் அரைமண்டி, புன்னகை மாறா முகம், பேசும் கண்கள், கால்களின் லாகவம், நடிக்கும் விரல்கள் இவை அவரது கலைக்கு மெருகூட்டின. அருணகிரிநாதரின் திருப்புகழுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நான்கு வயதிலிருந்தே குரு 'எழிலிசை நாட்டிய ரூபா' நிருபமா வைத்தியநாதன் நடத்தும் சங்கல்பா நடனப் பள்ளியில் பல்லவி பயின்று வருகிறார். தவிர தாய் லதா ஸ்ரீராமிடமும், சென்னையில் வசிக்கும் தாத்தாவும் கோடை விடுமுறையில் இசைப் பயின்ற பல்லவி இங்கு விரிகுடாப் பகுதியிலும் சென்னையிலும் மேடைக் கச்சேரி செய்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு நிருபமா நட்டுவாங்கம் செய்ய, லதா ஸ்ரீராமும் அவரது 13 வயது மகன் சித்தார்த்தும் இசை வழங்கினர். நாராயணன் மிருதங்கமும், சாந்தி நாராயணன் வயலினும் வாசித்து மெரு கூட்டினர்.
சித்தார்த்தின் கானமழை சகோதரி பல்லவியின் பரதநாட்டிய அரங்கேற்றத் திற்குச் சிறப்புச் சேர்த்தது.
சுப்ரமண்ய அய்யர் |