பண்டைத் தமிழர்கள் “காட்டை அழித்து நாடாக்கினாய்” என்று தம் மன்னர்களைப் போற்றினார்கள். அமெரிக்காவும் காட்டுப் பகுதிகளை அழித்து நாகரிக நாட்டுப் பகுதியாக்குவதை ஒரு கலையாகவே வளர்த்து வருகிறது. தென் கலி·போர்னியாவின் திட்டமிட்ட குடியிருப்புகள், வடிவமைத்த நகர்ப்புறங்கள், அந்தக் கலைக்கு இலக்கணம் வகுப்பவை. பல நூறு மைல்களுக்கு அப்பாலிருக்கும் ஆறுகளிலிருந்து மேடு பள்ளங்கள், பாலைவனங்களைக் கடந்து குடி நீரைக் கொண்டுவரும் மாபெரும் கால்வாய்களும், அணைகளும் மனித ஆற்றலைப் பறை சாற்றுபவை. ஆனால், இயற்கை அன்னை தன் வல்லமையை அவ்வப்போது நினைவூட்டத் தவறுவதில்லை.
கலி·போர்னியாவில் பல ஆண்டுகள் வாழ்பவர்களுக்கு அக்டோபர் ஒரு மிரட்சி தரும் மாதம். இந்த மாதத்தில் இயற்கை அன்னை தன் சீற்றத்தின் அறிகுறிகளைப் பல வடிவங்களில் காட்டுவாள். ஈரமான காற்று ஓய்ந்து விடும். உள்நாட்டுப் பாலைவனத்திலிருந்து வறண்ட அனல் காற்று பேய்க்காற்றாய் உருமாறிக் காடு மலையெல்லாம் தாண்டி வந்து ஊளையிடும். அகன்ற சாலைகளின் இரு புறமும் பனை மரங்கள் அணி வகுக்கும் லாஸ் ஏஞ்சலஸ் நகர்ப் பகுதிகள் இந்த 'சான்டா ஆனா' பேய்க்காற்றில் மூச்சுத் திணறும். மலைச் சாரல் பகுதிகள், உலர்ந்த சருகுகளில் தீப்பொறி பறந்து விடுமோ என்று நடுங்கி நிற்கும். 'காட்டுத் தீ' பருவம் வந்து விட்டது என்று மக்களும் எச்சரிக்கையாவார்கள்.
காட்டில்தான் தீப் பிடிக்கிறது என்றாலும், பெரும்பாலும் மனிதர்களின் தீப்பொறிதான் பெருந்தீயின் பிறப்புக்குக் காரணம். சான்டா ஆனா பேய்க்காற்று மனித மனத்திலிருந்தும் ஈரத்தை உறிஞ்சி விடுகிறதோ! நெஞ்சில் ஈரமற்ற சிலர் கொளுத்தி வைக்கும் சிறு தீ, சான்டா ஆனாவின் வலிமையினால் பெருந்தீயாக மாறிவிடுகிறது. அடர்ந்த காடுகள் சில நிமிடங்களில் கருகிச் சாம்பலாகி விடுகின்றன. காட்டுத் தீ மலைகள், பள்ளத் தாக்குகளைக் கடந்து, மலைச் சாரல் குடியிருப்புகளை நோக்கிப் படையெடுக்கிறது. பெருஞ்சாலைகளாலும், தடுப்பு அணைகளாலும், தீயணைப்புப் படைவீரர்களாலும் பெருந்தீயின் வேகத்தை மட்டும்தான் குறைக்க முடிகிறது.
காட்டாறு போல் தீ ஆறாய்ப் பெருகி நகர்ப் புறங்களின் வீடுகளையும் தோட்டங்களையும் அழித்து ஆர்ப்பரிப்பதைப் பார்த்தவர்கள் இயற்கை அன்னையின் சீற்றத்தின் முன்னே சிறுத்து நடுங்குவார்கள். இது அறிவிக்காமல் வந்து அரை நொடியில் நாட்டைத் தவிடு பொடியாக்கும் பூகம்பமல்ல. “பேயவள் காண் எங்கள் அன்னை” என்று கவிஞர்கள் வணங்கும் பெருந்தீ. வானத்தைக் கருமையாக்கி, சாம்பல் மழையாய்ப் பொழிய, கொழுந்து விட்டு எரியும் ஆயிரக் கணக்கான நாக்குகளோடு ஆறாய்ப் பெருகிவருவது இந்தக் காட்டுத் தீ.
காட்டுத் தீ, நிலநடுக்கம், சூறாவளி, பனிப்புயல், பெருவெள்ளம், என்று இயற்கை சீறும்போதுதான் காட்டை அழித்து அமைத்த நாட்டில் வாழும் நாகரீக மக்கள் தங்களுக்கு உண்மையிலேயே தேவை என்ன என்பதை உணரத் தொடங்குகிறார்கள். உற்றார், உறவினர், நண்பர்கள், செல்லப் பிராணிகள், கடிதங்கள், படங்கள் என்று இழக்கக்கூடாது என நாம் அக்கறைப் படுபவை மிகக் குறைவு. இந்தச் சமயத்தில் முன் பின் தெரியாத அந்நியர்கூட ஒருவருக்கொருவர் உதவி செய்வதைப் பார்க்கிறோம். தீயின் நடனம் முடிந்த பின்னர், சாம்பலை அகற்றி அதே இடத்தில் வீடு கட்டுவோம். நிலநடுக்கத்தில் இடிந்த பாலத்தை மீண்டும் அதே இடத்தில் முன்னதை விட வலிமையாகக் கட்டுவோம். வெள்ளம் வடிந்த பின்னால், சற்று உயரமாக அதே இடத்தில் வீட்டைக் கட்டுவோம். அடுத்த முறை இயற்கையின் சீற்றத்தைத் தணிப்பது எப்படி என்று யோசிக்கத் தொடங்கி விடுவோம். எதையும் தாங்கும் இந்த மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் இருந்தாலும், அமெரிக்க மண்ணில் இது ஆழமாகவே பதிந்திருக்கிறது.
லூயீசியானா மாநிலத்தின் ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சிப் பழமைவாதி இந்திய அமெரிக்கர் 'பாபி' ஜிண்டால் வெகு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார். இந்தத் தேர்தலில் தோற்றாலும், ஒளிமயமான எதிர்காலம் இவருக்குக் காத்திருக்கிறது. இந்தியக் கனேடியர்கள் அரசியலில் கண்டு வரும் வெற்றிக்கு இணையாக இந்திய அமெரிக்கர்களும் வளர முடியும். வளர வேண்டும்.
அமெரிக்கா அக்கறைப்பட வேண்டிய செய்திகள் எத்தனையோ இருக்கின்றன. ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர்கள் தொடர்ந்து ஒளிவு மறைவான தாக்குதல்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்கிறது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், என்று பல துறைகள் பெருஞ்சிக்கல்களை எதிர் நோக்கியிருக்கின்றன. வரும் குடியரசுத் தலைவர் தேர்தல் இந்தச் சிக்கல்களைப் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆனால், தொலைக்காட்சியும், பிற ஊடகங்களும், மைக்கேல் ஜாக்சன், ஸ்காட் பீட்டர்சன் வழக்குகளைப் பற்றிய பரபரப்பான செய்திகளுக்கு முக்கிய இடம் கொடுத்து, மற்ற தேவையான செய்திகளைப் புறக்கணித்து வருகிறார்கள். வாசகர்கள், பார்ப்பவர்கள் பொழுது போக்குச் செய்திகளைத்தான் விரும்புகிறார்கள் என்ற சாக்கில் மற்ற எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்து இந்த வழக்குகளைப் பெரிதுபடுத்தப் போகிறார்கள். வாக்காளர்கள் இந்தக் கழைக்கூத்து ஆட்டத்தைப் பார்த்துக் கவனத்தைச் சிதற விடக் கூடாது.
தென்றல் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல தரப்பட்ட வாசகர்களுக்கான புதிய பகுதிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை ஊக்குவிக்கிறோம். தென்றலுக்கு அனுப்பும் படைப்புகளைக் கணினியில் தகுதரக் குறியீட்டில் (TSCII 1.7) முரசு அஞ்சல் (www.murasu.com) அல்லது எ-கலப்பை (http://www.tamil.net/newtamil/ekalappai_1.html) மூலம் எழுதி மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்புங்கள். பல புதிய பகுதிகளையும் வரும் ஆண்டில் அறிமுகப் படுத்த எண்ணியுள்ளோம். நீங்கள் தென்றலில் வேறு ஏதேனும் புதிய பகுதி இடம் பெற வேண்டும் என்று எண்ணினால், எங்களுக்கு எழுதுங்கள். ஆசிரியர் குழு உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. வாசகர்களுக்கு எங்கள் கார்த்திகைத் திருநாள், கிறிஸ்துமஸ், மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
மணி மு. மணிவண்ணன் |