டிசம்பர் 2003 : வாசகர்கடிதம்
அம்புஜவல்லியின் 'கிரீன்கார்டு' சிறுகதை இன்றைய கிராமங்களின் அவலநிலையை அழகுற 'கிரீன்' விளக்குப் போட்டுக் காட்டியது. கதைநாயகர் எடுத்த முடிவு போலவே இந்திய கிராமங்களை விட்டுவந்தவர்களும், பச்சை அட்டையாளர்களும் முடிவு எடுத்தால் கிராமங்களும் முன்னேறும். காந்திஜியின் கூற்றுப்படி ஒருநாட்டின் முன்னேற்றம் கிராமங்களில் தொடங்கவேண்டும்.

கோம்ஸ் கணபதியின் கவிதைப்பந்தல் வழியே எங்கள் கண்ணீர் மழை பொழிந்தது. ஆசானை மதியாத இக்காலத்தில் இப்படியொரு சீடனா என வியப்புற்றோம். அன்புள்ள சினேகிதியே பகுதியில் வந்த சகோதரியின் உடல்நிலை நன்றாகவே தேறி குடும்பத்தாருடன் குதூகலிக்க எங்களைப் போன்ற ஆயிரமாயிரம் 'தென்றல்' வாசகர்களின் கூட்டுப் பிரார்த்தனை கண்டிப்பாகப் பலிக்கும்.

குறுக்கெழுத்துப்புதிர் உண்மையிலேயே ஒரு புரியாத புதிர்தான்.

சாயா விஸ்வநாதன்.

******


தென்றல் அக்டோபர் இதழில் அருணா சாய்ராமின் நேர்காணல் சுவையாக இருந்தது. ஆனால் அதில் 'காலிங்க நர்தன தில்லானா' என்றிருந்தது. 'காளிங்க நர்த்தன தில்லானா' என்பதே சரி.

N.R. வெங்கடராமன்

******


மணிவண்ணன் அவர்கள் 25 ஆண்டுக்காலம் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தும் தமிழகம் சென்ற போது தூயதமிழில் பேசியது போற்றுதற்குரிய செயலாகும். ''தமிழுக்குத் தமிழ்நாட்டில் மதிப்பில்லை'' என்ற வரிகள் முற்றிலும் உண்மை. ஏனெனில் சங்கம் வளர்த்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு, தமிழ்நாட்டில் இருந்தபோதிலும் தமிழில் பேசுவதையும், தமிழில் எழுதுவதையும் தரக்குறைவு என்றெண்ணி நுனிநாக்கு ஆங்கிலமும், மேல்நாட்டு நாகரீக மோகமும் கொண்டு அலையும் நம் இளம் சமுதாயத் தினரை எண்ணி மனவருத்தம் நிறைய உண்டு.

இனியேனும் தவறை உணர்ந்து தாய்மொழியில் பேசுவார்களா நம் இளம் தலைமுறையினர்?

நங்கை முருகேசன்,
சிகாகோ

******


நானும் என் மனைவியும் இங்கு செப்டம்பர் 2003இல் வந்ததிலிருந்து தென்றல் இதழைத் தவறாமல் படித்து வருகிறோம். நவம்பர் மாத தென்றல் இதழில் கிருஷ்ணன் நம்பி பற்றிய கட்டுரையும், டாக்டர் சத்யா ராமஸ்வாமியின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது.

முனைவர் நன்னனுடன் சந்திப்பு பல உண்மைகளைச் சொல்கிறது. நன்னன் சொல்வதுபோல் என்னாலும் பல மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் காலப்போக்கில் நாம் அவைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். உதவும் கரங்கள் வித்தியாகர் அவர்களுடன் உரையாடலும் பல அரிய உண்மைகளைச் சொன்னது. பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் பணமும் கொடுத்து அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

மணி.மு. மணிவண்ணன் அவர்களின் 'புழக்கடைப்பக்கம்' மிகவும் சுவையாக இருக்கிறது.

இராமானுஜம்,
டெட்ராயிட், மிஷிகன்

******


தென்றல் பத்திரிகையில் வரும் கவிதைகளைக் கண்டு மிகவும் மகிழ்ந்து பாராட்டுகிறேன். அயல்நாட்டிலும் வீசும், தாய்மண் வாசனையில் கரைந்து ''என்னே நம்மவர் நேர்த்தி!'' என இன்புறுகிறேன்.

சீ. நாராயணன்

******


இந்த நாட்டில் இருக்கும் எல்லா தமிழ் வாசகர்களுக்கும் ஏற்றதொரு இதழைப் பதிப்பிக்கும் உங்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அதிலே ஆன்மீகத்தையும் சேர்த்துள்ளது மிக நல்லது. பரபரப்பான இந்த வாழ்க்கைக்கு நடுவே ஆன்மீகத்தை வாசிக்கும் ஈடுபாட்டையும், பொறுமையையும் ஏற்படுத்துவது மிகக் கடினம்.

சாந்தா கிருஷ்ணமூர்த்தியின் வெகு நன்கு ஆய்ந்து எழுதப்பட்ட 'சத்ய தர்மம்' கட்டுரையைப் படித்தபின் ஒவ்வொரு வாசகரும் அதை வாசிப்பதோடு நின்றுவிடாமல் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டுமென நான் எண்ணுகிறேன். அவரை சுகி சிவம், கீரன், கிருபானந்த வாரியார் இவர்களோடு ஒப்பிட்டால் அது மிகையல்ல.

இந்தத் தரத்திலான கட்டுரைகளை மேலும் நிறைய வெளியிடுங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.

பாரு

******


எங்கள் அருமைத் தென்றலுக்கு மூன்றாவது ஆண்டு நிறைவு. நினைக்கவே பெருமிதமாக இருக்கிறது. வயது தான் மூன்றே தவிர அதன் செயலாற்றலும், பொறுப்புணர்வும் பல்லாண்டுகளாக நடந்துவரும் பத்திரிகைகள் சிலவற்றிலும் கூடக் காணக் கிடைக்காதவை. விரிகுடாவில் மட்டுமின்றி அமெரிக்காவின் மற்ற மாநிலங் களிலும் தமிழரென்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் பெருமையுடன் படித்து மகிழும் பத்திரிகையாக ஆகிவிட்டது தென்றல்.

தமிழ் நாட்டுப் பிரபலங்களின் பேட்டிகளுடன் புலம்பெயர்ந்து தம் திறமையால் முன்னேறி நம் நாட்டின் பெருமையை இங்கும் நிலைநாட்டி வரும் நம் மண்ணின் மக்களையும் பேட்டி கண்டு அவர்தம் வெற்றி வரலாறுகளை வெளியிடுவதன் மூலம் சாதனைக் கனியைக் குறிவைத்து உழைக்கும் இளைய சமுதாயத்திற்கும் வழிகாட்டி ஊக்குவிக்கிறது எனில் மிகையல்ல.

தென்றலே! உனக்கு வாய்த்த அருமையான ஆசிரியர் குழாத்தின் மகிமையினால் நீ பல்லாண்டுகள் வளர்ந்து மேன்மேலும் சிறப்பெய்தி அமெரிக்காவாழ் தமிழர்கள் யாவருக்கும் மகிழ்வூட்டுவாயாக.

அகத்தியனின் தென்தமிழை அமெரிக்க நன்னாட்டில்
மிகச்சிறக்க சிறைவிரித்துச் செயலாற்றிப் - புகழேந்தி
சீதக் களபமென மணம்பரப்பும் தென்றலே
போதமுடன் வாழியவே நீடு.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே

******


தமிழறிஞர் நன்னன் அவர்களின் உரையை நேரில் கேட்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திய 'நேர்முகம்' அருமை.

"இன்றைக்கு இங்கு இருக்கின்ற குறைபாடுகளுக் கெல்லாம் காரணம் யாருக்கும் நாட்டைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ உணர்வு இல்லை" என்ற அவரது அவலக்குரல், கண்ணிருந்தும் குருடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய், நாட்டு நடப்புகளைக் குமுறலுடனும், இயலாமையுடனும் பார்த்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் எதிரொலி!

நன்னன் போன்ற முதுபெரும் தமிழறிஞர்கள் உருவாக்கியுள்ள தமிழ்ப் பயிற்சிமுறை ஒலி-ஒளிப் பேழைகளை உலகெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் அவ்வப் பகுதியில் வாழும் இளந்தலைமுறைத் தமிழர்களிடையே பரப்பினால் முறையான தமிழோசை உலகெங்கும் ஒலிக்க வழிசெய்யும்.

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நன்னன் அவர்களிடம் தமிழில் உச்சரிக்கப் பயிற்சி எடுத்துக்கொண்டால் தமிழன்னை மகிழ்வாள்!

வாசிப்பவர் ஒவ்வொருவரும் நேசிக்கும் வகையில் இனிய பல பகுதிகளைத் தாங்கி, மீண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் தமிழ்த் 'தென்றலை' அமெரிக்க மண்ணில் உலாவரச் செய்யும் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் குழுவுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

இதழின் ஒவ்வொரு அங்குலமும் தங்க நகைபோல் ஜொலிக்கிறது என்ற மதிப்புரை 'தென்றலு'க்கு மிகவும் பொருந்தும்.

சென்னிமலை பி. சண்முகம்,
நியூயார்க் நகர்

******

© TamilOnline.com