வேலை நிறுத்தமும், பணி நீக்கமும்
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் தமிழக அரசின் எஸ்மா என்கிற இருப்பு கரத்தால் ஒடுக்கப்பட்டு பேராட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

பின் விசாரணைக்குழு எல்லோரிடமும் பேசியபின் கொடுத்துள்ள அறிக்கையில், தலைமைச்செயலகம் மற்றும் சென்னையில் உள்ள அரசு அலுவலக ஊழியர்களில் 2,162 பேருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு கிடையாது. 56 பேருக்கு ஒரு நிலை பதவி இறக்கம், 587 பேர் பணிநீக்கம், 132 பேரின் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அரசுஊழியர் சங்க நிர்வாகிகள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை அறிந்தவுடன் இரண்டு பெண் ஊழியர்கள் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களின் சார்பில் 'ஜேக்டோ-ஜியோ' அமைப்புத் தலைவர்கள் தலைமைச் செயலர் லட்சுமி பிரானேஷை சந்தித்துப் பணி நீக்கம் செய்தவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதற்கிடையில் வேலைநிறுத்தத் தடைக்கான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற மனு மீதான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com