"மாதங்களில் நான் மார்கழி" என்று பன்னிரு மாதங்களிலும் மார்கழி மாதத்திற்கு ஏற்றமளித்துள்ளார் பகவான் கண்ணன் தம் கீதையில். இதனையே கோதை நாச்சியாரும் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" என்று எதிரொலிக்கின்றாள். டிசம்பர் மாதத்தின் இடையே தொடங்கும் மார்கழி மாதம் நம்முள் ஆன்மீக சிந்தனைகளைப் பிறப்பிக்கிறது. இம்மாதம் தேவர்களின் விடியற்காலை என நம்பப்படுவதால் ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்க வாசகரின் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி என்று சைவ வைணவ பேதமின்றி இறைவனைத் துயிலெழுப்பும் சாக்கில் அஞ்ஞான இருளினின்று ஆத்மாவை இறையுணர்வு என்னும் விடியலைக் காண அழைக்கும் பாடல்கள் எங்கும் ஒலிக்கப் பொழுது விடிகிறது.
வைணவர்களால் பதிவிரதை ஆழ்வார் எனத் துதிக்கப் படுபவரும் விப்ரநாராயணர் என்னும் இயற்பெயர் கொண்டவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்ததும் இம்மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆகும். திருப்பள்ளியெழுச்சி, திருமாலை என்னும் இரண்டும் இவர் அருளியவை. அடுத்து வரும் மூல நட்சத்திரத்தன்று ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படும். பக்திக்கும், பணிவுக்கும், வீரத்திற்கும், வலிமைக்கும், தன்னம்பிக் கைக்கும் இலக்கணமல்லவா அந்தச் 'சொல்லின் செல்வன்'.
ஐயப்ப பக்தர்கள் ஐயனைத் தரிசிக்க சபரிமலைக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். வைணவக் கோயில்களில் பகல் பத்து, ஹிந்துக்கள் அனைவருமே புனிதமாக விரதம் காக்கும் வைகுண்ட ஏகாதசி, தொடர்ந்து இராப் பத்து உற்சவங்கள். சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம், திருவாதிரைத் திருநாள்.
மற்றொரு விசேஷம், கிறித்துவர்கள் தேவ குமாரன் எனத் துதிக்கும் யேசு கிறிஸ்துவின் பிறப்பும் இம்மாதத்தில் நிகழ்ந்ததென்பதாகும். எனவே கிறித்தவர்கள் இடையேயும் இம்மாதம் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
சில வருடங்களில் ரம்ஜான் மாதமும் மார்கழியை ஒட்டியே வந்துவிட்டால் கொண்டாட்டம்தான் போங்கள். அதிகாலைக் குளிரில் இன்னும் கொஞ்சம் போர்த்திப் படுத்துத் தூங்கலாம் என்று நினைப்பவர்களைப் பலவகைத் துதிகளும் கதம்பமாக வந்து எழுப்பியே தீருவேன் என்று அடம் பிடிக்கும்.
இத்துணை சிறப்பு வாய்ந்த மார்கழிக்கு மேலும் ஒரு சிறப்பு. நம் தென்றல் பிறந்து நம் இல்லங்களில் மணம் பரப்ப ஆரம்பித்ததும் ஒரு டிசம்பர் (கார்த்திகை-மார்கழி) மாதத்தில் தானே! அம்புஜவல்லி தேசிகாச்சாரி |