பாப்பாவுக்கு பாரதி
நாம் பள்ளியில் சேர்ந்தவுடன் முதலில் படிக்கும் நீதிநூல் ஒளவைப் பாட்டி எழுதய 'அறஞ்செயவிரும்பு, ஆறுவது சினம்' என்று தொடங்கும் ஆத்தி சூடி. வருங்கால பாரதம் வளரும் குழந்தைகளின் கைகளிலே என்று உணர்ந்த பாரதி 40 வைரவரிகள் கொண்ட புதிய ஆத்தி சூடியைக் குழந்தைகளுக்கு வழிகாட்ட இயற்றி வைத்தார். அதில் சிலவற்றைப் பாருங்கள்:

அச்சம் தவிர்

ஈகை திறன்

உடலினை உறுதிசெய்

ஐம்பொறி ஆட்சிகொள்

ஒற்றுமை வலிமையாம்

ஓய்தல் ஒழி

கற்றது ஒழுகு

காலம் அழியேல்

குன்றெனநிமிர்ந்துநில்

கூடித் தொழில்செய்

கொடுமையை எதிர்த்து நில்

தையலை உயர்வு செய்

தெய்வம் நீ என்றுணர்

பணத்தினைப் பெருக்கு

பாட்டினில் அன்பு செய்

வையத்தலைமை கொள்

குழந்தைகள் மட்டுமென்ன, பெரியோரும் கற்று, கடைப்பிடிக்க வேண்டிய அருமை யான அறிவுரைகளல்லவா இவை!

பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11ம் நாள். 1882ல் எட்டயபுரத்தில் பிறந்து 1921 செப்டம்பர் 12ம் நாள் அமரரான பாரதி வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள்தாம். சிந்தனையால், மனிதநேயத்தால் உலகக் குடிமகனாகிய பாரதி வாழுங்காலத்தில் வறுமையுடனும் அன்னியரது அடக்கு முறை யோடும் ஒவ்வொரு நொடியும் போராடி வாழ்ந்தாலும் அவன் கொண்ட கொள்கை

''மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்''

என்பது நம் ஒவ்வொருவரின் விருப்பமே அல்லவா?

தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எளிமையும் அழகும் கொண்ட பாரதியின் படைப்புகளைக் கற்பதன் மூலம் வையத்தில் செம்மையாய் வாழும் வழியை அறிந்து உயர்வடையலாம்.

டாக்டர் கிருஷ்ணவேணி அருணாசலம்

© TamilOnline.com