நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
இதுவரைக்கும் தமிழ் சங்க மெல்லிசை நிகழ்ச்சி என்றால் அது இந்தியாவை விட்டு வந்த மூத்த தலைமுறையினருக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா தரப்பினருமே ரசிக்குமாறு பாடல்களை தேர்வு செய்து வெற்றிகரமாக நடத்தி காட்டியது அனிதா, ஐங்கரன் குழுவினரது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி.

செய்யும் தொழிலே தெய்வம் என தொடங்கி 'வான்மேகம் பூத்தூவும்' என்று பொருத்தமாக நம்மை இசைச்சாரலிலே நனையவிட்டு 'பார்த்த ஞாபகமில்லையோ' என நம்மை அறுபதுகளுக்கே

அழைத்துச் சென்ற அனிதா கிருஷ்ணாவின் தீங்குரல் கடந்த வருடங்களில் நன்கு பட்டை தீட்டப்பட்டு வைரமாய் மெருகேறி இருக்கிறது. 'நீலவான ஆடையில்' பாடிய ஐங்கரனது குரல் இன்னும் நம் செவிகளில் ரீங்காரமிடுகிறது!. அவரும் அருமையாக பாடல்களை தேர்வு செய்து ஆண், பெண் என இரு குரல்களிலும் வண்ண ஜாலம் செய்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். பாடல்களை தொகுத்து வழங்கிய மெரீனா தாரிணியும் தமது தெளிவான உச்சரிப்பாலும், நகைச் சுவையான விவரிப்புகளாலும் ரசிகர்களை கவந்தார். 'சரிக' இசை குழுவினரது திறமையான ஒத்துழைப்பால் கச்சேரி அபாரமாய் களைகட்டியது. 'காற்றினில் வரும் கீதம்' பாடலை தனது குருவுடன் தைரியமாக இணைந்து பாடிய சிறுமி நித்யாவிற்கு நமது பாராட்டுக்கள். சிறுமிக்கு நல்ல குரல் வளமிருப்பதால் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம்!.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் போனதே தெரியாமல் நம்மை இன்னிசை மழையில் நனையவிட்ட அனிதா கிருஷ்ணன் குழுவினரது இசை நிகழ்ச்சி அடுத்து எப்போது என்று அனைவரையும் ஏங்க
வைத்துவிட்டார்கள்!.

வசந்தி சோமசுந்தரம்

© TamilOnline.com