ஓவென்று அழுதுக்கொண்டே வந்த வேதவல்லியைப் பார்த்து, அவளுடைய இருமகள்களும் கணவரும் அடைந்த ஆச்சர்யத்திற்கு, அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
காலை எட்டு மணிக்கே தன் சினேகிதி ஒருத்தியின் பெண் கல்யாணத்திற்கு, மற்ற சினேகிதிகளுடன் மைலாப்பூருக்குக் கிளம்பியவள், ஒன்பது மணிக்கெல்லாம் திரும்பி வருகிறாளே! சினேகிதிகளுடன் போனவள் கூட்டத்தில் அவர்களைத் தொலைந்துவிட்டு, தனியே போக வழி தெரியாமல் திரும்பிவிட்டாளா? அல்லது யாருக்கேனும் உடல் நலமில்லாமல் போய்விட்டதா? கணவன் சங்கரனும், பெண்கள் ஜெயா மற்றும் விஜயாவும் தங்கள் மனத்திற்குள்ளேயே இந்தக் கேள்விகளை கேட்டுககொண்டனர். அவளே அழுது முடித்துவிட்டுச் சொல்லட்டுமெனக் காத்திருந்தனர்.
''அம்மா! இந்த தண்ணியைக் குடிச்சுட்டு என்ன நடந்ததுன்னு சொல்லு'' சின்னவள் விஜயா நீர் நிறைந்த டம்ளரை அவள் கையில் வைத்தாள்.
''பாவி! உன்னாலதான் இந்தக் கஷ்டம் எனக்கு?" டம்ளரைத் தட்டிவிட, விக்கித்துப் போனாள் விஜயா.
''என்னாலயா? என்னம்மா சொல்றே...'' இதுநாள் வரை கடிந்து பேசாத அம்மா சொன்ன அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சைப் புண்ணாக்கி, கண்ணீர் மளமளவென்று வர, அப்படியே அம்மாவின் அருகில் முழங்காலிட்டு முகத்தைப் புதைத்துக்கொண்டு மெளனமாய் துக்கத்தை விழுங்க ஆரம்பித்தாள்.
''என்ன வேதா! என்ன நடந்ததுன்னு சொல்லாம, நீயும் அழுது அந்தக் குழந்தையையும் திட்டறே. என்ன நடந்தது... சொல்லு?'' சங்கரன் அவள் அருகில் அமர்ந்துகொண்டு மெல்லிய குரலில் கேட்டார்.
கண்களைத் துடைத்துக்கொண்டு சொல்ல ஆரம்பித்தாள் வேதா.
நாங்க எல்லாரும் டிரெயின்ல போயிண்டிருந்தோம். அடுத்த ஸ்டேஷன் மாம்பலம். 'எல்லோரும் இறங்க ரெடியாக வாசற்படிக்கிட்ட நில்லுங்கோ'ன்னு சுந்தரி சொன்னாள். அவள்தான் ஏ¦ழுட்டுப் பேரடங்கிய சினேகிதிகள் பட்டாளத்தை கல்யாணத்திற்கு கூட்டிண்டு போறவ. விடுவிடுவென்று அவரவர் சீட்டிலிருந்து எழுந்து வந்தா.
'பஸ்ஸ்டாண்ட் கொஞ்ச தூரம் இருக்கு. வேகமாக நடந்தாத்தான் காலை நேரக் கூட்டத்தைச் சமாளித்து நாம பஸ்ஸில ஏறமுடியும். இல்லாட்டா லேட்டாயிடும்.' கூட்டம் சுந்தரியைப் பின் தொடர்ந்தது. நானும் மங்களமும் ஒடம்பைத் தூக்கிண்டு வேகமாக நடக்கத் தொடங்கினோம்.
'மாமி! ஒரு பின் இருந்தால் கொடுங்களேன்.. செருப்பு அறுந்துடுத்து' மங்களம் கேட்டாள். நான் சங்கிலியில் ஏதேனும் பின் உள்ளதா என்று பார்க்க, 'மாமி... உங்கள் நெக்லஸ் எங்கே? காலையில் நாங்கள் எல்லோரும் ரொம்ப அழகாக இருக்கிறதுன்னு பாராட்டினோமே... அதைக் கழட்டி கைப்பையில் வச்சுட்டீங்களா...'' என்றாள் மங்களம்.
'ஐயய்யோ! காணோமே. யாராவது ரயிலில் கட் பண்ணி எடுத்துண்டு போய்ட்டாளா? வேண்டாம் வேண்டாம்னு அடிச்சுண்டேன். என் பெரிய பெண்ணு கல்யாணத்திற்குப் பண்ணி வச்சிருந்த நகையை என் சின்னப் பொண்ணு என் கழுத்தில போட்டாளே, பாவி நான் இப்படி தொலைத்துவிட்டு நிக்கறனே!' பொலம்பறேன் நான்.
ரெண்டு பேரையும் சுத்திக் கூட்டம் சேர அதுக்குள்ளே முன்னே போயிண்டிருந்த மத்தவாள்ளாம் ஓடிவந்து அவரவருக்குத் தெரிந்த ஆறுதலைச் சொல்லத் தொடங்கினா.
'நீங்கள் எல்லோரும் போங்கள் கல்யாணத்திற்கு. இந்தப் பணத்தை அந்தப் பொண்ணுக்கு அன்பளிப்பாக் கொடுங்கோ. எனக்கு மனசு சரியில்லை. நான் வீட்டுக்குப் போறேன்'னு சொல்லிட்டு வந்த வழியெல்லாம் நகை விழுந்திருக்கிறதான்னு பார்த்துண்டே வந்தேன். எங்கும் காணல்லே. ரயிலில் விழுந்திருக்கணும். கிடைத்தாலும் எடுத்தவருக்கு கொடுக்க மனசு வரணுமே.
இதைச் சொல்லியபடி சோர்ந்து படுத்துவிட்டாள் வேதா.
"இன்னும் பதினஞ்சு நாள்ல ஜெயாவுக்கு கல்யாணம். ரெண்டு நாள்ல மூத்த பிள்ளையும் மாட்டுப்பொண்ணும் வந்துடுவா. ஏற்கெனவே கொஞ்சம் கடன் வாங்கிருக்கோம். மறுபடியும் இந்த நகையைப் பண்ண பணம் வேணுமே? இரண்டு நாளைக்கு முன்னேதான் பிள்ளை வீட்டுக்காரா நகை, புடவையெல்லாம் பார்த்து புகழ்ந்துட்டுப் போனா. அதிலும் இந்த நெக்லஸை ரொம்பவே பாராட்டினா. இதைக் காணல்லைன்னா நம்புவாளா! அதுவும் நானே தொலச்சேன்னு சொன்னா, இவ்வளவு பொறுப்பில்லாத சம்பந்தியான்னு எள்ளி நகையாட மாட்டாளோ!" சதா சர்வ காலமும் புலம்பிக்கொண்டிருந்தாள் வேதா.
நடுநடுவே கல்யாண காரியங்களை கவனித்துக்கொண்டும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாமி அறையில் போய் கடவுளிடம் முறையிட்டு அழுதுகொண்டும், வந்தவர் போனவர்களிடமெல்லாம் அந்த நகையை பார்த்தீர்களா என்று கேட்டுக் கொண்டும், ''நான் செய்த பாவத்திற்கு ஆண்டவன் எனக்குக் கொடுத்த தண்டனை'' என்று தன்னைத்தானே கடிந்துக்கொண்டும் இருந்த அவளை அனுதாபத்துடன் பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்யத் தெரியாமல் தவித்து நின்றனர் சங்கரனும் அவரது பெண்களும்.
''ஆச்சு. நாளைக்கு திவாகரும், மஞ்சுளாவும் குழந்தை நிகேஷ்கூட வருவா. அவன் பங்குக்கு அவன் 'டோஸ்'விடப் போறான். மாட்டுப்பொண்ணும் அவள் பங்குக்கு 'டோஸ்'விடுவாள். என் தலையெழுத்து எல்லார் பேச்சையும் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமை." வேதாவின் புலம்பல் அதிகமாக, தெரிந்த ஜோசியர் ஒருவர் வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போனார் சங்கரன்.
"உங்களுடன் வந்த சினேகிதிகளில் ஒருவர்தான் எடுத்திருக்கிறார்'' என்று அந்த ஜோஸ்யர் சொல்ல, அதை வேதா எதேச்சையாக ஒரு சினேகிதியிடம் சொல்ல அது மற்ற சினேகிதர்களுக்குப் பரவ எல்லோரும் அவளுக்கு எதிரியாகி விட்டனர்.
கல்யாணப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனபோது, அவளுடன் நெருங்கிப் பழகிய தோழிகள்கூட, மேலுக்குப் பத்திரிகையை வாங்கிக்கொண்டு 'ஆஹா நிச்சயம் வருகிறோம் கல்யாணத்திற்கு' என்று சொல்லிவிட்டு மனதினுள் 'கல்யாணத்திற் கென்ன, வேறே எதுக்குமே உங்கள் வீட்டுப் பக்கம் காலடி எடுத்து வைக்க மாட்டோம்' என்று சொல்லிக் கொண்டனர்.
''என்னம்மா நீ இந்த விஷயத்திற்காக இப்படி நொந்து நூலாய்ட்டே? மஞ்சுளாவோட நகையைத் தர்ரேன். அப்புறம் அவளுக்கு பண்ணிப்போடறேன். இப்படியா முகம் வீங்கற அளவுக்க அழுவாய்!'' திவாகரனின் பேச்சு தெம்பை ஊட்ட, அத்துடன் மங்களாவும் ''ஆமாம்மா! இப்பொழுதுதான் இவர் எனக்கு ஏழு பவுனில் ஒரு புது மோஸ்தரில் நெக்லஸ் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்தார். ஐந்து பவுனுக்குப் பதிலாக ஏழு பவுன் வடம் கிடைச்சா பிள்ளை வீட்டார் உங்களை ஒன்றும் சொல்லமாட்டார்கள்.''
சொல்லச் சொல்ல, தவித்த வாய்க்கு ஒரு டம்பளர் நீர் கிடைக்காதா என்று ஏங்கும் பொழுது ஒரு சொம்பு நீர் கிடைத்தால் எத்தனை சந்தோஷம் அடைவார்களோ அப்படி உணர்ந்தாள் வேதா.
அப்போது ஒரு பத்துவயதுப் பெண் ஓடிவந்து "மாமி, அந்த ஆன்ட்டி உங்களுடன் பேசணுமாம். உங்களக் கூப்பிட்டார்'' என்று சொல்லிவிட்டு ஓடினாள். காலை சற்றுச் சாய்த்துச் சாய்த்து நடந்து வரும் பெண்ணை நோக்கி வேகமாக நடந்து போனாள் வேதா.
''என் பெயர் தேவகி. என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் அவளது தோழி ரயிலில் ஒரு நகையை சென்ற வாரம் கண்டெடுத்ததாகச் சொன்னாளாம். உங்கள் நகை தொலஞ்சுட்டதாகக் கேள்விப்பட்டேன். ஒருவேளை அதுவாக இருக்கலாமோ என்னமோ. அந்தப் பெண்ணின் அட்ரசைத் தருகிறேன், நீங்கள் எதற்கும் போய்ப் பாருங்கள்...''
''என்ன நகைன்னு தெரியுமாம்மா?''
''அது தெரியலை என் தோழிக்கு. அவளுடன் காலையில் அந்தப் பெண் ரயிலில் வந்தபோது விஷயத்தைச் சொன்னாளாம். அதை சாப்பிடும் நேரத்தில் எனக்குச் சொன்னாள். அவளிடமிருந்தே அந்தப் பெண்ணின் அட்ரசை வாங்கி வந்தேன்'' அவள் கொடுத்த அந்தப் பேப்பரை நகையே கிடைத்தாற்போன்ற சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டாள் வேதா.
மறுநாள் ஞாயிற்றுகிழமை ஆதலால் சமைத்து எல்லோருக்கும் போட்டுவிட்டு வேதா தன் மருமகள் மஞ்சுளாவுடன் அந்த விலாசத்துக்குப் புறப்பட்டுப் போனாள்.
புதுவீடு. புறநகர்ப்பகுதியில் அமைந் திருந்தது. சுற்றிலும் தோட்டமும், சின்னச் சின்ன தென்னங்கன்றுகளும், வாழைக் கன்றுகளும், சமீபத்தில் தான் அந்த வீட்டிற்கு வந்திருக்க வேண்டுமென்று வாசல் நிலைப்படியில் கட்டப்பட்டிருந்த மாவிலைத்தோரணம் பறைசாற்ற மெல்ல அழைப்புமணியை அழுத்தினாள் மஞ்சுளா.
''நீங்கள் யார்? என்ன வேணும் உங்களுக்கு!" கதவைத் திறந்த அந்தப் பெரியவர் கேட்க, அவரைப் பார்த்தவுடன் எங்கோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு மண்டையைக் குடைய, வாயோ வந்த விஷயத்தைச் சொல்லியது. ''உள்ளே வாங்கோ'' அவர் அழைக்க உள்ளே நுழைந்தனர். சோபாவில் அமர்ந்தனர். முன் ஹாலில் மாட்டப்பட்டிருந்த அழகிய ஓவியங்கள், அந்த ஹால் அலங்கரிக்கப்பட்டிருந்த நேர்த்தி, அந்த வீட்டுப் பெண்கள் கலைநயம் மிக்கவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது.
''என் பெண் திவ்யாதான் அதைக் கொண்டு வந்தாள் ரயிலில் அகப்பட்டதென்று. நான்கூட அதைப் போலீசில் ஒப்படைத்துவிடலாம்னு சொன்னேன். அவள்தான் 'அது உரியவரிடம் போய்ச் சேருமோ சேராதோ. நான் ரயில் பிரயாணத்தின் போது பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் இந்தக் கதையைச் சொல்லிவிடுகிறேன். அது பரவி உரியவர் வராமலா போய்விடுவார்கள்?' என்று சொன்னாள். அதுபோலவே ஆகிவிட்டது'' என்றவர் ''திவ்யா! திவ்யா!" என்று குரல் கொடுத்தார்.
வந்த பெண்ணைப் பார்த்ததும் மின்சாரத்தால் தாக்குண்டவள் போலாகிவிட்டாள் வேதா. அவள் கண்முன்னால் அந்தக் காட்சி மிகத் தெளிவாக மீண்டும் வந்தது...
''சங்கரா! எழுந்திரு பா. இந்தச் சம்பந்தம் நமக்கு வேண்டாம்." சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்த சங்கரனை தன் பிள்ளைபோல் வளர்த்தவர்கள் பார்வதியும் வேங்கட்ராமனும். சங்கரனின் அக்கா அத்திம்பேர்.
"நிச்சயதார்த்தத்திற்கே இப்படிச் செய்பவர்கள்... கல்யாணத்திற்கு இன்னும் பெரிய நாமமாகப் போடுவார்கள். உன் பிள்ளைக்கென்ன அழகில்லையா? படிப்பில்லையா? நல்ல வேலையில்லையா? கிளம்புடா சங்கரா" என்று சொல்ல, தன்னை ஆளாக்கிய நன்றிக்காக மனதினுள் வேதனையோடு சங்கரன் வெளிக் கிளம்பினான். சூழ்நிலைக் கைதியாய் வேதா அவனைத் தொடர, திவாகரனும் மனம் ஒப்பாமலயே வெளியே நடந்தான்.
'எந்த ஒரு பெண்ணை ஐந்து வருடத்திற்கு முன்பு ஐந்து பவுன் நகைக்காக ஒதுக்கிவிட்டு வந்தோமோ, இன்று அவள் முன்னே கையேந்தி நிற்கும் அவலம்.' கூனிக் குறுகி நின்றாள் வேதா.
''இந்த நகையா பாருங்கோ'' திவ்யாவும் அவள் அப்பாவும் உள்ளே சென்று கொண்டுவந்த நகையைப் பார்த்து, குருடனுக்குக் கண் கிடைத்தாற் போன்ற சந்தோஷத்தை அடைந்தாள் வேதா.
''ரொம்ப நன்றிம்மா'' வேறு என்ன பேசுவது என்று புரியவில்லை வேதாவுக்கு.
''உங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதா?'' மஞ்சுளா மெளனத்தை கலைத்துவிட்டு அந்தப் பெரியவரிடம் கேட்டாள்.
''அவள் சி.ஏ. முடிச்சப்பறம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தோம். அது நின்னுட்டது. அவள் மேற்கொண்டு எம்.பி.ஏ படிக்க உதவித்தொகை கிடைச்சுது. அதை முடிச்சு நல்ல வேலையும் கிடைக்கவே இந்த வீட்டை வாங்கி இருக்கிறாள் கடன் வாங்கி. கல்யாணத்துக்குப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்."
''அப்படியா! என் அண்ணா என்னைப் போலவே இன்னும் கொஞ்சம் உயரமா, நல்ல அழகாக இருப்பான். அவன் நியூயார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்கான். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் எனக்கு உங்கள் பெண்ணைப் பிடித்துவிட்டது. அவன் போட்டோவை வரவழைத்துத் தர்றேன். உங்கள் பெண்ணின் போட்டோவையும் கொடுங்கள். எங்களுக்கு மனப்பொருத்தம் இருந்தால் போதும். இரண்டு மாதம் கழித்து அவன் வருவான். அப்பொழுதே திருமணத்தை முடித்துவிடலாம்'' என்று மஞ்சுளா சொன்னாள்.
அப்போது பார்த்துத் தொலைக்காட்சியில் 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ..அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ..?' என்று பாடல் வர எல்லோர் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.
லதா கிதிரர் |