கலி(ஃபோர்னியா) காலம் - பாகம் 13
2000க்கும், 2001க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லக்ஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலக மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.

அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.

அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில்நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப்பல தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது. அப்படி யிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாகப் பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.

அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

சென்ற இதழில், சிவா என்ற இளைஞன் தன் நிறுவனம், தொழில் நுட்ப வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட்டதால், தான் வேலை இழந்து விட்டதாகவும், வேறு பல நிறுவனங்களிலும் அதே காரணத்தால் வேலை நீக்கங்கள்தான் உள்ளது, வேலை வாய்ப்பே இல்லை எனவும் கூறினான். இந்த நிலைக்கு அருண் என்ன தீர்வு கூற முடியும் என சிவா கேட்கவே, அருண் இந்த மாதிரி நிலை இப்போது தொழில் நுட்பத் துறையில் மிகவும் சகஜமாகிவிட்டது; எனவே சரித்திரத்தில் முன்பு மற்றத் துறைகளில் இதே மாதிரி நடந்த போது பாதிக்கப் பட்டவர்கள் செய்ததை அறிந்து கொண்டு அந்த மாதிரி செயல் பட வேண்டும் என்று கூறினார். தொழிற்சாலை உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புக்கள் ஹாங்காங், சைனாவுக்குப் போன போது, பலர் வேறு தொழிற்சாலைகளுக்கும், சேவை, அலுவலகம் போன்ற வேறு துறைகளுக்கும் மாறியதை விளக்கினார்.

அந்த ஒரு முறை மட்டுமல்லாமல் அதற்கு முன்பும் பிறகும் அந்த மாதிரி நடந்ததைப் பற்றி சிவா விளக்கம் கேட்கவே, அருண் தொழிற்புரட்சிக் காலத்தில் நடந்ததைப் பற்றியும், PC மெமரிகள், பெட்டிகள் உற்பத்தி ஆசியாவுக்கு அனுப்பப் பட்டதையும், தேசியப் பாதுகாப்புத்துறையில் செலவுக் குறைப்பால் பலர் வேலை இழந்ததையும் குறிப்பிட்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வளர்ச்சியால் பெரும்பாலோர் மீண்டும் வேலை பெற்றதையும் குறிப்பிட்டார். சிவா ஆனந்தமாக அப்படியென்றால் இந்த முறையும் அப்படியே வேறொரு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் சிறிது காலத்தில் நிறைய வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்று உணர்ந்ததாகக் கூறினான். ஆனால் அருண் இந்த முறை அது அவ்வளவு சுலபமில்லை என்று கூறவே சிவா விளக்கம் கேட்டான்.

அருண் மின்வலையும், பொருளாதார உலக மயமாக்கலும் (economic globalization) இந்த முறை ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள் என்றார். உலகமயத்தால் வேலை பாதுகாப்பு (protectionism) கடினமாகிவிட்டது. மின்வலை யால், அருகில் இருக்க வேண்டிய நிர்ப்பந்த மில்லாத எந்த வேலையையும் வெளிநாட்டுக்கு அனுப்பி விட முடிகிறது என்று விளக்கினார்.

அதைக் கேட்ட சிவா, அப்படியென்றால் தன் போன்றோர் மீண்டும் வேலை பெற என்னதான் வழி என்று வினவினான்.

அருண் விவரித்த வழியை இப்போது காண்போம்:

அருண் தொடர்ந்தார். "சிவா, அருகில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாத எந்த வேலையையும் மின்வலை மூலமாக உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் அனுப்பிவிட முடியும். இன்று இந்தியா. நாளை சைனா, பிலிப்பைன்ஸ், ருமானியா, ரஷியா, இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு சில ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளுக்கும் கூட. அதனால் பெரும் பாலான விண்ணப்பப் பரிசீலனை (forms and claims processing) மற்றும் தொலைபேசி மூலமாகச் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய வெளியேறிவிடும். மின்னணு தொழில்நுட்ப (electronic technology) design மற்றும் உயிரியல் தொழில்நுட்ப (biotech) வேலைகளும் கூட கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி விடுவார்கள்."

சிவா இன்னும் ஆழ்ந்த கவலையுடன் "சரி, புரியுது. எந்த மாதிரி வேலைதான் இங்க தங்கும்? என்னுடைய எதிர்காலம் என்ன? நான் என்ன செய்யணும்?" என்றான்.

அருண் "உன் எதிர்காலம் மட்டுமில்லை சிவா, என் குழந்தைகளுடைய எதிர் காலத்தையும் பத்தி யோசிக்க வேண்டிய தாக இருக்கு. எனக்கு என்ன தோணுதுன்னா நாம எந்த மாதிரி வேலைகள் வேணும்னு நினைச்சமோ அதைக் கொஞ்சம் மாத்திக்கணும். எதிர்பார்ப்புக்களை flexible-ஆ வச்சுக் கணும். இந்தத் துறையில, இந்த மாதிரி வேலைதான் செய்யணும்னு நினைச்சா கஷ்டம்தான். ஆனா பல துறைகளில பல விதமான வேலைகள் இங்கேயேதான் இருக்கும். அந்த மாதிரி வேலைகளுக்குப் போக ஆவல் இருந்தா நல்லதுதான். மேலும் இங்கேயே இருந்து வேலை தேடிக் கணுங்கறதில்லயே! வேலை எங்க கிடைக்குதோ அங்க குடி போகற மனப்பாங்கும் இருந்தா இன்னும் நல்லது."

சிவா ஆவலுடன் "என்ன மாதிரி வேலைகள்? எங்கே இருக்கு? சொல்லுங்க, உடனே தாவறேன்" என்றான்.

அருண் முறுவலுடன் தொடர்ந்தார். "அவ்வளவு ஈஸியில்லை சிவா! நான் மேல சொல்லப் போறதைக் கேட்டுட்டு, அப்புறம் தாவறதா, வேணாமான்னு பாருங்க. முதலாவதா, இங்க என்ன மாதிரி வேலைகள் தங்கும்னு பாக்கணும். பொதுவா எல்லாத் துறைகளையும் வச்சு சொல்லப் போனா, மிகவும் புதிய உயர் தொழில் நுட்பத் தொழில்கள், union மற்றும் அரசாங்கத்தால் பாதுகாக்கப் பட்ட வேலைகள், அது தவிர, மனிதர்கள் அருகிலேயே இருந்தே ஆகவேண்டிய வேலைகளும், மனிதர்கள் நேருக்கு நேர் பார்த்துப் பேசி முடிக்க வேண்டிய காரியங்களும் தான் தங்கக் கூடும்."

"அது எந்த மாதிரி வேலைகள்? என்னால செய்ய முடியுமா?"

"முடியும். ஆனா புது திறன்களைக் கத்துக்க வேண்டியிருக்கலாம். மாறி வேற துறைக்கே போக வேண்டியிருந்தாலும் இருக்கலாம். வெளியேற்றப் படாமல் இங்கேயே இருக்கக் கூடிய வேலைகள் பலவிதம். முதல் ரகம், ஏற்றுமதியாகும் வேலைகளிலேயே கூட, 100 சதம் அனுப்பப் படாமல், ஒரு பகுதி இங்கேயே நடத்தப் படும். உதாரணமாக, மிக உயர்தரத் தொழில் நுட்பம் பொருந்திய சாதனங்களை விற்பதற்காக மீட்டிங் அமைக்க வாடிக்கையாளர்களை ·போனில் கூப்பிடும் inside sales என்னும் வேலை. அதை வெளிநாட்டிலிருந்து செய்யலாம் என்றாலும், time zone காரணத்தாலும், தொழில்நுட்பப் பயிற்சி தேவையாலும் அதில் நிறைய வேலைகள் இங்கேயே தங்கும். அடுத்த விதம் அமெரிக்காவில் இன்னும் தங்கிய, அல்லது புது தொழில் நுட்பங்களுக்காகத் துவக்கப்படும் தொழிற்சாலைகளில் இருக்கும் வேலைகள். மூன்றாவது விதம், வாடிக்கையாளர்களுடன் அல்லது சேவை பெறுபவர்களுடன் நேருக்கு நேர் பேசியே நடத்த வேண்டிய வேலைகள். இந்த மூன்றாவது ரகத்தில் கடை விற்பனை யாளர்கள், சில சட்ட ரீதியான வேலைகள், மருத்துவத் துறையில் நோயாளிகளைப் பராமரிக்க வேண்டிய வேலைகள் போன்றவை. நான்காவது நம்ம துறையில கூட, நேரடியாக வாடிக்கையாளங்க கூட நடத்தப் பட வேண்டிய installation, deployment, மற்றும் சாதனம் எதாவது சரியா வேலை செய்யலன்னா அவங்க இடத்துக்குப் போய் ஆராய்ஞ்சு பாக்கற வேலை அந்த மாதிரி ..."

சிவா யோசித்து விட்டு, புரிந்தது என்று தலையாட்டினான். "ஆக மொத்தம், உள்நோக்கிய தொழில் நுட்ப வேலைகள் எல்லாம் வெளியேறிட முடியும். சேவைத் துறைகளிலயும், மற்றத் துறைகளிலும் கூட, வாடிக்கையாளங்க கூட நேரடியா பேச வேண்டிய வேலைகள் இங்க தங்கலாம். அப்படித்தானே?"

"ஆமாம். ஆனா, உள்நோக்கிய வேலைகள் எல்லாமே ஓடிடும்னு சொல்ல வரலை. அந்த மாதிரி வேலைகளை வெளியனுப்பறது ரொம்ப சுலபம், அதுனால விற்பனை, வாடிக்கையாளர் சம்பந்தப் பட்ட வேலைகளுக்குப் பாதுகாப்பு அதிகம்னு சொல்றேன், அவ்வளவுதான்."

"அப்ப, தொழில்நுட்பமா செய்யற வேலைகள் இங்கே இனிமே அதிகரிக்காதா?!"

"அப்படின்னு ஒட்டு மொத்தமா சொல்லிட முடியாது. ஆனா முன்காலத்துல நடந்ததை ஒப்பிட்டுப் பாத்தா அதுல ரொம்ப குறைஞ்ச சதவிகிதம் தான் இங்கே உருவாகும். ரொம்பப் புதிய தொழில் நுட்பங்களான Nano-technology, interactive entertainment போன்ற துறைகளில மிகவும் ஆழ்ந்த core எனப்படும் தொழில் நுட்ப வேலைகள் இங்கே இருக்கும். அந்தத் துறைகளிலும் கொஞ்சம் பொதுவான மென்பொருள் (software) தயாரிக்கும் வேலைகள் வெளிநாடுகளில்தான் நடக்கும்."

"அப்ப இங்கே தொழில் நுட்ப வேலையில இருக்கறதே ஆபத்துங்கறீங்களா! அந்த நிலைமை மாறவே மாறாதா?"

"அதை மாற்ற அமெரிக்க அரசினர் பல நடவடிக்கைகள் எடுக்கக் கூடும். இப்போதே சில அமெரிக்க மாநில அரசுகள், தொழில் கான்ட்ராக்ட் வேண்டுமானால் வேலை களை அமெரிக்காவிலேயே செய்ய வேண்டும் என்று விதித்திருக்கிறார்கள். போகப் போக அந்த மாதிரி விதிகள் இன்னும் வலுவாகும். மேலும் அமெரிக்க மத்திய அரசு டாலரின் மதிப்பை நிதானமாகக் குறைக்க ஆரம்பித்துள்ளது. அதனால் வெளிநாட்டில் செய்யும் வேலைகளின் டாலர் விலை அதிகரிக்கிறது. அரசாங்க பாலிஸிகளால், வேலை இழப்பைக் குறைக்க இன்னும் பல காரியங்கள் எடுக்கக் கூடும், எடுப்பார்கள். ஆனால், அதனால் மட்டும் ஒட்டு மொத்தமாக இந்த அலையைத் திருப்பிவிட முடியாது."

"அப்புறம் என்னென்ன ஆகுங்கறீங்க?!"

"நாளாக ஆக, வேலை இல்லாதவர்கள், குறைந்த சம்பளமே பரவாயில்லை என்று ஒத்துக் கொள்வதால், அமெரிக்காவில் சம்பளங்கள் மெதுவாகக் குறையத் தொடங்கும். வெளிநாடுகளில் தகுதியுள்ள ஆள் தட்டுப்பாட்டால் சம்பளங்கள் உயரும். அதனால் இந்த ஏற்றுமதி அலையும் சற்று வேகம் குறையும். மேலும் ..."

"ஊம்! இன்னும் இருக்கா? சொல்லுங்க!"

"... அடுத்த இருபது வருடங்களுக்குள் அமெரிக்காவில் 75 மில்லியன் வேலை யாளர்கள் பணியிலிருந்து ஒய்வுபெறப் போகிறார்கள். ஆனால் அதே காலத்துக் குள் 45 மில்லியன் அமெரிக்கர்களே புதிதாக வேலை வாய்ப்புக் களத்தில் குதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால், கிட்டத் தட்ட 30 மில்லியன் வேலைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பியோ அல்லது அங்கிருந்து வேலையாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்தோ தானே ஆக வேண்டும்? ஆனால் அந்த வட்டம் சுற்றி வருவதற்குள் குறைகாலத்தில் எப்படியோ சமாளிக்க வேண்டியிருக்கும்."

"அப்படின்னா, இப்ப, உடனே நான் என்ன செய்யணுங்கறீங்க?"

"எந்த வேலையும் பரவாயில்லைன்னா உடனேயோ, இல்லன்னா MBA போன்ற படிப்புப் படித்தோ, இல்லன்னா விசேஷத் தொழிற்பயிற்சிப் பட்டம் (special skills training courses) எடுத்துக்கிட்டோ, விற்பனை போன்ற வேற மாதிரி துறைகளில வேலைகளுக்கு முயற்சி பண்ணலாம். தொழில்நுட்பத் துறையிலேயே இருக்கணும்னா வாடிக்கையாளர்களோட நேரடியா பழகத் தேவையான deployment, tech support, professional services போன்ற வேலைகளுக்கு மாறலாம். அது எதுவும் இங்க ஒத்து வரலேன்னா ..."

"எதுவும் ஒத்து வரலேன்னா... என்னதான் செய்ய முடியும்?!"

"Go west young man! 1850வது வருட வாக்கில் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வசித்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட புத்திமதி இது. புதிதாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அமெரிக்கவின் மேற்குப் பகுதி, எல்லையில்லாத வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் என்பதால் கூறப்பட்டது. இப்போதும் அதையே கூறலாம்! இப்படியே பஸி·பிக் மகா சமுத்திரத்தைத் தாண்டி மேற்குப் பக்கமா போனா, இந்தியா வந்துடும். அதுதான் தற்போது வேலைவாய்ப்புக் களின் மெக்கா! அது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் வேலை செய்து பயிற்சியும் திறனும் பெற்றவர்களுக்கு மிக உயர்ந்த நிலை வேலை கிடைத்து பல படிகள் உடனே தாவி வளர வாய்ப்புள்ளது. அங்கு போய் சில வருடங்கள் கழித்து, அந்த வளர்ச்சியுடன் அமெரிக்காவிலோ, உலகத்தில் வாய்ப்புள்ள மற்ற எந்த இடமானாலும் மாற முயற்சிக்கலாம். உங்களால் விஸா கணக்குப்படி இங்கிருந்து குடி பெயர முடியுமானால் அது மிகவும் நல்ல யோசனைன்னு நான் நினைக்கிறேன்!"

ஆச்சரியத்தால் சிவாவின் வாய் சில நொடிகள் அடைந்து விடவே மெளனமாக வாய் பிளந்த படி அருணைப் பார்த்து விட்டு, பிறகு மெல்லத் தலையாட்டினான். "சரி அருண்! நீங்க சொன்னதெல்லாம் பிரமாதமான கருத்துக்கள். அமெரிக்காவை விட இந்தியாவில் எனக்கு வாய்ப்பு இன்னும் நல்லா இருக்கும்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லை. நீங்க என் கண்ணை... இல்லை இல்லை... என் மனசைத் திறந்துட்டீங்க. நல்லா யோசிச்சுப் பாத்து ஒரு முடிவுக்கு வறேன். ஒரு வேளை அடுத்த முறை நான் உங்களோட தொடர்பு வச்சுக்கறது இந்தியாவிலிருந்து அனுப்பும் மின்அஞ்சலாகக் கூட இருக்கலாம்!

அருண் புன்னகையுடன் அவன் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு தன் starbucks decaf-nonfat-nosugar- cappuccinoவை ரசித்தபடி நடந்தார்! (அதற்கு பதிலாக பேசாமல் வெந்நீரையே குடித்திருக்கலாமே, பணமாவது மிஞ்சும் என்கிறீர்களா? விட்டுத் தள்ளுங்கள். அவரவர் சுவை அவரவருக்கு!)

"ஹை அருண்! எங்க ஒளிஞ்சிட்டிருந்தீங்க? உங்களை ரொம்ப நேரமாத் தேடறேன் ..." அவரைத் தேடி அடுத்த பிரச்சினை வந்து கொண்டிருந்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com