தாயாக மாறுங்கள்
அன்புள்ள சிநேகிதியே,

நான் என் பிள்ளை வீட்டிற்கு வந்திருக்கிறேன். மருமகள் தங்கக்கட்டி. என்னிடம் மிகவும் ஆசையாக இருப்பாள்.

நான் பட்ட கஷ்டம் எல்லாம் தெரியும். எனக்கு கிரீன் கார்டு இருக்கிறது. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். ஆனாலும் மனத்தில் ஓர் உறுத்தல்.

சின்ன வயசில் ரொம்ப கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தவள் நான். எல்லோருக்கும் அடங்கி வாழ்ந்தே பழகினவள்.

அப்பாவிடம் பயம். அப்புறம் என் கணவர். அவர் அப்பாவுக்கு மேல் ஒரு முன்கோபி. என்னை ஒரு அடிமை போல் பாவித்தார். அவர் சொல்வதை அந்த வினாடியில் அப்படியே கேட்க வேண்டும். எனக்கென்று ஓர் ஆசை, தனி செளகரியம் எதுவுமே கிடையாது. அடுப்பில் ஏதோ பொறித்துக் கொண்டு இருப்பேன். 'உடனே வா' என்று அதிகாரம் செய்வார். அடுப்பை அணைத்துவிட்டு ஓடுவேன். இந்த ·பேனைப் போடு என்பார். அந்த சுவிட்ச் அவர் தலைக்கு மேல்தான் இருக்கும். வயிற்றில் குழந்தை இருந்த போது, கோபத்தில் எட்டி உதைத்திருக்கிறார்.

இதுபோல் எத்தனையோ விஷயங்கள். என் பையன் கல்யாணம் ஆகி 18 வருடங்கள் கழித்துதான் பிறந்தான். எங்கே இவரை எதிர்த்தால் குழந்தை பிறக்க வில்லை என்று தள்ளி வைத்துவிடுவாரோ என்ற நடுக்கத்திலேயே எதிர்க்கச் சக்தியில்லாமல் இருந்துவிட்டேன்.

இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். வயது 70க்கு மேல் ஆகிறது. அதிகாரத்துக்கு பயந்தவர்கள் எல்லாம் பெரியவர்கள் ஆகி, இவரை அசட்டை செய்ய, இன்னும் கோபம் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. அதுவும் என்னுடைய மகனும், மருமகளும் என்னை சப்போர்ட் செய்து நாங்கள் கட்சி சேர்ந்துவிட்டோம் என்று வேறு கோபம்.

இப்போது எனக்கும் வயதாகிக் கொண்டு வருவதால் அவருடைய ஆட்டத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவதில்லை. நானும் எதிர்த்துப் பேசி வருகிறேன். இதனால் ஒருவாரம் கோபித்துக் கொண்டு, சமைத்து வைத்திருந்தால்கூட ஹோட்டலில் போய் சாப்பாடு வாங்கிக்கொண்டு குடியிருப்பில் எல்லோரும் பார்க்கும்படி பரிதாபமாக நடந்து வருகிறார். நரகவேதனையாக இருந்தது. என் பிள்ளையுடன் பேசி அமெரிக்கா கிளம்பி வந்துவிட்டேன். அவருடன் சொல்லிவிட்டு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிவிட்டுத்தான் வந்தேன்.

இங்கிருந்து என் பிள்ளையோ, நானோ 'போன்' செய்தால் கத்து, கத்து என்று கத்துகிறார். ஆகவே அவருடைய தங்கை பிள்ளைக்கு 'போன்' போட்டு அவ்வப்போது விவரம் தெரிந்து கொள்கிறேன். போனவாரம் கிடைத்த செய்தி. அவருக்கு நல்ல ஜுரம். 3 நாள் இருந்தது. இப்போது பரவாயில்லை. என் பிள்ளை என்னை உடனே கிளம்பச் சொல்லுகிறான். அங்கே போனாலும் என்னை வார்த்தைகளால் குத்திக் குத்திக் குதறுவார். ஒருபக்கம் மனசாட்சி உறுத்துகிறது. மறுபக்கம் ''என்ன வேண்டியிருக்கிறது இது போன்ற உறவு... நன்றாகக் கஷ்டப்படட்டும்'' என்று நினைக்கத் தோன்றுகிறது. மனம் குழம்பித் தவிக்கிறது. உங்கள் அபிப்பராயம் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?

அன்புள்ள...

சிறுவயதில் பயம் காரணமாக அடிபணிந்து அடிபணிந்து உள்ளத்தால் அடிபட்டு விட்டீர்கள். இப்போது வயது முதிர்ச்சி யாலும், உங்கள் மகன், மருமகள் ஆதரவு இருப்பதாலும் உங்களிடம் ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இப்போது கணவரிடம் இருந்த பயம் போய் அது கசப்பு உணர்ச்சியாக வெளிப்படுகிறது.

பொதுவாக நாம் யாருக்காவது சேவையோ/உதவியோ செய்யும் போது - அது பாசத்தால் இருக்கலாம்; பரிதாபத்தால் இருக்கலாம்; பணத்துக்காக இருக்கலாம்; பிற்பலன் எதிர்பாத்து இருக்கலாம்; பாவத்துக்குப் பயந்து இருக்கலாம்; பிறர் பார்வைக்காக இருக்கலாம்; புகழுக்காக இருக்கலாம். இல்லாவிட்டால் பரந்த மனம் படைத்து எதிர்பார்ப்புகள் இல்லாமலும் செய்யலாம்.

உங்கள் மனம் இப்போது குழப்பத்தில் இருக்கும் காரணமே உங்கள் கணவருக்குப் பிறர் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார் என்பதே. மனைவி என்ற கடமை உணர்ச்சி, உங்களுக்குள் இருக்கும் பரிதாப உணர்ச்சி, பிறர் என்ன நினைப்பார்களோ என்ற குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்ந்து உங்களைப் பைத்தியமாக அடிக்கிறது என்பதை நிச்சயம் நம்புகிறேன்.

நம் குடும்பத்தில் நாம் பாசம் வைத்திருக்கும் யாருக்காவது உடம்பு வந்து, செயலிழந்து இருக்கும் போது அருவருப்பாகத் தோன்றும் செயல்களையும் பெருமையோடு செய்வோம். அவர் மேல் நமக்குக் கோபம் இருக்காது. பரிதாபம் தான் இருக்கும். மனதிலும், உடம்பிலும் சோர்வு இருக்கும். ஆனால் கசப்பு இருக்காது.

அதுபோல, உங்கள் கணவருக்கு இருக்கும் குணத்தை ஒரு தீர்க்கமுடியாத வியாதியாக நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வயதுக்கு மேல், அவரை மாற்றுவது இயலாது. அவரை உங்கள் குழந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு தாயின் நிலைமையிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். ('எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னேனே... உங்களுக்குப் புரியவில்லையா?' என்று என்னை நீங்கள் கேட்பது தெரிகிறது) நீங்கள் ஒரு தாயாக மாறும் போது அவர் சப்தம் போட்டாலும் எட்டி உதைத்தாலும் வியாதியால் வேதனைப்படும் குழந்தையாக நீங்கள் நினைக்க அங்கே வெறுப்பு, கசப்பு மறைந்து பொறுப்பு, பொறுமை பிறக்கும். Because you are in control.

உங்களுடைய அனுபவமும், வேதனையும் பிறருக்கு புரிய வாய்ப்பில்லை. ஆகவே மற்றவர்கள், உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற சந்தேகமோ பயமோ உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கண்டிப்பாகப் போய் உங்கள் கணவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்று அறிவு சொல்லும் அதிகாரம், இந்தப் பகுதியில் நான் உபயோகிக்க கூடாது. இது உங்கள் முடிவு.

கசப்பு உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு, நான் கூறியது போல நீங்கள் உங்கள் ஸ்தானத்தை மாற்றிக் கொண்டு அவருடன் இருக்க நீங்கள் கிளம்பி சென்றால் உங்களுக்கே புரியும் வாழ்க்கையின் அர்த்தம்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com