மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னணித் தலைவர்களின் ஒருவருமான முரசொலி மாறன் சென்னையில் நவம்பர் 23ம் தேதி இரவு 7.05 மணிக்குக் காலமானார்.
கலைஞரின் மனச்சாட்சி என்று அறியப்பட்ட அவர் திமுகவுக்கும் டெல்லிக்குமான மிக வலுவான பாலமாயிருந்தார். உலக வர்த்தக அமைப்பில் (WTO) வளரும் நாடுகள் முன்னேறிய நாடுகளின் சந்தைகளாக மாற்றப்படாமல் உறுதியான நிலைப்பாடு எடுத்து இணைந்து நிற்பதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. அவர் மத்தியத் தொழில் அமைச்சராகப் பதவியேற்றபின் பல பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்தன.
ஒற்றைத் தலைவலி காரணமாக 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாறனின் உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்கு மார்பில் பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. நவீன மருந்துகளும் தீவிர சிகிச்சையும் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுத்தாததையடுத்து அவரை அமெரிக்காவுக்குக் கொண்டுவந்தனர். அதுவும் பெரிய அளவில் உதவவில்லை.
கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் திருமபச் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் கிட்டத்தட்ட 77 நாட்கள் கழித்துக் காலமானார். |