சில வருடங்கள் முன்புவரை ஒரு சாதாரண கிராமமாக இருந்தது மேல்மருவத்தூர். இன்று இங்கே பள்ளிகளும், கல்லூரிகளும், 200 படுக்கைகள் கொண்ட இலவச மருத்துவமனையுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் சிகரம் போல அமைந்திருக்கிறது லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடித் தொழும் அன்னை ஆதிபராசக்தியின் ஆலயம்.
இந்த அற்புத மாற்றங்களுக்குக் காரணம் 'அம்மா' என்று கண்ணீர் மல்க அன்பர்கள் அழைக்கும் அருள்திரு பங்காரு அடிகளார். இவரது பக்தர்கள் இவரை ஆதிபராசக்தியின் அவதாரமாகவே கருதி வழிபடுகின்றனர். இந்தியா முழுவதிலிருந்து மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் அன்னையைத் தரிசித்து அருளாசியும், ஆன்மீக உணர்வும், ஆக்கமும் பெற அன்பர்கள் இங்கு வருகின்றனர்.
பங்காரு அடிகளார் 1941ம் வருடம் மார்ச் 3ம் தேதி கோபால நாயக்கருக்கும், அன்னை மீனாம்பாளுக்கும் மூத்த மகனாக மருவத்தூரில் அவதரித்தார். அவருடைய ஆரம்பப் படிப்பு அருகிலுள்ள அச்சிறுபாக்கம் கிராமத்தில்தான். பள்ளிப்படிப்பை முடித்தபின் ஆசிரியர் பயிற்சி எடுத்து முடித்து, ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியரானார். இந்த நேரத்தில்தான் அடிகளாருக்குத் தன் அவதார நோக்கமும் புலப்படத் தொடங்கியது.
அடிகளார் “நான் இந்த அவதாரம் எடுத்திருப்பது உங்களுடைய ஆன்மீக உணர்வைத் தட்டி எழுப்புவதற்காக” என்று பலமுறை கூறியிருக்கிறார். இவர் நிறுவிய ஆதிபராசக்தி இயக்கம் மாபெரும் இயக்கமாக வளர்ந்து, 4500 வார வழிபாட்டு மன்றங்களுடன் இன்று உலகெங்கிலும் வியாபித்திருக்கிறது. இந்த மன்றங்கள் ஆன்மீக வழி நின்று அறச்சேவை செய்யும் சமுதாய சேவை கூடங்களாக அமைய வேண்டும் என்பதே அடிகளாரின் விருப்பம்.
இவர் தொடங்கிய கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மேல்மருவத்தூரைச் சுற்றி அமைந்திருக்கிற கிராமங்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ளவர்களுக்கும் மிகவும் பயன்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவ சேவையை விரிவாக்கும் வகையில் 2000 படுக்கை வசதி உடையதாக இதனை விரிவாக்கி வருகிறார்கள். இவற்றை ஆதிபராசக்தி சித்தர் பீட அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. அந்த அறக் கட்டளையை மேற்பார்வையிட்டு அதை தெய்வீக வழியிலே நடத்திச்செல்வது அருள்திரு அடிகளார் அவர்கள்.
இங்குள்ள ஆலயத்தில் ஆண், பெண் அனைவரும் எந்தவித வேறுபாடுகளுமின்றித் தாமே ஆதிபராசக்தியின் திருவுருவத்திற்கு அர்ச்சனை, பூசை மற்றும் வழிபாடுகள் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. சபரிமலைக்குச் செல்வது போலவே ஏராளமான அன்பர்கள் இப்போது நோன்பு நோற்று, இருமுடி கட்டி, கால்நடையாகவே மேல்மருவத்தூருக்கு வருவதைப் பார்க்கலாம். இவர்களது செவ்வாடை இவர்களை அடையாளம் காட்டுகிறது.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியே திண்டிவனம் செல்லும் சாலையில் 96 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருகிறது மேல்மருவத்தூர். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து காரில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் மேல்மருவத்தூர் போய்ச்சேரலாம். ஏராளமான பேருந்துகளும், புகை வண்டிகளும் இவ்வழியே செல்கின்றன.
அமெரிக்காவில் செயல்பாடு
அமெரிக்காவிலுள்ள ஆதிபராசக்தி பக்தர்கள் பென்சில்வேனியா மாநிலத்தில், செஸ்டர் ஸ்பிரிங்ஸ் நகரத்தில் 24.5 ஏக்கர் இடத்தில் ஆதிபராசக்தி ஆலயம் அமைக்கவிருக்கிறார்கள். அதற்கு 2000ம் ஆண்டில் அடிகளார் அமெரிக்காவிற்கு ஆன்மீகப் பயணம் வந்தபோது அடிக்கல் நாட்டினார். அங்கு கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அடிகளாரின் உத்தரவின்படி கரிக் கோலம் (ஆதிபராசக்தி அன்னையின் திருவுருவச் சிலை) அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டு, விரும்பி வேண்டிய பக்தர்களின் இல்லங்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் வழிபடும் பொருட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இக்கரிக்கோலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பக்தர்களின் இல்லங்களுக்கெல்லாம் வர இருக்கின்றது. தங்கள் இல்லங்களுக்கு அன்னையை வரவழைத்து வழிபாடு செய்ய விரும்புவோர் தங்கள் அருகிலுள்ள வார வழிபாட்டு மன்றங்களுடன் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
******
சித்தர் பீடமும், வழிபாட்டு மன்றங்களும் செய்யும் நற்பணிகள்
ஏழை மக்களுக்கு ஆடையும், அன்னதானமும், அறிவு வளர்ச்சிக்காகப் புத்தகங்களும் வழங்குதல்.
ஏழை மக்களுக்கு வாழ வழிவகுக்கும் தொழில் கருவிகளை வழங்குதல்.
ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் வழங்குதல்.
ஏழை மக்களுக்கு இலவசத் திருமணம் நடத்திவைத்தல்.
இயற்கையின் சீற்றத்தால் துன்பம் அடைகிற மக்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ உதவி செய்தல்.
முதியோருக்கும், ஆதரவற்றோருக்கும் இல்லம் அமைத்தல்.
ஏழை மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுத்தல்.
உழவாரப்பணி செய்து கோயில்களைச் சீர்படுத்துதல்.
விதவைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் வாழ வழிவகுத்துக் கொடுத்தல்.
அனாதைப் பிணங்களை அடக்கம் செய்தல்.
ஆயுள் கைதிகள் மற்றும் மரணதண்டனை பெற்ற கைதிகளுடைய குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தல்.
கல்விச் சாலைகள் அமைத்து அறிவொளி வழங்குதல்
இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தி லென்ஸ் மற்றும் கண்ணாடி வழங்குதல்.
மருத்துவமனையின் மூலம் பல்லாயிரகணக்கானோர்க்கு பின் குறிப்பிட்டுள்ள துறைகளில் இலவச வெளிப்புறச்சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளித்தல்: குழந்தை பிரிவு, மகப்பேறு பிரிவு, இருதய பிரிவு, எலும்பு மற்றும் மூட்டியல் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு.
******
அமெரிக்க வார வழிபாட்டு மன்றங்களின் தகவல் தொடர்பு விவரங்கள் மாநிலம்/ஊர் தொலை பேசி மின்னஞ்சல்
நியூ யார்க் 718-465-6133 sakthisk@aol.com நியூ ஜெர்ஸி 732-821-0773 vpi0773@aol.com பென்சில்வேனியா omsakthi@pond.com வர்ஜீனியா/வாஷிங்டன் டி.சி/மேரிலேண்ட் 703-266-1883 இல்லினாய் 630-778-7732 mradha@takesmart.com 630-978-9305 raama@cyberintl.com கேன்ஸாஸ் 620-342-6639 சான் பிரான்சிஸ்கோ 510-791-8795 alagum@hotmail.com லாஸ் ஏஞ்சலஸ் 818-729-0966 kasthuri29@hotmail.com
தகவல்: கண்ணன் கட்டுரை: மதுரபாரதி |