ஸ்ரீ நாராயண தீர்த்தர் ஒரு கிருஷ்ண பக்தர். இவருக்கும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பிரசித்தமான வரகூர் வேங்கடேசப் பெருமாள் கோயிலுக்கும் ஏற்பட்ட தொடர்பினால்தான் பூபதிராஜபுரம் வராஹபுரியாகி பின்னர் வரகூர் என்று ஆயிற்று. அது ஒரு சுவாரஸ்யமான கதை.
நாராயண தீர்த்தர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி என்ற கிராமத்தில் பிறந்தவர். கோவிந்தன் என்பது இவரது இயற்பெயர். உரிய வயதில் உத்தமமான ஒரு பெண்ணை இவருக்கு மணமுடித்து வைத்தனர் பெற்றோர்.
வேதங்களையும் சாஸ்திரங்களையும் பயின்று சிறந்த விவேகியாய்த் திகழ்ந்தார். ஒரு சமயம் அண்டை கிராமத்திற்குச் சென்று திரும்பும்பொழுது ஆற்றின் ஆழத்தை உணராமல் இறங்கிவிடவே நீந்திக் கரையேற முடியாமல் திகைத்துப் போய்த் தத்தளித்தார். அந்த நேரத்தில் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 'ஆபத்து சந்நியாசம்' நினைவுக்கு வந்தது. ஒருவன் சந்நியாசம் கொள்ளும்போது அது மறு பிறப்பாகி விடுகிறது என்பதே அது. எனவே தானும் சந்நியாசம் மேற்கொள்வது என்று உறுதி கொண்டார். என்ன ஆச்சர்யம்! ஆற்றில் நீர்மட்டம் குறைந்தது, அவரும் கரை ஏறினார். காஷாயமும் கமண்டலமுமாக வீட்டிற்குள் நுழைந்த கணவனைக் கண்ட மனைவி "இதென்ன கோலம்?" என்று கேட்க, அவருக்குப் புரிந்து போயிற்று.
துறவுக் கோலம் கொள்ளுமுன்பே அவள் கண்களில் மட்டும் அந்தக் கோலத்தில் தன்னைக் காட்டியவன் அந்தக் கிருஷ்ண பகவானே என்று தெளிந்து, நடந்தவற்றைக் கூறி அவள் மாங்கல்யம் காப்பாற்றப்பட்டதற்குத் தான் எடுத்த முடிவே காரணம் என்பதைப் புரிய வைத்தார். மனைவியும் உண்மையைப் புரிந்து கொண்டு அவருக்கு விடை கொடுக்கவே அவர் துறவறம் பூண்டு காசி சென்று அங்கிருந்த ஸ்ரீ சிவராமானந்த தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்று ஸ்ரீ£ நாராயண தீர்த்தர் என்ற நாமம் பெற்றார்.
இறைவன் அவரது பக்தியைச் சோதிக்கும் வகையில் அவருக்குத் தாங்கொணாத வயிற்று வலியை உண்டாக்கினார்.
வலியால் துடித்த நாராயண தீர்த்தர் இறைவனை வேண்ட, அன்றிரவு அவரது கனவில் இறைவன் சிவராமானந்த குரு உருவில் தோன்றி தெற்கே காவிரிக்கரை நோக்கிச் செல்லுமாறு பணிக்க நாராயண தீர்த்தரும் தெற்கு நோக்கித் தீர்த்த யாத்திரை புறப்பட்டார். பல புண்ணியத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு நடுக்காவேரி வந்தடைந்தார். அன்றிரவு தீர்த்தரின் கனவில் ஒரு முதியவர் உருவில் இறைவன் தோன்றி "நாளைக் காலையில் நீ விழிக்கும்பொழுது உன் கண்ணில் படும் விலங்கைத் தொடர்ந்து சென்றால் என்னைக் காண்பாய்" என்று கூறி மறைந்தார்.
மறு நாள் அவர் கண்ணில் ஒரு 'ஸ்வேத வராகம்' (வெள்ளைப் பன்றி) தென்பட்டது. இவரும் அதைப் பின்தொடர்ந்து ஓட அந்த வராகம் அவ்வூர் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் சென்று மறைந்தது. அக்கோயிலின் மூலவர் லக்ஷ்மி நாராயணர் அருளால் இவரது வயிற்று வலியும் தீர்ந்தது. இக்கோயில் அமைந்துள்ள பூபதிராஜபுரம் என்ற பெயருடைய் அந்தக் கிராமம் அந்தச் சம்பவம் நடந்தது முதல் வராகபுரி என்றாயிற்று. பின்னாளில் அதுவே மருவி வரகூர் என்று வழங்கப்படலாயிற்று. தீர்த்தரின் தெய்வீகத்தன்மையைப் புரிந்துகொண்ட அவ்வூர் மக்கள் அவரைத் தங்களுடனேயே தங்கிவிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்ளவே தீர்த்தரும் வரகூரையே தமது வசிப்பிடமாக்கிக் கொண்டார்.
பாகவதத்திலிருந்து கிருஷ்ணனின் பால லீலைகள் முதல் ருக்மணி கல்யாணம் வரை பாடி 'கிருஷ்ணலீலா தரங்கிணி' என்று பெயர் சூட்டினார் தீர்த்தர். ராதை என்னும் ஜீவாத்மா கிருஷ்ணன் என்னும் பரமாத்மாவை அடைந்த தத்துவத்தில் பாடிய ஜயதேவரின் 'அஷ்டபதி'க்கு இணையாகத் தீர்த்தரின் 'தரங்கிணி'யைக் கூறலாம். எப்படி குருவாயூரில் நாராயண பட்டாத்திரிக்கு அவர் பாடிய பாடல்களுக்குத் தலையசைத்துக் கிருஷ்ணர் இசைவு தந்தாரோ அதுபோலவே வரகூரில் பூஜைத் தலத்தின் திரைக்குப்பின்னால் வேங்கடேசப் பெருமாள் காலில் சலங்கை கட்டிக் கொண்டு கண்ணனாய் அவர் பாடலுக்கேற்ப நடனமாடித் தீர்த்தரை மகிழ்வித்திருக்கின்றார். வேங்கடேசப் பெருமாள் கோயிலின் வாயிலிலுள்ள துவாரபாலகருக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயப் பெருமாளும் இந்த நடனத்திற்கேற்ப தாளம் போட்டாராம். எனவே, இவரைத் 'தாளம் போட்ட ஆஞ்சநேயர்' என்று அழைக்கின்றனர் இவ்வூர் மக்கள். ருக்குமணி கல்யாணத்திற்குப் பின்னும் இவர் பாடத் தொடங்கிய போது சலங்கை ஒலி நின்றுவிடவே, தீர்த்தரும் இறைவனுடைய குறிப்பை உணர்ந்து அத்துடன் மங்களம் பாடி முடித்து விட்டார்.
வடமொழியில் தரங்கிணி என்றால் அலைகள் என்று பொருள். அருமையான சம்ஸ்க்ருத காவியம் படைத்து அழியாப் புகழ் பெற்று இறுதியில் வரகூரிலேயே சமாதி அடைந்த இந்த மகான் தாம் வாழ்ந்த திருத்தலத்திற்கு அழியாப் புகழும் சேர்த்திருக்கின்றார். ஆண்டு தோறும் வரகூரில் நாராயண தீர்த்தருக்கு ஆராதனை நடை பெற்று வருகிறது. கிருஷ்ணலீலா தரங்கிணியின் இறுதி சுலோகத்தின் பொருள் கீழ்வருமாறு அமைந்துள்ளது: "ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மலையில் கண்ணனின் கருணைமழை பெய்தது. அம்மலையிலிருந்து கிருஷ்ணலீலா தரங்கிணி என்ற ஆறு தோன்றிப் பெருக்கெடுத்தோடி பக்தர்களாகிய வயல்களில் பக்திப் பயிர் செழிக்கச் செய்யட்டும்".
டாக்டர் அலர்மேலு ரிஷி |