கார்த்திகை தீபம் - ஒரு பழந்தமிழ்ப் பண்டிகை
கார்த்திகை (அறுமீன்) விழா, பங்குனி விழா, ஓணம், இந்திரவிழா, உள்ளி விழா, காமன்பண்டிகை ஆகியன பற்றிச் சங்க இலக்கியத்தில் நிறையச் சான்றுகள் உள்ளன. ஓணம் இப்பொழுது மலையாளத்தில் மட்டுமே கொண்டாடுகிறார்கள்; ஆனால் மதுரைக் காஞ்சி என்னும் சங்கப் பாடல் சங்கக்காலத்தில் மதுரையில் அது பெரிய விழாவென்று தெரிவிக்கிறது. உள்ளி விழா இடுப்பில் மணிகளைக் கட்டி ஆடும் விழாவென்று அகநானூறு (368) தெரிவிக்கிறது.

கார்த்திகை விழா மிகப் பழைய தமிழர் திருநாளாகும். அறுமீன் (Pleiades) அல்லது கார்த்திகை என்ற விண்மீனின் பெயரில் விழா நடந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. கார்த்திகை முருகனுக்கு உகந்ததென்பது தெரிந்ததே. முருகனை வளர்த்த ஆறு தாய்மாரும் கற்பின் இலக்கணமான அருந்ததியும் ஆரல், ஆல் அல்லது கார்த்திகை எனப்படும் மீனாக வானத்தில் மின்னுவதாக “வடவயின் விளங்கு ஆல் உறை எழு மகளிர்” என்று பரிபாடல் (5:43) கூறும்.

கார்த்திகை விழாக் கொண்டாடும் சமயம்:

கார்த்திகை விழாக் கொண்டாடும் சமயம் கார்த்திகையும் மதியமும் (பௌர்ணமி) சேரும் நடு இரவாகும். அப்போது ஊர் வீதிகள் முழுதும் விளக்குகள் வரிசையாக நிரைந்திருக்கும்; வீடுகளில் மாலை தொங்கும். அந்த அழகிய கோலத்தை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

அகநானூற்றின் 141-ம் பாடல்

“...மாக விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குஉறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர..”

[மாகம் = மேல். உயரம்; விசும்பு = வானம்; மறு=கறை, நிலாவின் முயல் போன்ற கறை; கிளர = விளங்க; நடுநாள் = நள்ளிரவு; மறுகு = வீதி; தூக்கி = தொங்கவிட்டு; விறல் = வெற்றி; துவன்றிய = நெருங்கிய, கூடிய; விழவு = விழவு; அயர = கொண்டாட]

“உயர்ந்த வானத்தில் சிறிய முயல் போன்ற கறை திகழ, நிலா நிறைந்து அறுமீன் என்னும் கார்த்திகை விண்மீன் சேரும் மிகுந்து இருண்ட நள்ளிரவில் வீதிதோறும் விளக்கு வைத்து மாலை தொங்கவிட்டுத் தொன்றுதொட்டு வெற்றியுடைய முதிய ஊரில் பலரும் உடன் நெருங்கிய விழாவைக் கொண்டாட” என்பது பொருள்.

தீபங்களின் நெடிய வரிசை!

அறுமீனாகிய கார்த்திகைவிழாவின் போது இடும் விளக்குச் சுடரின் நெடிய வரிசையைப் போல் இலவம் என்னும் கோங்க மரங்களின் செம்பூக்கள் ஒரே நேரத்தில் மலர்ந்து காட்டில் அழகாகத் திகழ்வதை நற்றிணைப் பாடலொன்று கூறும்:

“அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போலப்
பல்பூங் கோங்கம் அணிந்த காடே”
(நற்றிணை: 202)

[பயந்த = தோன்றிய; செல் = பரவு; கொடி = வரிசை; பல் பூ = பல பூக்கள்; கோங்கம் = கோங்க மரம்]

“கார்த்திகை மீன் தோன்றும் தருமம் செய்ய உகந்த முழுநிலா நாளில் பரவுகின்ற ஒளிவிளக்கின் வரிசைபோலப் பூத்த பலபூக்களை அணிந்த காடு” என்கிறது.

மற்றப்படி அகநானூறு 185-ம் பாடலும் இலவ மரத்தின் பூக்கள் மலர்வதைக் கார்த்திகை விழாவின் விளக்கோடு ஒப்பிட்டுக் குறிக்கிறது.

“பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு”
(அகநானூறு: 185)

“பெருவிழாவாகிய கார்த்திகையில் இட்ட விளக்குகளைப் போலப் பலபூக்களோடு இலை இல்லாமல் மலர்ந்த இலவ மரங்களோடு” என்கிறது.

கார்த்திகை என்ற சொல்லோடு சான்று உண்டா?

கார்த்திகை என்ற சொல்லோடு கார்த்திகை விழாவைக் குறிக்கிறது களவழி நாற்பது என்னும் பதினெண்கணக்கு நூல். அந்நூல் சேரமன்னன் ஒருவனைக் செங்கட்சோழன் போரில் சிறைபிடித்தபோது பொய்கையார் என்னும் புலவர் பெருமான் பாடிச் சேரனைச் சிறை மீட்டது. அதில் போர்க்களக் காட்சியைக் “களத்து” என்று முடியும் நாற்பது வெண்பாக்களால் சித்திரிக்கிறார் பொய்கையார். அவற்றுள் ஒன்றில் வீரர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தாக்கி இரத்தம் விழும் காட்சி கார்த்திகை விழாவின் விளக்கைப்போன்று இருந்ததென்று உவமிக்கிறார்:

“ஆர்த்தெழுந்த ஞாட்பினுள் ஆளாள் எதிர்ந்தோடித்
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றின் கழிவிளக்கைப் போன்றவே
போர்க்கொடித் தானைப் பொருபுனல்நீர் நாடன்
ஆர்த்துஅமர் இட்ட களத்து.”
(களவழிநாற்பது:17)

[ஞாட்பு = போர்; எறி = வெட்டு; குருதி = இரத்தம்; சாறு = விழா; கழி = மிகுந்த; தானை = சேனை; புனல் = தண்ணீர், ஆறு; அமர் = போர்]

“போர்க்கொடி உயர்த்திய சேனையுடையவனும் மோதும் ஆற்றுநீரையுடைய நாட்டானுமாகிய சோழன் ஆரவாரித்துப் போரிட்ட களத்தில் ஆளாள் எதிர்ந்து ஓடித் தாக்கி வெட்ட விழுகின்ற ஒளிரும் இரத்தம் கார்த்திகை விழாவில் இடும் மிகுந்த விளக்குகளைக் போன்றன” என்று சொல்கிறார்; இங்கே கார்த்திகை என்ற பெயரிலேயே விழாவைக் குறிப்பது நேரடிச் சான்றாகும்.

சிந்துவெளி நாகரிகம் மற்றும் வடமொழி வேத அறிஞர்களுள் தலைசிறந்த ஆச்கோ பார்ப்போலா என்னும் பின்லாந்து நாட்டு அறிஞர் கார்த்திகை, முருகன் ஆகிய கருத்துகள் கி.மு 2000க்கு முன்பே அந்த நாகரிகத்தில் ஊன்றியிருந்ததென்று சொல்கிறார் (“Deciphering the Indus Script”, Asko Parpola, Cambridge Press, 1994). எனவே இந்தக் கார்த்திகைத் தீபம் மிகப் பழைய பண்டிகை என்பது தெளிவு.

எனவே நாம் கார்த்திகை விழாவைப் பழைய முறையில் அதற்குரிய முதன்மை குன்றாமல் கொண்டாட வேண்டும். தீபாவளிப் பண்டிகைக்கு மட்டுமோ அல்லது பொங்கலுக்கு மட்டுமோ தமிழர்கள் முதன்மை கொடுத்து அந்தக் கார்த்திகை விழாவையும் ஓணம் உள்ளிவிழா போன்று தமிழர் வாழ்விலிருந்து மறக்கடிக்கும் பத்து உள்ளது. அது நிகழாமல் தமிழ்க்குடும்பங்கள் கவனிக்கவேண்டும். அந்த இரண்டு விழாக்களுக்கும் பழைய இலக்கியங்களில் சான்றுகள் இதுவரை கண்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கவில்லை. வடவமெரிக்கத் தமிழ்மன்றங்கள் தீபாவளி விழா என்பதைத் தீபாவளி-கார்த்திகை விழா என்று கூட்டு விழாவாகவாவது கொண்டாடவேண்டும். பத்திரிகைகளும் கார்த்திகை விழாவிற்குரிய பெருமையை அளித்துச் சிறப்புமலர்கள் வெளியிடவேண்டும்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com