ஐசிஐசிஐ இன்ஃபோடெக் ஸ்ரீனிவாசன்
ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனம் வெகு வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய இந்திய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று. அதன் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயலாட்சி அலுவலருமான (Managing Director and Chief Executive Officer) வி. ஸ்ரீனிவாசன் திருக்குறள் காட்டும் மேலாண்மை வழிமுறைகளைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுத முடியும் என்பவர். கணக்குத் துறையில் சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கத்தை வென்ற இவர் பட்டயக் கணக்கர் (Charted Accountant) தேர்விலும் முன்னணி இடத்தைப் பெற்றவர். விலைமதிப்பீட்டுக் கணக்கர் (Cost Accountant), நிறுமச் செயலர் (Company Secratary) என்ற தகுதிகளையும் பெற்ற இவர் 1980இல் ஐசிஐசிஐ குழுமத்தில் இணைந்தார். தனது திறமையால் ஐசிஐசிஐயின் செய்முறைத் திறனைப் பன்மடங்கு கூட்டி வியக்கத் தக்க சாதனைகள் படைத்த இவர், ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனத்தை 2000 முதல் நடத்தி வருகிறார். உலகப் பொருளாதார மந்த நிலையிலும் ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனத்தை வளர்த்து வரும் திரு ஸ்ரீனிவாசன், இன்று பரபரப்பாகப் பேசப்படும் இந்தியா அவுட்சோர்ஸிங் அலையைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர். இந்தியாவில் பிறந்த ஓர் உலகளாவிய நிறுவனம் எப்படி தரக்கட்டுப்பாடு, பணியாளர் உறவுகள், உற்பத்திச் செலவுகள், வியாபாரச் சிக்கல்கள் போன்றவற்றை அணுகுகிறது, அவுட்சோர்ஸிங் அலையைப் பற்றிக் கவலைப்படும் அமெரிக்கத் தமிழர்களுக்கு இவரது அறிவுரை என்ன?
கே: ஐசிஐசிஐ இன்·போடெக் பற்றி சொல்லுங்களேன்...?
ப: ஐசிஐசிஐ இன்·போடெக் (ICICI Infotech) இந்தியாவின் ஐசிஐசிஐ வங்கியால் 1999ல் தொடங்கப்பட்ட நிறுவனம். எங்கள் கம்பெனியில் இன்றும் 93 சதவிகித பங்கு இவர்களிடமும் மீதி 7 சதவிகிதம் எமிரேட்ஸ் வங்கி (துபாய்) யிடமும் உள்ளது. முதலில் ஐசிஐசிஐ குழுவின் ஒவ்வொரு கம்பெனியிலும் தகவல் தொழில்நுட்பத் துறை தனித்தனியே இருந்தது. இவற்றை ஒன்றுபடுத்தி மொத்த அமைப்புக்கும் தொழில்நுட்ப அனுகூலம் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இன்·போடெக் நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள்.
துவக்கத்தில் சில மாதங்கள் இந்நிறுவனம் ஐசிஐசிஐ குழும வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. பிறகு வெளியிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் நியூஜெர்சியில் அலுவலகம் திறந்தோம். 2000-01ல் அமெரிக்காவில் இரண்டு மூன்று சிறு நிறுவனங்களை வாங்கி இணைத்தோம். பின் அடுத்தடுத்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன் என்று பல இடங்களில் விரிவுடுத்தினோம். அண்மையில் சிட்னியில் ஆரம்பித்திருக்கிறோம்.
இதில் இரண்டுவித முக்கிய அணுகுமுறை களைக் கடைப்பிடித்தோம். முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மென்பொருள் சேவைகள் (software services) மற்றும் வெளிமண்ணில் (offshore) செய்வது மற்றொன்று இந்தியா உள்பட்ட ஆசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் மென்பொருள் தயாரிப்புகளை (software products) விற்பனை செய்வது என்பதே அவை.
வங்கி, காப்பீடு (insurance) மற்றும் ERP, CRM, SCM போன்றவைகளில் எங்கள் மென்பொருள் தயாரிப்புகள் (software products) பெருமளவில் உள்ளன. இவற்றை ஆசியா முழுவதும் நாங்கள் விற்பனை செய்கிறோம். சமீப காலமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனை தொடங்கியிருக் கிறோம். அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமாக மென்பொருள் சேவைகள்தாம் (services) செய்து கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகத் மென்பொருள் தயாரிப்புகளையும் கொண்டு வர முயல்கிறோம்.
கே: மென்பொருள் தயாரிப்புகளுக்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியா உள்பட அதிகம் முனைவதாகச் சொன்னீர்கள். இந்தியாவில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா?
ப: மிகவும் சரி. இந்தியாவில் நல்ல விற்பனை இருக்கிறது. அமெரிக்காவில் வழிவழிவந்தவை (lagacy systems) அதிகம். அதுமட்டுமல்லாமல் அவர்களே சொந்தமாகவும் மென்பொருள் தயாரிப்புகள் செய்கிறார்கள். ஆனால் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை யாரும் சொந்த மென்பொருள் தயாரிப்புகளை உண்டாக்குமளவுக்கு முற்படவில்லை.
பத்து வருடங்களுக்கு முன்னால் நீங்கள் பார்த்தீர்களானால் ஒரு மென்பொருளைக் கருத்திலிருந்து புழக்கத்துக்குக் கொண்டு வர இரண்டு அல்லது மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று நேரம் மிக முக்கியமான ஒன்று. உடனடியாகப் பயன்படுத்தும் மென்பொருள் தயாரிப்பை எதிர்பார்க்கிறார்கள். ஒரு மென்பொருள் தயாரிப்புக்கு இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க யாருக்கும் நேரமில்லை. தங்களுக்கு வேண்டிய மென்பொருள் 'சந்தையில் கிடைக்கிறதா? கிடைக்கும் மென்பொருள் தயாரிப்பை வைத்து எப்படி வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்?' என்கிற வகையில்தான் யோசிக்கிறார்கள். ஆகையால் மென்பொருள் தயாரிப்புக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஆசிய நாடுகள் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
கே: மென்பொருள் தயாரிக்கும் திட்டங்களுக்கு முதலீடு அதிகம். அதன் மீதான வருமானம் (return on investment) மெல்லத்தான் வரும். இந்திய நிறுவனங்களுக்கு இதைப்பற்றிய சிந்தனை இருக்கிறதா?
ப: உலக அளவில் மென்பொருள் தயாரிக்க ஆகும் செலவில் 15 அல்லது 20 சதவீத முதலீட்டில் இந்தியாவில் மென்பொருள் கிடைக்கிறது. உதாரணமாக, ஒரு வங்கி சுமார் 2 மில்லியின் டாலர் செலவு செய்து தயாரிக்கும் மென்பொருளை இந்தியாவில் ஒரு வங்கி கிட்டத்தட்ட 200,000 அல்லது 300,000 டாலர் செலவில் தயாரித்துவிடுகிறது. அப்படிச் செய்யும் போது எளிதில் முதலீட்டுக்கான வருமானம் கிடைக்கிறது.
கே: அவ்வளவு குறைந்த செலவில் இந்தியாவில் உருவாக்க முடிகிறது என்றால் இந்தத் மென்பொருள் தயாரிப்பை நீங்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் விற்பனை செய்வதில் என்ன சவால் இருக்கிறது?
ப: இரண்டு மூன்று சவால்கள் உள்ளன. அமெரிக்க நிறுவனங்கள் இடர்ப்பாடுகளைத் தவிர்ப்பதில் (risk averse) கவனமாக இருப்பார்கள். புதிதாக வரும் யாரையும் உடனே ஏற்றுக்கொண்டுவிட மாட்டார்கள். "உங்கள் நிறுவனத்துக்கு நல்ல பெயர் (brand) இருக்கிறதா? ஒரு 500 வாடிக்கையாளர்களுக்கு விற்றிருக்கிறயா? எவ்வளவு பெரிய நிறுவனம்? அமெரிக்காவில் எவ்வளவு விற்றிருக்கிறாய்?" என்று துருவித் துருவிக் கேட்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் ஓர் உலகளாவிய (global) நிறுவனத்தில் CEOவாக இருக்கும் எனக்கு இந்தியாவிலோ, சிங்கப்பூரிலோ கிரெடிட் கார்டு வேண்டுமென்றால் "உனக்கு வீடு இருக்கிறதா, வேறு சொத்து இருக்கிறதா, எவ்வளவு சம்பளம், எத்தனை ஆண்டுகளாகச் சம்பாதித்திருக்கிறாய், உன் தகுதி என்ன" என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து, பின் தந்துவிடுவார்கள்.
ஆனால் அமெரிக்காவில் அப்படி அல்ல. அவர்கள் அவர்கள் என் சம்பளம், எத்தனை ஆண்டுகளாகச் சம்பாதித்திருக்கிறேன், உலகளாவிய கிரெடிட் கார்டுகளை எவ்வளவு ஆண்டுகளாகப் புழங்கி வந்திருக்கிறேன் என்று எதையுமே பார்க்கமாட்டார்கள். இங்கு ஒரு EquiFax போல ஓரிரு கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றின் 'கிரெடிட் ரேட் ரிப்போர்ட்டில்' உன் பெயர் இல்லை. அதனால் உனக்கு கார்ட் கொடுக்க முடியாது என்பார்கள். ஆக இவர்கள் நிர்ணய முறையே முற்றிலும் வேறுபட்டது.
நீங்கள் சொல்வது சரி. அடிப்படை முதலீடு குறைவாக இருப்பதால் நாம் நிறைய விற்பனை செய்யமுடியும். அதற்கு முதலில் நல்ல பெயரை (brand image) ஈட்ட வேண்டும். அதற்கடுத்து வாடிக்கையாளர் பரிந்து ரையை வளர்க்க வேண்டும். அப்படிப் பரிந்துரைப்பவர்கள் அமெரிக்க வாடிக் கையாளராக இருக்கவேண்டும். எனக்கு துபாயில் அல்லது இந்தியாவில் பரிந்துரைப்பவர்கள் இருக்கிறார்கள் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த பரிந்துரையைச் சில நேரங்களில் இலவசமாக நம் மென்பொருள் தயாரிப்பைக் கொடுத்துக்கூட வாங்க வேண்டியிருக்கும். அதையும் தாண்டிவிட்டால், பிராண்ட் (brand) முக்கியம். இல்லாவிட்டால் இங்கு பெரிய நிறுவனங்களில் நாம் நுழைய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் பட்டியலில் நம் பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் இவை எல்லாம் அதிகம் பார்க்க மாட்டார்கள். இத்தகைய விஷயங்களை எல்லாம் நாம் சரிக்கட்டிக் கொண்டு நம் பொருளை இங்கு விற்பனை செய்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம்.
கே: அமெரிக்காவில் கணினியைப் பயன்படுத்தத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டதால் அவர்கள் இத்தகைய வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கலாம். நம் நாட்டில் இப்பொழுதுதான் கணினி மெல்ல நுழைந்துள்ளது. ஆகையால் இன்னும் இதுபோல் வழிமுறைகளைக் கையாளாமல் இருக்கலாம்.
ப: இவர்கள் இடர்ப்பாடுகளைத் தவிர்ப்பவர்கள் (risk averse). எல்லாமே வழிமுறைப்படி செய்கிறவர்கள். நம்பிக்கையின் பேரில் ஆசியர்களைப் போல எதையும் செய்துவிடமாட்டார்கள். இதைக் கலாச்சார மாறுபாடு என்று சொல்வேன்.
கே: இந்தக் கலாச்சார மாறுபாடுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...
ப: நான் ஒரு வங்கிக்கான மென்பொருள் தயாரிப்போடு இந்தியாவில் ஒரு தனியார் வங்கிச் சேர்மனை சந்தித்து பேசினேன். அந்தத் மென்பொருள் தயாரிப்பு முதன்முலாக இந்தியாவில் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவருக்கு என் மேலும் ஐசிஐசிஐ மேலும் மிகவும் நம்பிக்கை. தன்னுடைய மற்ற அதிகாரிகளிடம் எங்கள் மென்பொருள் தயாரிப்பை வாங்கச் சொல்ல, அவர்கள் ஆர்டர் செய்து விட்டார்கள்.
ஆனால் அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு நாம் சென்று நம் பொருளை இத்தனை எளிதாக விற்பனை செய்ய முடியாது. 'எத்தனை வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் இந்த பொருளை விற்பனை செய்திருக்கிறீர்கள்? குறைந்தபட்சம் இரண்டு வாடிக்கையாளர்களிடமாவது பரிந்துரை வாங்க வேண்டும்' என்பார்கள். இப்படி முதல் வாடிக்கையாளரைப் பிடிப்பது மிகவும் சிரமம். எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் இங்கு அணுகுமுறையே மிகவும் வித்தியாசமானது. இதைத்தான் நான் கலாச்சார மாறுபாடு என்று சொன்னேன்.
கே: Offshore development பற்றி வெகுவாகச் செய்திகள் வருகின்றன. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
ப: நிறைய வேலைகள் இப்போது வெளிமண்ணு(offshore)க்குப் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அரசியல் மற்றும் மக்களிடையேயும் இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று எதிர்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. செய்தித் தாள்களிலும், அரசுத் துறைகளுடனான கூட்டங்களிலும் என்று எங்கு போனாலும் இதைப் பற்றித்தான் பேச்சு. ஆனால் நிறுவனங்கள் எப்படி லாபகரமாகச் செயல்படலாம், செலவை எப்படிக் குறைக்கலாம் என்றுதான் பார்க்கிறார்கள். ஆகவே, இன்னும் வெளிமண்ணுக்கு வேலைகள் அதிகம்தான் போய்க்கொண்டிருக்கிறது. யாரும் தடுக்கவில்லை.
கே: சி என் என் வழங்கும் லூ டாப்ஸ் மனி லைன் (CNN's Lou Dobbs Money Line) நிகழ்ச்சியில் "அமெரிக்கா ஏற்றுமதி" ("Exporting America") என்ற தொடரைப் பார்த்திருப்பீர்கள். அதில் நியூ ஜெர்சி மாநிலத்தின் வேலை யிழந்தோருக்கு உதவும் அழைப்பு மையப் (Call Center) பொறுப்பை இந்தியாவுக்கு அனுப்பியது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. வேலைகளை ஏற்றுமதி செய்வதைச் சட்டப்படி தடுப்போம் என்று நியூ ஜெர்சி அரசியல்வாதிகள் எச்சரித் தது நாடெங்கும் அலையெழுப்பியது. இது போன்ற எதிர்ப்புகள் வலுக்கின்றனவா?
ப: அப்படி ஒன்றும் எதிர்ப்பு அலை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே போனாலும் ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு அந்த வேலையைக் கொடுப்பார்கள். அவர்கள் அந்த வேலையை இந்தியாவில் செய்து முடிப்பார்கள். இப்போது இந்திய நிறுவனங்கள் வெளிமண்ணில் வேலை செய்வதைவிட அமெரிக்க நிறுவனங்கள்தாம் இந்தியாவில் வெளியெடுப்பு (outsource) வேலைகளை அதிக அளவில் செய்கின்றன. தகவல் தொழில்நுட்பம் மட்டுமல்ல BPO, அழைப்பு மையம் போன்ற வேலைகளும் நிறைய வெளிமண்ணுக்குச் சென்று கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் இந்திய நிறுவனங்களைவிட அமெரிக்க நிறுவனங்களே அதிக அளவில் நிறுவியுள்ளன. இத்தகைய மாற்றங்களால் இந்தியாவில் சம்பளங்கள் கொஞ்சம் கூடியிருக்கின்றன என்றே சொல்லலாம்.
கே: BPO என்றால் என்ன?
ப: Business Process Outsourcing என்பது. இதில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று அழைப்பு மையம் (call center) மற்றொன்று பின்புல அலுவலகச் செயல்முறை (back office processing). இந்தியாவில் ஏராளமான அழைப்பு மையங்கள் உருவாகியுள்ளன. ஐசிஐசிஐயின் ஒன் சோர்ஸ் (One Source), விப்ரோவின் ஸ்பெக்ட்ரா மைண்ட் (Spectra Mind) ஆகியவற்றைச் சொல்லலாம். அமெரிக்காவில் தொலைபேசி மூலமாக விசாரித்த தகவல்கள் பலவற்றை இப்போது இந்தியாவின் அழைப்பு மையங்கள் கையாளுகின்றன. இது தொடர்பான வேலைவாய்ப்பு இந்தியாவில் பெருகியுள்ளது. முன்னெல்லாம் மருத்துவ ஆவணப் பதிவு (medical transcription) வேலை நடைபெற்றுக்கொண்டிருந்து. இப்போது விமானப் பயணச் சீட்டுகள், காப்பீட்டுத் தொகை பெறும் விண்ணப்பம் கையாளுதல் போன்ற வேலைகளும் இந்தியாவிற்கு சென்று கொண்டிருக்கின்றன.
கே: காப்பீடு, கிரெடிட் கார்டுகள், மருத்துவ ஆவணங்கள் போன்றவை மூலம் இந்தியாவில் இருப்பவர்களுக்கு அமெரிக்கர்களின் எல்லாவிதமான தனிநபர் விவரங்களையும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. இவற்றைத் தவறாகப் பயன்படுத்தாமலிருக்க மிகுந்த கண்ணியம் இந்தியக் கம்பெனிகளுக்குத் தேவைப்படுமே? ஒரு நபரின் அடையாளம் திருடுதல் (identity theft) இன்று மிகப் பெரிய பிரச்சினை. அமெரிக்காவில் இதைச் சமாளிக்கப் போதிய சட்டங்கள் உள்ளன. இந்தியாவில் இத்தகைய சட்டங்கள், நெறிமுறைகள் உள்ளனவா? இதை ஐசிஐசிஐ எப்படிச் செய்கிறது?
ப: நாங்கள் பின்புல அலுவல்கள் (back office work) செய்வதில்லை. ஆனால் எங்களது தோழமை நிறுவனம் செய்கிறது. இந்தப் பணி செய்யும் நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திடமிருந்து அதற்கான எல்லாவிதமான விதிமுறைகளுக்கும் கட்டுப்படுவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுத்தான் பணியை எடுத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் அழைப்பு மையத்தில் சேருபவர்களிடமிருந்து பணி நியமனம் அளிக்கும் போதே இதற்கான ஒப்பந்தக் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தனிநபர் விவரங்களைப் பார்க்க முடியுமே தவிர முழு தகவல் தளமும் (database) இவர்களுக்குத் தரப்படுவதில்லை.
அப்படிப்பட்ட சட்டங்கள் அவசியம் இல்லை என்பதே என் கருத்து. இன்னொரு காரணம் பெரிய பன்னாட்டுக் கம்பெனிகள் (GE, SAP, AIG, HSBC) தமது கிளை நிறுவனங்களைத் தாமே இந்தியாவில் அமைத்துக்கொள்கிறார்கள். இதில் நூறு சதம் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது. (ஒருவகையில் பார்த்தால் இதனால் வேலைவாய்ப்பு, அன்னியச் செலாவணி ஆகியவை பெருகினாலும், இந்தியத் தொழில் முனைவோருக்குப் பயனில்லை.) அவர்களுக்கு நம்பிக்கை, விசுவாசம் ஆகியவை பிரச்சினையே அல்ல. ஆகவே, இந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் புதிதாகச் சட்டதிட்டங்கள் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.
கே: அழைப்பு மையம் அல்லது தகவல் தொழில்நுட்பம் வெளியெடுப்பு (outsourcing) என்றாலே இந்தியாதான் நினைவுக்கு வருகிறது. அதனால் பயிற்சி பெற்ற பணியாளருக்குத் தட்டுப்பாடு வந்து, செலவுகள் கூடியுள்ளனவா? அப்படியானால் நமது போட்டியாளர்களான சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளுக்கு வியாபாரம் நகரலாம். அப்படி நகரத் தொடங்கி விட்டதா?
ப: இன்னும் தட்டுப்பாடு வரவில்லை. ஏனென்றால் அழைப்பு மையங்களுக்குச் சாதாரணப் பட்டதாரிகள் மட்டும்தான் தேவை. இந்தியாவில் பட்டதாரிகள் ஏராளம். ஆங்கிலத்தை நன்றாக உச்சரிக்கும் நகர்ப்புறப் பட்டதாரிகள் இதற்குக் கிடைக்கிறார்கள். பேசுகிற அவசியமில்லாத பின்புல அலுவல் செய்வதற்கு எந்தப் பட்டதாரிக்கும் பயிற்சி கொடுக்க முடியும். ஆனாலும் செலவுகள் எக்கச் சக்கமாக ஏறிக்கொண்டிருக்கின்றன என்பேன். இப்போது பார்த்தால் கடந்த ஒரு வருடத்தில் சம்பளமே 30 - 40 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
மேலும், ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனம் ஆட்கள் எடுத்துக் கொள்வதால் ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 30 சதவிகிதம் பணியாளர் மாறுகின்றனர். இதனால், அவர்களுக்கு தக்கவைக்கும் செலவு (retaining cost) கூடி வருகிறது. இவ்விரண்டு விஷயங்களையும் யார் கட்டுப்படுத்தி டெலிவரி செய்கிறார்களோ அவர்கள்தான் தாக்குப் பிடிக்க முடிகிறது. சின்ன நிறுவனங்களால் இது முடியாது.
கே: நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
ப: ஐசிஐசிஐ இந்தியாவில் பெயர் பெற்ற நிறுவனம். இதில் வேலை செய்தால் நம்மை நிரந்தரமாக வைத்திருப்பார்கள், வெளியே அனுப்பிவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இரண்டாவதாக, நாங்கள் அதிகம் பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு வசதியான சூழல் ஏற்படுத்துகிறோம். இப்படி இருப்பதால் ஓரளவு எங்கள் தக்கவைக்கும் விகிதம் மிக உயர்வு என்று சொல்லலாம். என்றாலும் நாங்களும் 100 சதவிகிதம் தக்கவைக்க முடியவில்லை. போன 6, 7 மாதங்களாக 12 - 15 சதவிகிதம் பணியாளர் சுழற்சி இருக்கிறது. போன வருடம் பார்த்தால் 6 சதவிகிதம் கூட இல்லை.
ஆனால் மென்பொருள் துறையில பார்த்தால் இரண்டு மூன்று வருடமே ஆன கீழ்மட்டப் பணியாளரே வெளியே போகிறார்கள். நடு மற்றும் மேல் மட்டத்தில் சுழற்சி அதிகம் இல்லை. அதனால் எங்களால் சமாளிக்க முடிகிறது. சாதாரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை தான் ஊதிய உயர்வு கொடுப்போம். இந்த ஆண்டு நல்ல செயல்பாட்டைப் பாராட்டி அக்டோபர் மாதம் ஒரு குறிப்பிடத்தக்க இடைக்கால உயர்வு கொடுத்திருக்கிறோம்.
கே: நீங்கள் செலவை மட்டுப்படுத்து வற்காக நீங்களே சீனா போன்ற இடங்களில் அலுவலகம் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?
ப: இப்போதைக்கு இல்லை. சீனா, பிலிப்பைன்ஸ் இங்கேயெல்லாம் மென்பொருள் பொறியியலாளர் பெரு மளவில் கிடைப்பது சிரமம். இப்படி வருவதற்கு ரொம்ப நாட்கள் ஆகலாம். தவிர, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் சில கலாசார வேறுபாடுகள் உள்ளன.
இந்தியாவில் நாம் சுயமாகச் சிந்தித்து செயல்பட்டு ஆக்கபூர்வமாக செயல்படுகிற வழக்கம் உண்டு. ஆனால், சர்வாதிகார ஆட்சியின் கீழ் வளர்ந்ததால் சீனர்கள் சொன்னதைச் செய்வதில் வல்லவர்கள். அதனால்தான் அவர்கள் பொருள் உற்பத்தித் துறையில் பிரகாசிக்கிறார்கள். இப்போதுதான் அங்கும் மேல்படிப்பு, சுயசிந்தனை முதலியவை வரத் தொடங்கியிருக்கின்றன. நான் சீனாவுக்குப் போயிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். இந்தியாவைவிட மென்பொருள் துறையில் அவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பின்தங்கி உள்ளார்கள்.
கே: அவுட்சோர்ஸிங் பொறுத்தவரை குறைந்த முதலீடுதான் இந்தியாவின் ஒரே கவர்ச்சியா?
ப: அது மட்டுமல்ல. வேலையின் அளவும் தரமும்கூடத்தாம். இன்று அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் எல்லோரும் 15 மணி நேரம் வேலை செய்யத் தயங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் 15 மணிநேரம் வேலை செய்யக் காத்திருக் கிறார்கள். அதை நான் என் அனுபவத்தில் காண்கிறேன். ஆகவே உற்பத்தி அளவு அமெரிக்காவைவிட அங்கு அதிகம். எங்கு நம்மால் வேலை அளவை அதிகப்படுத்த முடிகிறது என்று நான் இங்கேயும், இந்தியாவிலும் பார்க்கிறேன்.
அது மட்டுமல்ல, அமெரிக்காவில் ஒருவர் அதிக வேலை செய்தால் தங்களுக்கு லாபத்தில் பங்கு என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இத்தகைய கேள்விகள் இந்தியாவில் வருவதில்லை. மேலும் சனி, ஞாயிறுகளில் கூட வந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறார்கள். வேலையை உடனுக்குடன் செய்து முடிக்க முடியும்.
இந்தியாவில் இருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை, எப்படியாவது வேலையை முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஆகியவை அமெரிக்காவில் கிடையாது. எதற்கெடுத்தாலும் கேள்விகள்.
கே: மென்பொருள் துறையை விடுங்கள். பொருள் உற்பத்தியில் எடுத்துக் கொண்டால் ஜப்பான் மாதிரி இந்தியாவில் தரம் இல்லை என்கிற எண்ணம் உண்டே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: தரம் என்றால் விலையையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். தவிரவும், இன்று பல விஷயங்களில் இந்திய நிறுவனங்கள் முன்னேறியுள்ளன. குறிப்பாக டாட்டா, பிர்லா, மஹிந்திரா என்று பல நிறுவனங்கள் இன்றைக்கு இளஞைர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் உலக நாடுகளைப் பார்த்தவர்கள். அவர்களால் வளர்ந்த நாடுகளின் தரக்கட்டுப்பாடு எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடிகிறது. அதற்கான விழிப்புணர்ச்சி இந்தியாவில் வந்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
(உரையாடல், மேலும் தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம், சந்திரபாபு நாயுடு, மின்-ஆளுமை - eGovernance, இந்தியத் தலைவர்கள், இந்திய மென்பொருள் வாடிக்கையாளர், திருக்குறளில் நிர்வாகம் - என்று இப்படிச் சுவையாகத் தொடர்ந்தது. ஸ்ரீனிவாசன் அவர்கள் சொன்னவை அடுத்த இதழில்)
தொலைபேசிப் பேட்டி: பிரகாஷ் ராமமூர்த்தி, தொழில்நுட்பத் துணைத்தலைவர், ஆப்லிக்ஸ் நிறுவனம்
உதவி: கதிரவன் எழில்மன்னன், ரகு பத்மநாபன், மணி மு. மணிவண்ணன்
தொகுப்பு: கேடிஸ்ரீ, மதுரபாரதி, மணி மு. மணிவண்ணன் |