நாரண துரைக்கண்ணன்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுத்துலகிலே நுழைந்த பெரும்பாலோர் சமூகப்பிரக்ஞை உள்ள எழுத்தாளர் களாகவே வளர்ந்து வந்தனர். தமது எழுத்துக்கும் செயலுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்பதைப் புரிந்து இலட்சியபூர்வமாக செயல்பட்ட எழுத்தாளர்கள் அதிகம். அவர்களுள் ஒருவரே ஜீவா என்கிற நாரண துரைக்கண்ணன் (1906-1996).

துரைக்கண்ணன் சென்னை மயிலாப்பூரில் எளிமையான குடும்பத்தில் 24.8.1906 அன்று பிறந்தார். சிறுவயது முதல் இசைப்பயிற்சியும் நுண்கலையில் ஈடுபாடும் அவருக்கு இயல்பாக வாய்க்கப் பெற்றிருந்தன. அவர் நடராசன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்.

1924இல் சுதேசமித்திரனில் தனது முதல் கட்டுரையை எழுதினார். அதே ஆண்டில் முதல் சிறுகதையும் வெளியாயிற்று. 1931இல் புருஷோத்தமன் கோனாட்சியின் வீழ்ச்சி என்ற நாவலை எழுதினார். 1932இல் ஆனந்த போதினி ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

இவ்வாறு துரைக்கண்ணன் படைப்புலகில் நுழைந்து பல்வேறு பதவிகளுக்கு உரிமையுடையவராக வளர்ந்தார். தமிழ்ப் புலவோர், எழுத்தாளர், அரசியல் தலைவர் எனப் பலராலும் நேசிக்கப்பட்டார்.

துரைக்கண்ணன் சிறு வயது முதல் காந்தியத்தின் மீது பற்றுக் கொண்டிருந்தார். காந்திய வாழ்முறையை உயிராக நேசித்தார். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற துடிப்புமிகு இளைஞராகவே வளர்ந்தார். 1927இல் 'தீண்டத்தகாதார் யார்?' என்ற நாடகத்தை எழுதிப் பல இடங்களிலும் மேடையேற்றினார்.

அக்காலகட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். காந்தியைப் பலமுறை சந்தித்து உரையாடி வந்துள்ளார். சமூகப்பற்றும், சீர்திருத்த நோக்கமும், தோழமை உணர்வும், கூட்டுச் செயல்பாடும் மிக்கவராக இருந்தார். பல்துறை ஆளுமையாளராக உருவாக வேண்டிய சமூகத் தேவை அக்காலத்தில் நிலவியது. இதற்கு துரைக்கண்ணனும் விதிவிலக்கு அல்ல.

பாரதி பக்தராகவும் துரைக்கண்ணன் இருந்தார். தமிழகத்தில் பாரதி பாடல்களை எங்கும் எதிரொலிக்கச் செய்தவர்களில் துரைக்கண்ணனும் ஒருவர். பாரதி பாடல்கள் நாட்டுடமை ஆவதற்கு வெகுமுயற்சி எடுத்துக் கொண்டவர். ஆக, பாரதியின் சிந்தனைப் புலம் அவருக்கு ஊக்கியாகவும் திசை காட்டும் கருவியாகவும் அமைந்திருந்தது.

பல்வேறு இதழ்களிலும் துரைக் கண்ணனின் கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. பல இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றார். முழுநேரமும் தன்னை எழுத்துப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டார்.

வளர்ந்துவந்த இதழியல் துறை தமிழ் நவீனமயமாதலில் அதிக அக்கறை காட்டியது. தமிழ்மொழி நடையில் புதியபோக்குகள் உருவாயின. இவ்வாறான உருவாக்கத்தில் நாரண துரைக்கண்ணனும் பங்கு கொண்டார். தானும் வளர்ந்தார்.

இதழியல் சார்ந்த வெகுசன வாசிப்புப் பரவல் வேறொரு மட்டத்தில் கல்கி தலைமையில் விரிவடையத் தொடங்கியது. அப்போது வேறு சில தடங்களிலும் இலக்கிய இதழ்கள் தோன்றின. தமிழ் உரைநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தின. கல்கி வழிவந்த மரபுக்கு மாற்றாக வேறொரு அணி உருவாக உழைத்தவர்களுள் துரைக்கண்ணனும் முக்கியமானவர் என்று எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

துரைக்கண்ணன் நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், வாழ்க்கை வரலாறு என எழுதியவை அதிகம். இலக்கியம் பற்றிய ஓர் கருத்துநிலைத் தேடல் அவரிடம் தெளிவாக வெளிப்பட்டது. குறிக்கோள் உடையதே இலக்கியம் என்ற கருத்தை அவர் வலுவாக ஏற்றுக் கொண்டவர். அவரது படைப்புலகம் இந்தக் கருத்து நிலைசார் தளத்திலேயே தொழிற்பட்டது.

''நல்ல இலக்கியத்துக்கு இருக்க வேண்டிய முக்கியமான நான்கு அம்சங்களில் சொல்நயம், பொருள்நயம், கற்பனை ஆகியவற்றுடன் மக்கள் உள்ளத்தை உயர்த்தும் பண்பு என்ற ஒன்று உயிர் போன்றதாகும். விழுமிய பொருள் பெற இயங்குவதே இலக்கியமாகும்'' என்ற கூற்று அவரது படைப்புலகத்தை, படைப்பாளு மையைப் புரிந்து கொள்வதற்கான திறவுகோல்.

''இலக்கியம் வாழ்க்கைக்காக'' என்னும் கருத்தை அடியொற்றியே துரைக் கண்ணனின் படைப்புலகு இயங்கியது. ஆனாலும் அவரது படைப்புலகம் மரபு வழியிலான தன்மை யுடையது. அவர் படைத்தளித்த இலக்கிய வகையில் யாதும் அந்தக் குறித்த இலக்கிய வகையின் தளமாற்றத்துக்கும் செழிப்புக்கும் துணை புரிந்தவை எனக் கூற முடியாது.

தான் வாழ்ந்த சமூகச்சூழலை மையப்படுத்தி சமூகத்தில் காணப்படும் குறை பாடுகளைக் களைய எழுத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார். இதனால் இலக்கியத்தின் ஆக்கத் தன்மையிலும் அதன் அழகியலிலும் கலைத்துவத்திலும் அதிகம் அக்கறை படாதவராகவே இருந்துள்ளார்.

ஆனாலும் அவரது படைப்புத் தொகுதி அவருக்கான காலத்தகுதியை வழங்கக் கூடியதாகத்தான் உள்ளது. வெகுசன வாசிப்புப் பரவலாக்கத்தில் கல்கியின் தளம், ஜெயகாந்தனின் தளம் என்பது போல் துரைக்கண்ணனின் தளம் என்பதாகப் பிரிந்து வேறுபடுத்தி நோக்கத்தக்க பண்புகளைக் கொண்டிருந்தது. இருப்பினும் தமிழ் விமரிசனச் சூழலில் இது கண்டு கொள்ளப்படவில்லை.

தாசி ஒழிப்புச் சட்டம் பற்றிய மசோதா நிறைவேறியதன் விளைவாக அச் சமூகத்திற்கு சமூக அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட கதை 'முத்தம் படா அதரம்'. இது போல் அவரது கதைக்கரு தேர்வின் பின்னால் சமூக அரசியல் நிகழ்வுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஆக, பல்வேறுபட்ட மனிதப் பிரச்சினைகளின் பின்னிருந்த சமூக அழுத்தங்களின் மீதான கவனமே அவரது படைப்பில் வெளிப்பட்டது.

''இவருடைய சிறுகதைகள் பொதுவாகச் சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றியே இருப்பதனால் பெரும்பாலும் வடிவத்தை மீறிய கதையம்சத்தைக் கொண்டுள்ளன. ஆயினும் அன்று நிலவிய வடிவ உணர்வு இவருடைய இலக்கிய முயற்சிகளிலும் சிற்சில இடங்களில் சிறப்பாகப் பிரதி பலிக்கக் காணலாம்'' என்று சிட்டியும் சிவபாதசுந்தரமும் சேர்ந்து எழுதிய 'தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை மிகப் பொருத்தமான கணிப்பு. துரைக்கண்ணன் காலத்தில் எழுதிவந்த கல்கி, தி. ஜா. ரங்கநாதன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது துரைக் கண்ணனின் தனித்தன்மை புலப்படும். இக்காலகட்டம் வெகுசனவாசிப்புக் கலாசார முகிழ்ப்பின் கட்டம். இங்கு ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்களாகவே முகிழ்த்தனர்.

கதை கூறும் முறையில் கல்கியும் துரைக் கண்ணனும் ஒரே தன்மையராக அமைந்தனர். ஆனாலும் சமூகப் பிரச்சினைகளை அணுகிய முறையிலும், நிகழ்ச்சிகளை வளர்த்துச் செல்லும் போக்கிலும் வேறுபாடுகளைக் காட்டினார்கள்.

தமிழ் எழுத்துலகில் 1930களில் உள் நுழைந்து, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டு, தனக்கான தடம் பதித்துச் சென்றுள்ளவர் ஜீவா. ஆனந்த போதினி, பிரசண்டவிகடன் ஆகிய இதழ்களில் ஆசிரியப் பணி புரிந்து எழுத்தாளர்கள் பலரை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு. சமூக இலக்கிய செயல்பாட்டாளராகவும் ஜீவா நாரண துரைக்கண்ணன் இருந்துள்ளார்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com