தென்றல் நாலாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பார்த்தவுடன் பளீரெனப் புலப்படும் ஒரு மாற்றம் எழுத்துரு (Font). கணினியுலகில் தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒரு பெயர் 'முரசு அஞ்சல்'. அதன் படைப்பாளர் அன்பு நண்பர் முத்து நெடுமாறன் அவர்கள். 'முரசு தென்றல்' என்ற பெயரில் பிரத்தியேகமாக ஒரு புது எழுத்துரு உருவாக்கித் தந்துள்ளார். அவருக்குத் தென்றலின் சார்பாகவும் அதன் வாசகர்கள், ஆதரவளிக்கும் விளம்பரதாரர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
தென்றலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய ஆதாரம் அதில் விளம்பரம் செய்யும் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர். வாசகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே நேரம், தென்றலில் விளம்பரம் செய்வோரை ஆதரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர்கள் முன் வைக்கிறேன்.
இன்றைக்கு 10000 பிரதிகள், இரண்டு பதிப்புக்கள் என்று வீசும் தென்றல், 2000 பிரதிகள் மற்றும் பெரிய கனவுகள் என்ற நிலையில் இருந்த போது, திரு. அப்பணசாமி, திரு. அஷோக் சுப்ரமணியம் ஆகியோரது உழைப்பாலும் ஆர்வத்தாலும் வளர்ந்தது. அவர்களுக்கும் எனது நன்றி.
நன்றி சொல்லவேண்டியவர்களில் முக்கியமானவர்கள் சென்னை ஆன்லைன், மற்றும் ஆறாம்திணையில் பணிபுரியும் பலர். குறிப்பாக நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் பின்னிருந்து தோள்கொடுக்கும் நண்பர். அவருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பலர் தங்களது மற்ற வேலைகளுக்கு நடுவில் பலவகைகளில் தென்றலுக்கு உதவிவருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.
வாசகர்கள் ஆணிவேர். அவர்களுக்கு நன்றி. குறிப்பாக சந்தாதாரர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி! உருவில் மட்டும்தான் மாற்றமென்றில்லை. புதிதாக இன்னும் சிலவற்றைப் பற்றி இப்போதே சொல்லிவிடலாம். ஒன்று தென்றலில் வெளிவந்த 'சமையல் குறிப்புக்கள்' புத்தக வடிவில் வெளிவருகின்றது. இதேபோல் பிற பகுதிகளையும் பதிப்பிக்க இருக்கிறோம்.
இரண்டாவது தென்றலின் வலைத் தளம் மாற்றி வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் உலகத் தமிழர்களை இணைக்கும் முயற்சிகளில் இன்னொன்றாக அது பரிணமிக்கும் என்று நம்புகிறோம். விபரங்கள் அடுத்த இதழுக்குள் வரலாம்.
'The Hindu' - தமிழர்கள் நன்கறிந்த இன்னொரு பெயர். அரசியல்வாதிகளினால் மற்றும் அரசாங்கத்தினரால் ஊடகங்கள், ஊடக நிறுவனங்கள், அதில் பணிபுரிவோர் அனைவருக்கும் பலவகைகளில் இடையூறுகள் வரும் ஒரு கண்டிக்கத்தக்க நிலை இருந்துவருகிறது. எழுத்துச் சுதந்திரம் நாகரீக உலகின் சுயவிமர்சனத்துக்கான ஒரே வழி. அதற்குத் தடைபோட நினைப்பது தவறு. மதிப்பிற்குரிய என். ராம் மற்றும் அந்நிறுனத்துள்ள அனவருக்கும் தென்றல் தனது ஆதரவையும் பாரட்டுக்களையும் தெரிவிக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது வருந்தத் தக்கது. அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டி எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும். ஆனால் பொதுமக்களிடையே (குறைந்த பட்சம் அவர்களில் ஒரு சாராரிடையே) இம்முடிவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காரணங்களைத் தேட வெகுதூரம் போக வேண்டியதில்லை. அரசு இயந்திரத்தின் குறைகள், அரசு ஊழியர்களிடையே மக்களுக்குப் பணிசெய்வது தம் கடமை என்ற உணர்வு இல்லாமை என் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அரசு மற்றும் பொதுஊழியர்கள் சுயபரிசீலனை செய்ய வேண்டியதும் செயல்முறைகள் மற்றும் மனப்போக்கில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியதும் மிகவும் அவசியம்.
மீண்டும் சந்திப்போம். பி. அசோகன் டிசம்பர் 2003 |