சிகாகோ பெருநகரத்தில் அமைந்திருக்கும் நாட்டிய ஆடல் குழு 1975ஆம் ஆண்டு திருமதி ஹேமா ராஜகோபாலனின் பெருமுயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது. புதுமை, நாட்டிய வளர்ச்சி, நாட்டியத்தினால் சமுதாய ஒற்றுமை ஆகிய உயர்ந்த குறிக்கோளுடன் வீறுநடை போட்டு வளர்ந்துள்ள இந்தக் கலைக்குழு, முப்பதாண்டுகளுக்கு மேலாக சிகாகோ மற்றும் இதர நகரங்களில் சேவையை செய்து வருகிறது. நாட்டியாவின் நிறுவனரும் இயக்குனருமான திருமதி ஹேமாவின் உழைப்பு சாதாரணமானதல்ல. தனது ஆறாவது வயதிலேயே மேடை ஏறிய திருமதி ஹேமாவின் குரு, நாட்டிய ஜாம்பவானாகிய பத்மஸ்ரீ தண்டாயுதபாணி பிள்ளை அவர் களும், பத்மபூஷன் கலாநிதி நாராயணனும் ஆவார்கள். கலையை கற்றுமற என இல்லாமல் எப்படியாவது பரதநாட்டியத்தை இந்த வடஅமெரிக்க மண்ணில் செழிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இரவு பகலாக பாடுபட்டு வளர்த்து வருபவர் ஹேமா அவர்கள். 'நாட்டிய கலாலயம்' என்ற ஒரு அமைப்பை முதலில் தோற்றுவித்து இளம் நெஞ்சங்களும் அவர்களுடைய இயல்பான கலைத்தன்மையை உலகுக்கு வெளிப்படுத்த பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நாட்டியத் திலகம் ஹேமாவின் பாராட்டுதலும், பட்டங்களும், கொஞ்சநஞ்சமில்லை.
சிகாகோ நகரத்தின் 'Award of Excellence' இல்லினாய்ஸ் ஆர்ட் கவுன்சில் Fellowship Awards, இந்தியா டிரிப்யூன் பத்திரிக்கையின் 'காந்தி சமுதாய விருது', 'விஷ்வ கலா பாரதி' விருது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் 'Emmy Award' விருதையும் தட்டிச் சென்றவர்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்ற பழமொழிக்கேற்ப, திருமதி ஹேமாவின் புதல்வி திருமதி கிருத்திகா இந்தக் குழுவின் துணை இயக்குநராக செயல்படுகிறார். தனிப்பட்ட முறையில் ஏராளமான நிகழ்ச்சிகளை தந்துள்ள கிருத்திகா முறைப்படி தன் தாயார் ஹேமாவிடம், கலாநிதி நாராயணனிடமும் நாட்டியக் கலை பயின்றவர்.
நாட்டியக் கலாலயம் இன்று ஏராளமான மாணாக்கர்களை உருவாக்கியுள்ளது. நாட்டியா, வெளிநிறுவனங்களிடம் சேர்ந்து நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் உலகப் புகழ் பெற்ற 'Yo Yo Ma' அவர்களுடன், சிகாகோ சிம்பனி குழுவினரும் சேர்ந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சி உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது. 'சீதாராம்' நடனநிகழ்ச்சி பிரபல 'Looking Glass Theatre' ருடன் சேர்ந்து அரங்கேறியதாகும். புகழ்பெற்ற பத்திரிக்கையான 'New York Times' மிக அருமையாகவும், பெருமையாகவும் ஹேமா ராஜகோபாலனின் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: www.natya.com அணுகவும்.
ஜோலியட் ரகு |