செந்தமிழர் போற்றி வளர்த்த கலைகள் இன்று சொந்த மண்ணில் மட்டுமல்லாது அவர் வந்து வாழும் இடமெல்லாமல் வளர்ந்து வளமை குன்றாதிருப்பது நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுறக் கூடிய ஓர் விஷயம்.
அண்மையில் செல்வி. வினோதினி லக்ஷ்மணனின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. அரங்கேற்றியவர் ஸ்ரீ கிருபா டான்ஸ் அகடமியின் கலை இயக்குநர் திருமதி. விஷால் ரமணி. காரைக்குடியைச் சூறையாடி மேடையை அலங்கரித்து விட்டார்களோ என்று எண்ணுமளவு மேடையலங்காரம் இருந்தது. தமிழகக் கலைஞர்கள் மதுரை முரளிதரன் - நட்டுவாங்கம், கோமதிநாயகம் - குரலிசை, தனஞ்செயன் - மிருதங்கம், ஷர்மா - வயலின் ஆகியோர் உடன் இசைத்தனர். நடுநாயகமாக விஷால் ரமணி.
கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து டாக்டர் பாலமுளி கிருஷ்ணா அவர்களின் புஷ்பாஞ்சலி ஆரபியில் ஆரம்பிக்க நிகழ்ச்சி களைகட்டியது. தொடர்ந்தது 'தும்பிக்கையோனை' என்ற விநாயகர் அஞ்சலி நாட்டை ராகத்திலும், ஆதிதாளத்திலும். அதையடுத்து வந்த கல்யாணி ராக ஜதிஸ்வரம் பழமை விரும்பியான விஷால் ரமணியின் தேர்வு. அவர் அமைத்து இருந்த கோர்வைகள் மற்றும் நடைகள் மிக நன்றாக இருந்தன.
பின்னர் மைய நிகழ்ச்சியான வர்ணம். 'காணும் அரும்பேறு தருவாயோ?' என்னும் மதுரை முரளிதரன் இயற்றிய வர்ணத்திற்கான ஜதிக்கோர்வைகள் அதிவேகம். இறைவனுக்கு சாதிமதபேத வேற்றுமை இல்லை என்பதை உணர்த்தும் கண்ணப்ப நாயனாரின் கதையை சஞ்சாரி பாவத்தில் அபிநயத்த விதம் அருமை. அடுத்து, முருகன் தனக்கே சொந்தம் என நினைத்திருந்த நாயகியிடம் அன்றாடம் இரவல் கேட்டு வாழ்க்கை நடத்தும் மற்றொரு நாயகி இன்று முருகனின் தயவால் செல்வச் செழிப்புடன் இருப்பதைக் கேள்வியுற்றுப் பொறாமையுடன் பாடுவதாக அமைக்கப்பட்ட பழமையான பதம் 'அதும் சொல்லுவாள்' என்ற செளராஷ்டிர ராகப் பாடல். இதில் பொறாமையின் எல்லைக்கே நம்மை அழைத்துச் சென்றார் வினோதினி.
அடுத்து 'கண்ணன் வருகின்ற நேரம்' என்ற காவடிச்சிந்து, தொடர்ந்து தில்லானா, இறுதியாகக் காவடி ஆட்டம். உண்மையான காவடியை ஏந்தி வினோதினி ஆடி வந்தது நம்மை அறுபடை வீட்டிற்கே அழைத்துச் சென்றாற்போல் இருந்தது.
வினோதினியின் மாமா லெட்சுமணன் ஒவ்வொரு பாட்டுக்கும் செய்த அறிமுகம் சுவைபட இருந்தது.
கவிதை பாடும் கண்கள், ஆடற்கலைக் கேற்ற உடல்வாகு, பேசும் விரல்கள், வேகம் இவற்றின் மொத்த நடனச் சித்திரமாய் விளங்கினார் வினோதினி. மொத்தத்தில் வினோதினியின் அரங்கேற்றம் வெகு விமரிசை.
மதுரை. ஆர். முரளிதரன் |