அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்மக்கள் கூடிச் சந்தித்துக் கொள்ளும் எப்போது வாய்ப்பு ஏற்படுகிறது? ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் அல்லது அவ்வவ்போது நடத்தப் பெறும் கலை நிகழ்ச்சிகளில்.
அந்த இரண்டாவது லாங்பீச் மில்கான் உயர் பள்ளிக் கலை அரங்கில் கிடைத்தது! அங்கே தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் ஓய்.ஜி. மகேந்திரன் தனது United Amateur Artistes (UAA) குழுவினரோடு 'ஜட்ஜ்மெண்ட் டே' மற்றும் 'அந்த 7 ஆட்கள்' எனும் இரண்டு நாடகங்களை நடத்தினார்.
துவக்கத்தில் முரளி ரவி, ஓய்.ஜி. மகேந்திரன் மற்றும் UAA குழுவினரை அறிமுகம் செய்து வரவேற்பு நல்கிய கவிஞர் மதுரை பழனியப்பன் கவிதை வாசித்த போது, தமிழ் நாடகங்கள் இங்கு வாழும் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருக்கின்றன எனக் குறிப்பிட்டு கைதட்டல் பெற்றார்.
முதல் நாடகமான 'ஜட்ஜ்மெண்ட் டே'வில் மகேந்திரன் தூய வெள்ளை வேட்டி, சட்டை, துண்டு சகிதம் கறாரான தமிழ்நாட்டு அரசியல்வாதியாக வெளுத்துக் கட்டினார். உரையாடலில் அவ்வப்போது பில் கிளிண்டன், ஓசமா-பின்-லாடன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் வந்தனர். கலிபோர்னிய காட்டுத்தீயைச் சூசமாகக் குறிப்பிட்டார்.
மக்களுக்குப் பாடம் புகட்டும் செய்தி இருந்த காரணத்தாலோ என்னவோ நாடகத்தில் நகைச்சுவை குன்றி, இறுக்கம் தொற்றிக் கொண்டது. ஆனால் மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் பின்புலமாக அமைத் திருந்தது பாராட்டுக்குரியது. இந்நாடகத்தை எழுதியது தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பேரன் என்று அறிவித்தபோது அரங்கில் கரவொலி.
முதல் நாடகம் முடிந்தவுடன், நாடக அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த சூடான பொங்கல், இட்லி, வடை, சாம்பார், சட்னி என்று சுவையாக இருந்ததை அனைவரும் ரசித்தனர்.
இரண்டாவது நாடகம் இரவு 9 மணியள வில். நல்ல குளிரில் தொடர்ந்தது. 'அந்த 7 ஆட்கள்' மிகவும் விறுவிறுப்பாக நகைச்சுவை மிகுந்து இருந்தது. நகைச்சுவை என்றாலே பொய் பேசி பித்தலாட்டம், ஆள் மாறாட்டம் செய்ய வேண்டும் என்பது தமிழ்த் திரைப்பட, நாடகங்களில் ஒரு எழுதப்படாத விதி ஆகிவிட்டதை என்ன என்பது? நவராத்திரியில் நடிகர் திலகம் சிவாஜியைப் போல், மகேந்திரன் அடுத்தடுத்து 6 வேடங்களில் தோன்றி அசத்தினார். தமிழ்நாடகங்களில் தலைகாட்டும் மாமி இதிலும் வந்தார். நாடகம் முடியும் தறுவாயில் அந்த 7வது ஆள் யார் என்று ரசிகர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறை. அப்போது வந்தது அறிவிப்பு - மன்னிக்கணும், அதுதான் சஸ்பென்ஸ்!
முடிவில் நாடக அமைப்பாளர்கள் ராஜ் செல்வராஜ், வெங்கட், ராஜ்மோகன் சார்பில் ஓய்.ஜி.மகேந்திரன் மற்றும் குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தனக்கு வழங்கப்பட்ட உயரமான தேரை விமானத்தில் எப்படி கொண்டு செல்வது என்று மகேந்திரன் கேட்க அரங்கம் அதிர்ந்தது. நாடகத்திற்கு ஒளி-ஒலி அமைப்பினைச் செய்து கொடுத்த லாங்பீச் மால்சன் பள்ளி மாணவ, மாணவிகளை ஒய்.ஜி. மகேந்திரன் வெகுவாகப் பாராட்டினார்.
இந்திராணி |