டிசம்பர் 6, 2003 அன்று அரோரா கோவிலில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பாகக் குழந்தைகள் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கூட்டம் அலைமோதியது. சங்கத் தலைவர் கிருஷ்ணராஜின் அழகான தமிழுடன் தொடங்கிய நிகழ்ச்சி இடைவேளை வரை சிறுவர் சிறுமியர் பங்கேற்ற விழாவாகவும், பின்னர் நாடகம், கவியரங்கம் என்றும் நடந்தேறியது. நிகழ்ச்சிக்கு முன்னதாக டாக்டர் வசந்தா ஆதிமூலம் (குழந்தைகளின் உணவு முறை), டாக்டர் நர்மதா குப்புசாமி (உணவுமுறையும் எலும்பு வளர்ச்சியும்), டாக்டர் சூர்யா சாஸ்திரி (கோலன் கேன்சர்) ஆகியோர் பேசியது பயனுள்ளதாக இருந்தது. இலவச 'ஆஸ்டியோ போரோசிஸ்', மற்றும் 'கோலன் கேன்சர்' சோதனையும் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது குழந்தைகள் கலைநிகழ்ச்சி. கடலூர் குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நடன ஆசிரியை வீரவள்ளியின் மாணவிகள் நடத்திய 'நீ உரைப்பாய் ஹனுமான்' என்ற நாட்டியம் வெகுஜோர். அடுத்து பிரவீணா பாபுவும், யாமினியும் ஆடிய 'மலே மலே' சினிமா நடனத்திற்கு ஏக வரவேற்பு.
அஸ்வின் சிவராமனின் தமிழ்ப் பாடல் நடனம் தூள். என்னமாக உடம்பு வளைகிற இவருக்கு! அடுத்து வந்த, 'பூ பூக்கும் ஓசை' பாட்டிற்கு ஆடிய குழந்தைகளும், 'சினேகிதனே' பாடிய ஸ்ருதியும் கலக்கி விட்டார்கள்.
'தேசுலாவுதே' பாடிய நிவேதாவுக்கு நல்ல குரல் வளம். அடுத்து ஆடிய சுதாமயி, வர்ஷிணி குழுவினரின் 'ட்ரம் பீட்' வந்திருந்தோரை தாளம் போட வைத்தது. 'பூவெல்லாம் உன் வாசம்' படப்பாடலுக்கு ஆடிய ரஷ்மி, மற்றும் ஸ்ருதியின் நடனம் கண்கொள்ளாக் காட்சி. நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல் அமைந்தது மயூதாசரியின் இயக்கத்தில் நடந்தேறிய 'ரீமிக்ஸ்' நடனம்.
இடைவேளைக்குப் பின்னர் நடந்த சிகாகோ நாடகப்பிரியாவின் 'மாறிப்போன பார்ட்டி' நாடகம் ஷோபனா சுரேஷின் இயக்கத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. ஆனந்த் ராகவின் கதைக்கு நடித்த ஷோபனா, ராஜஸ்ரீ, ரவிசங்கர் மற்றும் சேஷ் ஆகியோர் மிக இயல்பாக நடித்தனர்.
அடுத்து 'கவி சாம்ராட்' சந்திரகுமாரின் தலைமையில் நடந்த கவியரங்கம் சிந்திக்கத் தூண்டியது. இதில் பங்கேற்ற கவிதா பாபுவிற்கு 13 வயதே ஆனாலும், அழகான தமிழில் பேசி அசத்திவிட்டார். நிகழ்ச்சியை நிறைவு செய்ய வந்த 'இதுவும் தமிழ்த்தான்' என்ற சேஷாத்திரியின் ஓரங்க நாடகம் 'இந்நகரில் இவ்வளவு திறமைசாலிகளா?' என்று வியக்க வைத்தது. பல்வேறு வட்டாரங்களின் தமிழைப் பேசி மணக்க வைத்தார்கள். வனிதா ரகுவீர் மற்றும் அஜய் ரகுராமன் தேசிய கீதம் இசைக்க விழா நிறைவுபெற்றது.
கடந்த முப்பது வருடங்களாக சிகாகோ தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழர்களின் கலாசாரத்தையும், திறமைகளையும் ஊக்குவிக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற அல்லது உறுப்பினர் ஆக விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: முத்துசாமி, 847 498 2152 அல்லது கடலூர் குமார் 630 890 1378.
ஜோலியட் ரகு |