பாரதி கலாலயாவின் நன்றித் திருநாள்
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் 'பாரதி கலாலயா' இந்திய நாட்டியம், இசை மற்றும் தமிழ்மொழி கற்பிப்பதற்காக உருவாக்கப் பட்டது. வகுப்புக்கள் தவிர மாணவ, மாணவிகளுக்கு வருடம் முழுவதும் நிகழ்ச்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முறையான பாடத்திட்டத்துடன், பாரதி கலாலயாவின் தரம் ஒவ்வொரு துறையிலும் ஒரு கலாசாலையின் முத்திரையுடன் வழங்கப் படுகிறது. இசை, மற்றும் நடன வகுப்புக்களில் அவை பற்றிய அடிப்படைக் கல்வியும் கற்பிக்கப் பட்டு, தேர்வுகள் நடத்தப் படுகின்றன. முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்றுச் சான்றிதழும், பட்டயமும் பெற்றவர்களே மேல்நிலை வகுப்புக்களுக்கு அனுப்பப் படுகிறார்கள். ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து வித்வான்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி முகாம்கள் நடத்துவதுடன், நிகழ்ச்சிகளும் வழங்கி ஊக்குவிக்கிறார்கள். நவம்பர் 22ம் தேதி, அமெரிக்க மரபை ஒட்டி வருடம் முழுவதும் செய்த சாதனைகளுக்காக நன்றித் திருநாளாகக் கொண்டாடப்பட்டது.

அனுராதா சுரேஷ், மற்றும் ருக்மணி கண்ணன் தலைமையில் முதலில் வழிபாட்டு வகுப்பு மாணவர்கள் லக்ஷ்மி சஹஸ்ரநாமம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச வழிபாட்டு வகுப்புக்கள் பாரதிகலாலயாவில் நடத்தப் படுகின்றன. (சேரவிரும்புவர்கள், 510.490.4629 என்ற தொலைபேசி எண்ணில் அணுகவும்) அதைத் தொடர்ந்து, லக்ஷ்மி சஹஸ்ரநாமக் குறுந்தட்டு இலவசமாக வெளியிடப்பட்டது.

தொடர்ந்து 4 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள், பஜனைப் பாடல்கள் பாடினார்கள். மேலும் சங்கராபரணத்தில் 'கஜமுகனை', சுத்த சாவேரியில் 'ஹரிஹர சுதனை', சித்தரஞ்சனியில் 'நாததனுமனிசம்', தர்பாரிகானடாவில் 'வாகதீஸ்வரி' ஆகிய பாடல்களை மேற்கொண்டு பாடினார்கள்.

இளைஞர்கள் வகுப்பினர் பிலஹரியில் 'ரார வேணு'வோடு ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்தது ஹம்சத்வனியில் 'கருணை செய்வாய்' மற்றும் வசந்தாவில் 'கண்டேன் கண்டேன்'. அடுத்து மிருதங்கம் முதல் நிலை மாணவர்கள் வழங்கிய வாசிப்பு மிகக் குறைந்த கால அளவே கொடுக்கப்பட்டிருந்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

வயலின் மாணவர்கள் மோகன வர்ணம், ஸ்ரீராக வர்ணம், கொளை ராகத்தில் 'தியாகராஜ பாலம்' என்கிற தீக்ஷ¢தர் கிருதி ஆகியன வாசித்தளித்தார்கள். முதல்நிலைப் பாட்டு வகுப்பு மாணவர்கள், கலாநிதியில் 'சின்ன நாதனே', ஷண்முகப்பிரியாவில் 'பார்வதி நாயகனே' ஆகிய பாடல்களை வழங்கினார்கள். அவர்கள் மேலும் பொளை இராகத்தில் 'ஸ்ரீமன் நாராயண', பட்டதீப் இராகத்தில் 'பஜத முரளி', மணியில் 'கண்ணன் வருகின்ற நேரம்' ஆகியவற்றை இசைத்தனர்.

முதுநிலை மாணவர்கள் 'சரோஜ தள நேத்ரி' என்ற சங்கராபரணக் கீர்த்தனையுடன் ஆரம்பித்து 'பிறவி அலை அதனில்' என்கிற தேஷ் ராகப் பாடல், யமுனா கல்யாணியில் 'ஜகத்தினைக் காத்திடும்', தர்பாரி கானடாவில் 'கோவர்த்தன கிரிதாரா', சிந்து பைரவியில் 'அஞ்சுவித பூதம்' ஆகிய பாடல்களைத் திறம்பட வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஆசிரியர் ஜெ·ப் ஒய்ட்டியர் பான்சுரியில் அமிர்த வர்ஷிணி ராகம் வாசித்தார். அவருடன் தபலாவில் சுதேவ் வாசித்தார். லூபனா பூபாளி ராகத்தில் பஜனை பாடினார். காஞ்சி மகாப் பெரியவர் ஐக்கிய நாடுகள் சபையில் பாடும் பொருட்டு எழுதிய “மைத்ரீம் பஜதாம்” என்கிற உலக அமைதிப் பிரார்த்தனைப் பாடலுடன் நிகழ்ச்சி முற்றுப் பெற்றது.

பாகீரதி சேஷப்பன்

© TamilOnline.com