நியூயார்க்கில் நிருத்ய சாகர் ஆண்டுவிழா
நியூயார்க் நிருத்ய சாகர் டான்ஸ் அகாதமியின் ஆண்டுவிழா அழைப்பிதழைப் பார்த்தாலே உற்சாகமாக இருக்கும். இளம்பாதங்கள் பரதம் மற்றும் குச்சிப்புடியின் அடிகளை வைப்பதைப் பார்ப்பதே ஆனந்தம். அதுவும் குரு சத்யா பிரதீப்பின் உணர்வும் ஆர்வமும் நிரம்பிய வழிநடத்துதல் பேரானந்தம்.

அகாதமியின் பத்தாவது ஆண்டுவிழா நியூயார்க் ·பிளஷிங்கின் ஹிந்து திருக்கோவில் அரங்கில் நவம்பர் 15ம் நாள் நடந்தது. இதற்காக டொராண்டோவிலிருந்து நான் செல்ல வேண்டியிருந்தாலும், அந்தப் பயணம் பயனுள்ளதுதான். எல்லோரையும் போலச் சில மாணவ மாணவியரின் திறமையை மட்டும் உயர்த்திக்காட்டாமல், மிகத் தனித்துவமும் முழுமையும் கொண்ட நிகழ்ச்சியை வழங்கினார்கள். ஒன்பது ரசங்களின் வண்ண மாலையை நேர்த்தியாய்த் தொடுத்து வழங்கினார் சத்யா. அதைத் தொகுத்து வழங்கத் தொன்மையான சூத்ரதாரர் உத்தியைப் பயன்படுத்தினார்.

ஆசிஷ் செருகபள்ளிதான் சூத்ரதாரரும், நட்டுவாங்கமும். வரப்போவது என்ன வென்று ஆங்கிலத்தில் கூறி அதைப் பாவனையிலும் காண்பித்தார். வழுவூர்க் கோவில் தெய்வங்களைத் தொழுதுபாடித் தொடங்கிய நிகழ்ச்சியை அடுத்துப் புஷ்பாஞ்சலி நடந்தது. பின்பு வந்த நவரச மாலை சிருங்காரத்தில் துவங்கி சாந்தத்தை அடைந்தது.

சிருங்காரம் சமஸ்கிருதம், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அமைந்திருந்தது. யசோதையும் கண்ணனும் வரும் 'வாத்சல்ய ரச'ப் பகுதியில் கண்ணனாக அபிநயித்த குழந்தை நெஞ்சை அள்ளியது. பீபத்சம் என்று சொல்லப்படும் அச்சத்தை இராவணனைக் கண்டு நடுங்கும் சீதையிடம் முழுமையாக உணரமுடிந்தது.

பரத நாட்டியத்தில் கோவிற்சிலைகளின் வடிவங்கள் காணப்படுவது இயல்புதான். ஆனாலும் 'ரௌத்திர'த்தில் துர்க்கை 18 கைகளோடும் வந்தது மறக்கமுடியாதது. தேவர்களும் அசுரர்களும் கடைந்து எடுத்த ஆலகால விஷத்தைச் சிவன் விழுங்க, அதை அவர் தொண்டையிலேயே நிறுத்திய காட்சி மெய்யாகவே 'அற்புதம்'தான். இதற்காக சங்கராபரணத்தில் பாடிய 'சந்திரசூடா' பாடல் ரசிகர்களை வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. சாகித்தியம், சங்கீதம், நடன அசைவுகள் ஆகியவை வெகு நுணுக்கமாகக் கவனித்துக் கையாளப்பட்டிருந்தன.

'சாந்தம்' மெய்ப்பாட்டுக்கு மிகப் பொருத்த மாக சமண சமயப் பிரார்த்தனை களை அபிநயிக்கையில் வந்திருந்தோர் நெகிழ்ந் தனர். பிருந்தாவன சாரங்காவில் தில்லானா மற்றும் மங்களத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக் கான கருத்தை வழங்கியவர் டி.கே. கோவிந்த ராவ்.

இசையமைத்துப் பின்னணி பாடியிருந்தார் சாவித்திரி ராமானந்த். பக்க வாத்தியங்களில் முரளி பாலச்சந்திரன் - மிருதங்கம், பாலஸ் கந்தன் - வயலின், ராதாகிருஷ்ணன் - புல்லாங்குழல், பவித்ரா சுந்தர் - கீ போர்டு ஆகியவற்றில் பரிமளித்தனர்.

நிகழ்ச்சிக்கு டாக்டர் கிரண் பேடி தலைமை வகித்தார். மொத்த நிகழ்ச்சியைத் தொகுத் தளித்தார் டாக்டர் பிரதீப் கோபால கிருஷ்ணா. நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்தியக் கான்சுலேட்டின் ரபீந்திர பண்டா நடன அகாதமியின் முயற்சிகளைப் பாராட்டினார்.

நியூயார்க்கின் காஞ்சி காமகோடி அறக்கட்டளை சத்யா பிரதீப்புக்கு 'நாட்ய கலா சேவாரத்னா' விருதை அளித்துக் கவுரவித்தது.

அறிக்கை: டாக்டர் விஷ்ணு சர்மா
தமிழில்: மதுரபாரதி

© TamilOnline.com