பத்தே வயதான அபிநவ் முரளீதரனின் கர்நாடக இசை கீ போர்டு அரங்கேற்றம் நம்பர் 23ம் தேதி லாஸ் ஏஞ்சலீஸின் ஹ¥வர் ஜூனியர் மிடில் ஸ்கூல் அரங்கத்தில் நடந்தது. 'மாறாப் பாரம்பரியத்தின் மாறும் போக்கு' என்று என். முரளீதரன் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதன் வழியில் வந்த இந்த இசைநிகழ்ச்சியை சுமார் 300 ரசிகர்கள் சுவைத்தனர்.
பைரவி ராகம் அட தாளத்தில் அமைந்த வர்ணத்தில் தொடங்கிய கச்சேரி, வாதாபி, தாரிணி, சரச சாம தான என்று அற்புதமான கீர்த்தனைகளுடன் ராஜ நடை போட்டது. 'பண்டு ரீதி'யை விஸ்தாரமான கல்பனா ஸ்வரங்களுடன் ஆலாபனை செய்து பாராட்டைப் பெற்றார். 'ரகு வம்ச சுதா', 'என்ன தவம்' என்று மேலே தொடர்ந்த கானமழை லால்குடியின் ரேவதி ராகத் தில்லானாவுடன் நிறைவெய்தியது.
லாஸ் ஏஞ்சலஸ் 'சுருதிலயா'வை நிறுவியவர்களில் ஒருவரான முரளீ கிருஷ்ணனின் மகனான அபிநவ், கர்நாடகப் பாடகி பி. பாலா திரிபுரசுந்தரி அவர்களின் பேரனுமாவார். ஐந்து வயதிலிருந்தே பிரபல வீணை வித்வான் என். முரளீதரனிடம் கீ போர்டு பயின்று வந்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு நடனக் கலைஞர் விஜி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். |