இந்தியாவின் அசுர வளர்ச்சி
2003 இந்தியாவுக்கு நல்ல ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின், ஏன் உலகின், தகவல் தொழில் நுட்பத் தொடர் புள்ள வேலைகள் இந்தியாவில் வந்து குவியத் தொடங்கி விட்டன. இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 100 பில்லியன் டாலர்களைத் தாண்டிச் சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு வெறும் 35% சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டுக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார்களாம். கடந்த ஆண்டு மாணவர்கள் பாதிக்கு மேல் வெளிநாடு சென்றார்கள். இந்தியாவிலேயே நல்ல சம்பளத்தில் நல்ல வேலைகள் கிடைப்பதைக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் இந்தியாவிலேயே தங்க முடிவெடுத்துள்ள ஐ.ஐ.டி. மாணவர்கள். இந்தியாவின் அசுர வளர்ச்சி உலகையே மலைக்க வைத்திருக்கிறது. ஆனால், 1980களில் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஜப்பான், மற்றும் கிழக்காசிய நாடுகள் கடந்த பல ஆண்டுகளாக மந்த நிலையில் வாடுவதையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழல் நாடுகள் வரிசையில் இந்தியா மேலும் முன்னேற வேண்டும்.

இந்தியாவின் கிரிக்கெட் வெற்றி இந்தியாவின் தன்னம்பிக்கை மனப்பான்மைக்கும், விடா முயற்சிக்கும் இன்னோர் அடையாளம். உலகக் கோப்பை வீரர்களான ஆஸ்திரேலியாவை அவர்கள் நாட்டிலேயே தோற்கடிப்பது என்பது சாதாரணமில்லை. திராவிடும், லக்ஷ்மணும் அடிலெய்டில் இன்னொரு "கல்கத்தா அற்புதத்தை" நிகழ்த்தியிருக்கிறார்கள். உலகக் கிரிக்கெட்டின் மையமாகி வரும் இந்தியாவின் ரசிகர்கள் தங்கள் அணியிடம் இருந்து எதிர்பார்ப்பது இவை போன்ற முயற்சிகள்தாம். களத்தில் இறங்கும் முன்னரே தோல்வியைத் தழுவியது போல் தொய்ந்து கிடந்த அணியின் முதுகெலும்பை எ·கு போல் உறுதியாக்கியிருக்கும் அணித்தலைவர் சௌரவ் கங்கூலிக்கு நம் பாராட்டுகள்.

டிசம்பர் மாதம் அதிபர் புஷ்ஷ¤க்கு நல்ல கிறிஸ்துமஸ் பரிசுகள்! புஷ் குடும்பத்தின் பரம வைரி சதாம் ஹ¤சைனை எலி வேட்டையாடிப் பிடித்தாயிற்று. லிபியாவின் முவாம்மார் கதா·பி தன் பேரழிவு ஆயுதங்களை விட்டுக் கொடுத்துத் தீவிர வாதத்தை விட்டு விடுகிறேன் என்று சரணடைந்து விட்டார். அடுத்தது ஈரானும் அடி பணியும் என்று பரவலாக எதிர் பார்க்கப் படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர் பார்த்ததை விடக் கூடுதலாகவே இருக்கிறது. அதிபர் புஷ்ஷின் அதிரடிக் கொள்கை களின் வெற்றி என்று இவற்றைக் கொண்டாடுகிறார்கள் குடியரசுக் கட்சியினர். இந்தக் கொள்கைகளைக் கடுமையாக எதிர்த்து வரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் ஹாவர்டு டீன் இந்த மாதம் அதிபர் புஷ்ஷை விடத் தன் சக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் தாக்குதல்களில்தான் திணறிக் கொண்டிருக் கிறார். சுவையான தேர்தல் ஆண்டு காத்துக் கொண்டிருக்கிறது.

சான் ·பிரான்சிஸ்கோ நகரின் மாவட்ட வழக்குரைஞர் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய அமெரிக்கர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் கமலா ஹாரிஸ். புகழ் பெற்ற தமிழ் விஞ்ஞானியும் குடியுரிமைப் போராளியுமான டாக்டர் ஷியாமளா ஹாரிஸ் அவர்களின் மூத்த புதல்வியான கமலா, சான் ·பிரான்சிஸ்கோவின் மாவட்ட வழக்குரைஞர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண். அவருக்கு நம் வாழ்த்துகள்.

அடையாளம் தெரிவிக்காத லாஸ் ஏஞ்சலஸ் வாசக நண்பர் ஒருவர் தென்றலுக்கு எழுதிய கடிதத்தில் அங்கு வாழும் தமிழர்கள் தமிழ் நிகழ்ச்சிகளைப் போதுமளவு ஆதரிப்பதில்லை என்று கவலைப் பட்டிருக்கிறார். அவர் கூறுவது போல், பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் வெகுசிலரே. அவர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்குத் தம் நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவது மட்டு மல்லாமல், பண முதலீட்டிலும் இழப்பு அடைகிறார்கள். இந்த நிலை நீடித்தால், தரமான நிகழ்ச்சிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் என்று ஆதங்கப்படுகிறார்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் நிகழ்ச்சிகளைக் கொண்டு வருபவர்கள் இந்த நாட்டில் நம் அடுத்த தலைமுறைக்கு நம் மரபையும், பண்பாட்டையும் அறிமுகப் படுத்தும் தொண்டாற்றி வருபவர்கள். லாஸ் ஏஞ்சலஸ் மட்டுமல்ல, வேறு எங்கிருந்தாலும், தங்கள் ஊரில் நடக்கும் தமிழ் நிகழ்ச்சி களுக்குத் தென்றல் வாசகர்கள் ஆதரவு தர வேண்டும்.

தென்னாப்பிரிக்காவிலும், மொரீஷஸ், ரெயூனியோன் தீவுகளிலும் தம் தமிழை இழந்த தமிழர்கள் அரும்பாடு பட்டு மீண்டும் தமிழ்ப் பண்பாட்டைத் வம்சாவளிக்குக் கற்பிக்கும் முயற்சிகள் நமக்கும் ஊக்கமளிக்க வேண்டும். கனடாவிலும் ஐரோப்பாவிலும் பெரு முயற்சியுடன் தமிழையும் பண்பாட்டையும் தம் தலைமுறையினர்க்கு ஊட்டி வரும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் போல் அமெரிக்கத் தமிழர்களும் இந்நாட்டில் தமிழை வளர்த்து வந்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சி தொடர்வது, நம் கையில்தான் இருக்கிறது.

நேரடியாகவும், தொலைபேசி மூலமும். ஆசிரியருக்குக் கடிதங்கள் வழியாகவும் தென்றலைப் பற்றி வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துகளை நாங்கள் அக்கறையோடு கவனித்து வருகிறோம். கூடிய வரையில், வரும் கடிதங்களின் பல வேறு கருத்துகளைப் பிரதிபலிக்கும் கடிதங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிடு கிறோம். இட நெருக்கடியால் சில நல்ல கடிதங்களை வெளியிட இயலாமல் போய்விடுகிறது. அண்மைக்காலத்தில் தென்றலில் வெளிவந்த படைப்புகளைப் பற்றி மட்டுமல்லாமல், நாட்டு நடப்பு, அமெரிக்கத் தமிழர் வாழ்க்கை பற்றியும் கடிதங்கள் வரத் தொடங்கியுள்ளன. வாசகர்களின் சமுதாயப் பொறுப்புணர் வையும், தென்றல் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையயும் காட்டும் இத்தகைய கடிதங்களை வரவேற்கிறோம்.

தென்றலுக்குக் கடிதங்கள் எழுதும் வாசகர்கள், தங்கள் இயற்பெயரில் எழுதுவது மட்டுமல்லாமல், தங்கள் அஞ்சல் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் தர வேண்டுகிறோம். இந்த நிபந்தனையைப் பின்பற்றும் கடிதங்கள் மட்டுமே ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் இடம் பெறும். வாசகர்களுக்கு எங்கள் பொங்கல் திருநாள் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com