இக்கடிதத்துடன் எனது ஒரு வருட சந்தாத் தொகையைக் காசோலை வடிவில் இணைத்திருக்கிறேன்.
தென்றல் மிக நல்ல முறையில் வெளிவருவது கண்டு உளமகிழ்கிறேன். இதழில் வரும் கட்டுரைகள், நேர்முகங்கள் மற்றும் பலவகையான படைப்புகள் தரத்தில் உயர்ந்தும், கருத்தில் ஆழ்ந்தும் உள்ளன. பெரியண்ணன் சந்திரசேகர், ஹரிகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகளைத் தொடர்ந்து அளிக்கவும். அவர்களை இணையத்தில் அறிமுகம் பெற்றதாலும், அவர்கள் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றதாலும் இந்த விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.
தமிழில் காவியம் படைக்கும் தென்றல் இதழின் சந்தா நினைவுறுத்தும் சிறு கடிதம் மட்டும் ஏனோ ஆங்கிலத்தில் உள்ளது - உறுத்துகிறது. சிறிதே சிந்தித்துப் பார்க்கவும். உங்கள் கடிதம் (எதுவாக இருப்பினும்) வாசகர்களுக்கு தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.
சு. அன்புமணி
*****
நான் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர். இரண்டாவது முறையாக 2003 அக்டோபரில் அமெரிக்கா வந்துள்ளேன். எனது மகள், மகன் ஆகியோர் இந்நாட்டில் இருக்கின்றனர்.
இம்முறை வந்திருக்கும் பொழுது தங்கள் மாத இதழான 'தென்றல்' படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தங்கள் சீரிய தொண்டு யாவராலும் பாராட்டுதற்குரியது!
வ.சு. இராதாகிருஷ்ணன்
*****
நானும் என் கணவரும் செப்டம்பர் 2003இல் கலி·போர்னியா வந்தோம். நாங்கள் குமுதம், ஆனந்த விகடன், கலைமகள் ஆகிய இதழ்களைத் தவறாமல் படிக்கும் வழக்கமுள்ளவர்கள். என்ன செய்து என்று தவித்த போது, எங்கள் மகன் சங்கர் 'தென்றல்' இதழைக் கொண்டு வந்து தந்ததும், 'பதினெட்டாம் படி காணும்' சபரிமலை ஜயப்ப பக்தர்களைப் போல அக மகிழ்ந்தோம். அமெரிக்கா வாழ் தமிழ் மக்களுக்குத் தென்றல் 'ஒரு தேடி வரும் வரப்பிரசாதம்' என்றால் மிகையல்ல.
ப. இந்திராணி
*****
நான் தென்றல் பத்திரிகையை ஆவலுடன் படித்து வருகிறேன். தமிழர்களுக்குத் தென்றல் வழியாக நீங்கள் ஆற்றும் தொண்டு பெருமைக்குரியது.
புதுமைப்பித்தன், நாரண துரைக்கண்ணன் போல் பழம் பெரும் எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுடன், அவர்கள் படைப்புகளையும் படிக்கத் தமிழர்களுக்கு உதவுவது குறிப்பிடக்கூடிய செயலாகும்.
அடுத்ததாக என்னைக் கவர்ந்தது சமையல் குறிப்புகள் - அதன்படி செய்த உணவுகள் மிக நன்றாக இருக்கின்றன. அந்தந்தப் பண்டிகை ஸ்பெஷல்களாகவும் உள்ளன. நிஜமாகவே 'மாயாபஜார்'தான். நிகழ்வுகள், உதவும் கரங்கள் வித்யாசகர் போன்றவர்களின் அறிமுகம், சிரிப்பு என இன்னும் சொன்னால் பல பக்கங்கள் எழுத வேண்டி வரும். எல்லாமே பயன்படக்கூடிய பெருமைக்குரிய பக்கங்கள் ஆகும்.
ராதா ராமகிருஷ்ணன்
*****
2003 டிசம்பர் 'தென்றல்' அட்டையில் திருவண்ணாமலை அருணசலேஸ்வரர் கோயில் படத்தைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன். நான் திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்தவள். அதுவும் 7ம் தேதி தீபத்தன்று எனக்குக் கிடைத்தது. அன்று என்னை அருணாசலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. தென்றல் இலக்கியக் கட்டுரைப் பகுதியில் சந்திரசேகர் எழுதியுள்ளது போல் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு அளிக்கும் முக்கியத்துவம் கார்த்திகை தீபவிழாவிற்கும் அளிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும். மங்களம் கல்யாணம், அட்லாண்டா
*****
ஒரு சகோதரி சிறு வயதில் கணவனை இழந்த மாமியாரையும் தகப்பனை இழந்த இரு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வேலைக்குப் போகும் தனக்கு கேன்ஸர் வந்து கஷ்டப்படுவதாக எழுதியிருந்தார்கள். எனக்கு மனதுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. இந்த ரமலான் மாதம் நோன்பு நேரம் அந்த சகோதரி பூர்ண குணமடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி துஆ (பிரார்த்தனை) செய்கிறேன். ஆண்டவன் அந்த சகோதரிக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனோதைரியத்தையும் கொடுக்கட்டும்.
சகோதரி நோய் குணமாகி மாமியாருடனும், தன் அருமைக் குழந்தைகளுடனும் பாசமிகு வாழ்க்கை நடத்த எல்லாம் வல்ல இறைவன் கருணை புரியட்டும். எல்லோரும் பிரார்த்தனை புரிவோமாக.
எம். ரெயினா பேகம்
*****
தமிழில் முதல்முறை கதை எழுத முனையும் என்னைப் போன்ற அரும்புகளை மலரவைக்கும் உங்கள் இனிய தென்றல்...
தமிழை, தமிழ்க் கலாசாரத்தை, தமிழ் மக்களின் உணர்வுகளை, தமிழ் நாட்டு நடப்புகளை, தமிழிலேயே அமெரிக்காவில் உள்ள தமிழ் மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் சூறாவளியா?
ஷமிளா, அட்லாண்டா
*****
கடந்த 2002ம் ஆண்டு நான் எனது மனைவியுடன் முதல் முறையாக சான்ட்டா கிளாராவில் உள்ள என் மகன் வீட்டிற்கு வந்தேன். அப்போது தற்செயலாக 'தென்றல்' இதழ் கண்டோம். தமிழில் தென்றலைக் கண்டதும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்ததுடன் அதில் உள்ள சுவையான அம்சங்களைப் படித்து மகிழ்ந்தேன். பின்னர் இந்தியா சென்றபின்னும் கணினி மூலம் தவறாமல் தென்றல் படித்துவந்தேன்.
இப்போது மீண்டும் மகன் வீட்டிற்கு வந்திருக்கிறேன். வந்த மறுநாளே நமது இந்தியன் கடை ஒன்றில் தென்றலைத் தேடிச் சென்றேன். என் அதிர்ஷ்டம் கடையில் நுழைந்ததும் கண்ணில் பட்டது நவம்பர் மாதத் தென்றல் தான்.
கண்டேன் தென்றலை, கொண்டேன் மட்டிலா மகிழ்ச்சி.
அடுத்த தென்றலுக்கு ஏங்கி நிற்கும், டி. சூரிய நாராயணன்
*****
நவம்பர் தென்றல் இதழ் படித்தேன். நன்றாக உள்ளது. தென்றல் இதழ் மேலும் சிறப்படைய எங்கள் நல்வாழ்த்துக்கள். நந்தினிநாதன் எழுதிய 'கூண்டு' சிறுகதை மிக அருமையாக இருந்தது. வயதான அம்மாவின் துயரங்களையும், அதற்கு இன்றுவரை ஒரு முடிவும் இல்லை என்பதையும் கூறியுள்ளார். 'அன்புள்ள சினேகிதியே' பகுதியில் எழுதிய வாசகரின் கடிதம் உருக்கமாக இருந்தது. அவருடைய வாழ்க்கை நல்ல முறையில் அமையவும், மேலும் அவர் உடல் நலமாகிக் குணமடைவதற்கும் நாங்கள் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.
மைதிலி ஸ்ரீனிவாசன்.
***** |