வைகோவின் சிறைவாசம் முடிந்ததா?
தீவிரவாதிகளை ஒடுக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 'பொடா' (POTA) சட்டத்தைச் சென்ற ஆண்டு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மற்றும் பழ. நெடுமாறன் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருமங்கலத்தில் ஜுன் 29, 2002 அன்று தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக வைகோ பேசியதாகவும், அது பொடா சட்டப்படி குற்றம் என்றும் தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தனது பேச்சுரிமைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களவையில் பேசிய பேச்சின் விளக்கத்தை மக்களிடையே தெரிவிப்பதற்கும் தடையாக உள்ளது என்பதால் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று பொடா சட்டத்தின் 21(3) பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வைகோ மனு ஒன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுமீதான விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பில் "பொடா சட்டத்தில் உள்ள அனைத்து விதிகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட வையே. அந்த சட்டம் அரசியல் சட்டப்படி செல்லத் தக்கதே" என்றும், "தீவிரவாத அமைப்பு களுக்கு தார்மீக ஆதரவு தெரிவிப்பது பொடா சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகாது" என்றும் உச்சநீதி மன்றம் கூறிவிட்டது.

தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டால், அந்தப் பேச்சின் பின்னணியில் தவறான, குற்ற நோக்கங்கள் இருந்தது என்பதைத் தமிழக அரசு நிரூபிக்க வேண்டும் என்றும் இதைக் கருத்தில கொண்டு வைகோவிற்கு எதிரான பொடா வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் வழக்குகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியது. இந்தப் பின்னணியில் பார்த்தால் வைகோ விரைவில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கலாம் என்று தோன்றுகிறது.

இதற்கிடையில் டிசம்பர் 16 அன்று 'பொடா' சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. எந்த சட்டம் தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்களோ, அந்தச் சட்டத்தை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழகக் கட்சிகளான திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகள் வாக்களித்தது காலத்தின் கட்டாயம் அல்லாது வேறென்ன!

கேடிஸ்ரீ

© TamilOnline.com