சர்வதேச முதலாளித்துவத்தை எதிர்க்க...
பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் நன்மை கிடைக்கும் என்று ஏழைகளை நம்ப வைக்கும் முயற்சி நடக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மட்டுமன்றி நாட்டின் வளர்ச்சிக்காகவும், இறையாண்மையைப் பாதுகாக்கவும் தொழிற்சங்கங்கள் கூட்டாகப் போராட வேண்டியுள்ளது.

தாராளமய பொருளாதாரக் கொள்கையின் பயனாக வேலையின்மை அதிகரித்து உள்ளது. ஊழல் பெருகியுள்ளது. மனித வாழ்க்கையின் தரம் குன்றியுள்ளது. வளர்ச்சி முடக்கப்பட்டுள்ளது.

சமுதாய, பொருளாதார நிலைகளில் மாற்றத்தைக் கொண்டுவரத் தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டுப் போராடுவதும் இயக்கம் நடத்துவதும் அவசியமாகிறது.

உலகமயமாக்கல் கொள்கைக்கு உலகெங்கிலும் எதிர்ப்பு இருக்கிறது. உழைக்கும் மக்கள், புதிய சக்திகள் இந்த எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து வருகின்றன. சர்வதேச முதலாளித்துவத்தை எதிர்க்க, சர்வதேச அளவிலான எதிர்ப்புப் போராட்டமும் அவசியமாகிறது.

குருதாஸ் தாஸ்குப்தா, ஏஐடியுசி பொதுச்செயலர், சென்னையில் நடைபெற்ற சிஐடியு மாநாட்டை வாழ்த்திப் பேசியது.

*****


கல்வியில் கரையிலா நகரம்' என பண்டைய காலத்தில் காஞ்சிபுரம் பெயர்பெற்று விளங்குகிறது. அத்தகைய காஞ்சிபுரத்தில் இந்தப் பல்கலைக்கழகம் ஏற்பட்டுத்தப்பட்டது. சம்ஸ்கிருதக் கல்வியை முதலில் கற்றுத் தரக்கூடிய தாகத் தொடங்கப்பட்ட இக்கல்வி நிலையத்தில் தற்போது நவீன அறிவியல் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

மாணவர்கள் நமது நாட்டுக் கலாசாரத்தை மறக்கக்கூடாது எனக் கருதி இந்திய கலாசாரம் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர் சம்ஸ்கிருதத்தோடு, கம்ப்யூட்டர் குறித்தும் பயில்வதால் உடனே வேலை கிடைத்து விடுகிறது. பட்டம் பெற்றோர் நாட்டுப் பற்று, நல்லொழுக்கம், பண்பாட்டுடன் கூடியவர்களாக விளங்க வேண்டும்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழக 7வது பட்டமளிப்பு விழாவில்.

*****


கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் குடும்பக்கட்டுப்பாடு முறைகளை மக்கள் அதிக அளவில் ஏற்றுள்ளனர். அதற்குக் காரணம் அங்கு எழுத்தறிவு தேசிய சராசரி அளவைவிட அதிகம். அத்துடன் உலகமே வியந்து பாரட்டும் கணினிக் கல்வி தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங் களில் முதன்மையாகவும் கேரளத்தில் சமீபத்திலும் வேர்விட்டு வளர்ந்து வருகிறது. மகாராஷ்டிரமும், குஜராத்தும் ஓரளவு பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இதில் பங்கேற்றன.

மின்ஆளுமை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னைச் சென்னைக்கு அழைத் திருந்தார். அபபோது இதை நேரிலேயே நான் உணர்ந்தேன். பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த வளர்ச்சியை எட்டுவது எப்போது?

அத்வானி, துணைப்பிரதமர், மத்தியப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்.

*****


எத்தனையோ தடங்கல்களைத் தாண்டி இப்படம் தயாராகியுள்ளது. திரைப்படங்களில் ஒரு சில தேவையற்ற விஷயங்களை நீக்க சென்ஸார்போர்டு உள்ளது. ஆனால் தற்போது ஒவ்வோர் ஊர்களிலும் ஒரு குழு உருவாகி வருகிறது. திரைப்படங்களில் இது செய்யக்கூடாது. இதைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது அக்குழு.

இப்படத்துக்கு தடங்கல் ஏற்படுத்தியவர்களுக்குத்தான் நாம் நன்றி கூற வேண்டும். காரணம், சண்டியரைவிட விருமாண்டி என்ற சிறப்பான தலைப்பு கிடைக்க அவர்கள் காரணமாக இருந்துள்ளனர். தடங்கல்களுக்கு உள்ளாகும் படங்கள், மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் விருமாண்டியும் இடம் பெறும்.

கமல்ஹாசனைவிட சிறந்த கலைஞன் இந்தியாவிலேயே இல்லை என்றே சொல்லலாம்.

கே. பாலசந்தர், 'விருமாண்டி' படப்பாடல் ஒலிப்பேழை வெளியிட்டு விழாவில்.

*****


அகில இந்திய ரேடியோவில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது 'இந்தியாவுக்கு ஒரு இந்திரா. தமிழ்ச் செய்திக்கு ஒரு சரோஜ் நாராயணஸ்வாமி' என்ற அளவுக்கெல்லாம் நேயர்கள் கவிதை எழுதி அனுப்பி, என்னைப் பரவசப்படுத்தியது உண்டு!

பொதுவாகச் செய்தி வாசிப்பவர்களுக்கு ஆறுவிதமான தகுதிகள் அவசியம் தேவை: பொது அறிவு, வார்த்தை சுத்தமான உச்சரிப்பு, தங்கு தடையின்றிப் படிக்கும் திறமை, மொழிபெயர்ப்பில் தெளிவு, நம்பகத் தன்மை, பொறுப்போடு செயல்படும் தன்மை. நாடே பற்றி எரிந்தாலும் 'நிலைமை கட்டுக்குள் அடங்கியுள்ளது' என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் பொறுப்பு. அப்போதுதான் வன்முறைகள் பரவாது. இன்று சேனல் போட்டிகளால் செய்தி மிகைப்படுத்தப்படுகிறது.

சரோஜ் நாராயணஸ்வாமி, அகில இந்திய ரேடியோவின் முன்னாள் செய்தி வாசிப்பாளர், பத்திரிகைப் பேட்டியில்.

*****


தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com