டயரி எழுதுவோர் கவனிக்க!
புத்தாண்டு பிறந்தாச்சு. எல்லோருக்கும் புதிய நாட்குறிப்புப் புத்தகங்கள் வரும் நேரம் இது. அதைப் பற்றிய சில முன்னெச்சரிக்கைகளைச் சொல்லி விடுவது எல்லோருக்கும் நல்லது என்று தோன்றியது.

நாட்குறிப்பு எழுதுவதால் நிறையப் பலன்கள் உண்டு. நீங்கள் என்னைப் போல் மறதி மகாதேவனாக இருந்தால், அன்றைய விஷயங்களையெல்லாம் அதில் எழுதி வைத்துவிட்டால் மறக்காமல் இருக்கும். "பதினாலு பைசா குடுத்தாப் போதும், திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து டவுனுக்குப் போயிடலாம் தெரியுமா அந்தக் காலத்தில்" என்று பிற்காலத்தில் பீற்றிக்கொள்ள உதவும். ஆனால் அப்போது வாங்கிய மொத்தச் சம்பளமே முந்நூறு ரூபாய்தான் என்பதைச் சொல்லக்கூடாது. திடீரென்று அப்பா "டேய் வெங்காச்சு, நாம சங்கரன்கோவில் தவசுக்குப் போனமே, அது எந்த வருஷம்?" என்று கேட்டால், சிறிதும் சிரமமே படவேண்டாம். கடந்த சில டஜன் வருட டயரிகளைத் தூசி தட்டிப் புரட்டிப் பார்த்தால் போதும், டாண் என்று பதில் சொல்லிவிடலாம். சொன்னபிறகு இடை விடாமல் சில நாட்கள் தும்மலாம். ஜலதோஷம் தானே குணமாகும் என்று காத்திருந்துவிட்டு, பதினாலாம் நாள் சாயங்காலம் டாக்டருக்கு பீசைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பிவந்தால் பூரணகுணம். வாங்கிய மருந்து அப்படியே அலமாரியில். ஞாபகமாக அதையும் டயரியில் எழுதி வைத்துக் கொள்ளலாம்.

'காலையில் கெட்ட கனவு கண்டு எழுந்தேன். தோசைமாவு புளித்திருந்தது. கடைசி வீட்டுக் கமலாம்பாளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. ஆபீசுக்குப் போனேன். பஸ்சில் ஒரே கூட்டம். மதியம் கொண்டு போன தயிர் சாதமும் புளிப்பு" என்று இவ்வாறு மிக முக்கியமான சமாசாரங்களை எதிர்காலத்தின் பொருட்டாக, சரித்திரக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்களும் உண்டு. ஆனந்தரங்கம் பிள்ளையின் வாரிசுகள். என் பெரியப்பா ஒருவர் துருப்பிடித்த (ஒரிஜனலாகப் பச்சைப் பெயிண்ட் அடித்து மூடிமேல் கிளிப்படம் வரைந்த) டிரங்க் பெட்டிகள் நிறைய அவர் சிறுவயது முதல் எழுதிய பல நாட்குறிப்புகளை அடைத்து வைத்திருக்கிறார். 'டைம் காப்ஸ்யூல்' என்று சில அரசுகள் தமது 'சாதனை'களையும் தனக்கேற்றவாறு சரித்திரம் எழுதுபவர்களின் படைப்புகளையும் ஆழப் புதைத்து வைப்பதுண்டு. பிற்காலத்தில் தோண்டியெடுத்துப் பார்ப்பவர்களுக்கு இதன் மூலம் நமது நகைச்சுவை உணர்வு நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோலப் பெரியப்பாவின் டயரிகளையும் ஆழப் புதைத்து வைத்தால் நல்லது என்று நான் நினைப்பதுண்டு. மொத்தத்தில் இரண்டுமே ஆழப் புதைக்கப்படவேண்டியவை என்பதில் கருத்து வித்தியாசம் இருக்கமுடியாது.

நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்தவன் பிரகாஷ். இருவருக்குமே அப்போதுதான் மீசை முளைக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தது. மிகவும் ரொமாண்டிக் பேர்வழி. அவனுடைய நிரந்தர பயம் என்னவென்றால் இப்படி எல்லாப் பெண்களும் தன்னைப் பார்த்து மயங்கினால் எப்படிச் சமாளிப்பது என்பதுதான். அவர்களெல்லாம் போதாதென்று 'நாட்டியப் பேரொளி' பத்மினிக்கு செண்டிமெண்டலாக ஒரு காதல் கடிதம் எழுத என் உதவியைக் கோரியிருந்தான். அவன் டயரி வைத்திருந்தான். அது மட்டுமல்லாமல் பரிட்சைக்குப் படிப்பதாகச் சொல்லிவிட்டு ராத்திரி பத்து மணிக்குமேல் உட்கார்ந்துகொண்டு அன்றைக்குத் தன்னைப் பார்த்து மையல் கொண்ட மடந்தையரின் பெயர் இத்தியாதிகளை எழுதி மகிழ்வான். பெரும்பாலும் இவனுடைய கற்பனைதான். ஆனால் எழுதி எழுதி தானே நம்பத் தொடங்கிவிட்டான். 'நாட்குறிப்பு என்பது கடிகாரத்துடன் இணைக்கப்படாத டைம்பாம்' என்று ஒரு மேனாட்டறிஞர் (பெயர் மறந்துடுச்சு) சொல்லியிருப்பது அவன் கவனத்துக்கு வரவில்லை போலும்.

அவனுடைய மார்க் ஷீட் வந்தது. "ராத்திரியெல்லாம் ஆந்தை மாதிரி முழிச்சுப் படிச்சுட்டுப் பரிட்சையில் போய்த் தூங்கிவிடுகிறானோ?" என்று முதலில் சந்தேகம் ஏற்பட்டது பிரகாஷின் அப்பாவுக்கு. தமிழில் மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை, தமிழ் வாத்தியார்களே இப்படித்தான் என்று திட்டிவிடலாம்; எல்லாப் பாடங்களிலும் பாரபட்சமில்லாமல் ஒற்றைப்படை மதிப்பெண் வாங்கியிருக்கிறானே. எல்லாரையுமா திட்டமுடியும்? அந்தச் சுபயோக சுபதினத்தில் நான் அங்கு போகவேண்டுமா? என் மார்க் ஷீட்டைப் பார்த்தார். இரட்டைப்படையில் அதுவும் ஐம்பதுக்குமேல் வாத்தியார்கள் மார்க்குப் போடுவதுண்டு என்று அதிலிருந்து தெரிந்தது. என்முன் எதுவும் சொல்லவில்லை.

பரிட்சை முடிந்து விடுமுறை நாட்கள் கழிந்து அப்போது தான் பள்ளி திறந்திருந்தது. பாடமே இன்னும் சூடாக ஆரம்பிக்கவில்லை. பிரகாஷ் ரொம்பக் கரிசனமாக மறுபடியும் இரவில் படிக்கிறேன் என்று உட்கார்ந்தான். நள்ளிரவில் கண்ணகி சிலைமேல் பாய்ந்த லாரி மாதிரி அவனுடைய அப்பா எதிர்பாராத தாக்குதல் நடத்தினார். கையும் டயரியுமாக மாட்டிக் கொண்டான் பிரகாஷ். டைம் பாம் வெடித்தது. அதுவாவது பரவாயில்லை, சின்ன வயதில். கல்யணமானபின் பெண்டாட்டி கையில் மாட்டினால் என்ன ஆவது. விவாகரத்து வரைக்கும் போய்விடுமே!

அதனால்தான் நிறையப்பேர் நாட்குறிப்பு எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். வருஷா வருஷம் தவறாமல் நல்ல விலை உயர்ந்த டயரிகளைப் பேராசையோடு அன்பளிப்பாகப் பிடுங்கிக்கொள்வார்கள். மீண்டும் தனக்குப் பிடித்தவர்கள் கையில் வலியத் திணிப்பார்கள். அதற்கும் மனசு வராமல் 'ஏதாவது ஒரு நல்ல நாள் வரும், அன்றைக்கு உபயோகப்படுத்தலாம்' என்று அலமாரி நிறைய அடுக்கி வைத்திருந்து அடுத்த வருஷம் தூக்கிப் போடுபவர்களுக்கும் குறைவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் "எக்ஸ்ட்ரா டயரி இருந்தா ஒண்ணு குடேன்" என்று கேட்டுப் பாருங்கள், விசுக்கென்று புது டயரியைப் பின்னால் மறைத்துக் கொண்டு "எனக்கு வந்ததே ஒண்ணே ஒண்ணு..." என்று இழுப்பார்கள்.

என்னுடைய தூரத்துச் சித்தப்பா (அவர் கனடாவில் இருந்தார் - ரொம்ப தூரம் தானே) டயரியின் எல்லாப் பக்கங்களிலும் மேலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுக் கீழே விதவிதமாய்க் காக்காய்ப் படங்கள் போட்டிருப்பார். ஆர்.கே. லக்ஷ்மணுக்குப் போட்டிதான். ஆனால் வரைந்திருப்பது காக்காய் என்று அவர் சொல்லித்தான் தெரிந்து கொள்ளவேண்டும். சலவைக் கணக்கு, ஹைக்கூ, ஸ்ரீ ராமஜயம், பழைய பேப்பர்க்காரனுக்கு விலைக்குப் போட்டவைகளின் கணக்கு, தான் செய்த, செய்ய வேண்டிய, செய்ய மறந்த வேலைகளின் பட்டியல் என்று இவற்றில் ஏதாவது ஒன்றுமட்டும் எழுதப் பயன்படுத்துபவர்களும் உண்டு. ஜனவரி 7ஆம் தேதி புது டயரி கிடைத்ததும் 'இன்றைக்கு இந்த டயரியை ராமசாமி கொடுத்தார். இனிமேல் தவறாமல் எழுதுவேன்' என்று சூளுரைத்துவிட்டு, 9ஆம் தேதியோடு மறந்துவிட்டவர்கள் ஏராளம்.

என் நண்பன் சுப்பு மறக்க மாட்டான். காலையில் எழுந்து பல்தேய்த்ததும் டயரியை எடுத்து வைத்துக்கொண்டு மணிரத்னம் அடுத்த படத்துக்குக் கதை யோசிக்கிற தோரணையில் உட்காருவான். ஊஹ¥ம், ஒன்றும் தோன்றாது. கொஞ்சநேரம் உட்கார்ந்தபின் தன் மனச்சிக்கலை (காலையில் எவ்வளவு முக்கினாலும் சில சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும்) ஒப்புக்கொண்டு, டயரியை மூடிவைத்து விட்டு வேறு வேலையைப் பார்ப்பான். முதல் பக்கத்தில் பெயர், முகவரி, பிளட்குரூப் எழுதியது தவிர அந்த நாட்குறிப்பில் மற்றப்படி வேறெதுவும் இல்லை. ஆனாலும் அதற்கு நீங்கள் சுப்புவைப் பழிக்க முடியாது.

ராம்கி கொஞ்சம் ஆங்கிலத் தேர்ச்சி பெற்றவன் - அதைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியாது. "டயரி என்று சொல்லுவதே தப்பு, அந்த வார்த்தைக்கும் பால்பண்ணைக்கும் தொடர்பு உண்டு" என்பான். டைரி என்பதுதான் சரியாம். எப்படியோ பத்துக்கு அஞ்சு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் பேசவோ எழுதவோ கூடாது என்று தமிழர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இதில் சரி தப்பெல்லாம் பார்க்கவா முடியும்?

நான் பார்த்தவரையில் யாருடைய நாட்குறிப்பு செக்ரட்டரியால் எழுதப்படுகிறதோ, அதுதான் தவறாமல் ஒழுங்காகச் செய்யப்படுகிறது. நானும் ஒரு அழகான செக்ரட்டரிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் - தவறாமல் நாட்குறிப்பு எழுதத்தான். அட, யாரய்யா அது, டைம்பாமை நினவுபடுத்தறது!

மதுரபாரதி

© TamilOnline.com