வாழ்முறை மதங்களில் வெறியினை வைத்தாய் மொழிகளின் இடையில் வெறுப்பை வைத்தாய் அமைதியின் நிலையில் யுத்தம் செய்தாய் சொற்களின் புரிதலில் இழுக்குச் சேர்த்தாய் உயிர்க்கொலை புரிதலும் வீரம் என்றாய் மானுடம் தன்னில் வேற்றுமை வைத்தாய்
சுடர்விடும் அறிவினில் மடமைகள் வைத்தாய் அறிவின் பயன்களில் அழிவைச் சேர்த்தாய் சிந்தனை, செயல்களில் சிதைவும் வைத்தாய் செயல்திறன் இருப்பினும் வெற்றியை மறைத்தாய் வீரியம் கொடுத்துச் சஞ்சலம் செய்தாய் எண்ணத் துணிச்சலில் தளர்ச்சிகள் வைத்தாய்
அறிவுடை மூளையில் ஆத்திரம் வைத்தாய் வெற்றியின் மகிழ்ச்சியில் தோல்வியைச் சேர்த்தாய் நிறைவின் இடையினில் முரண்கள் படைத்து குறைகளை உணர்த்தக் காரணம் கேட்டேன் 'குறைகளும் முரண்களும் இலையெனில் வாழ்க்கையில் நிறைகள் நீ எங்ஙனம் உணர்வாய்?' என்றான்.
தி. சிவகுமார் |