சென்னையிலிருந்து லக்னௌவுக்கு சென்றபின்னும், இருபத்தி ஆறு ஆண்டுகள் தமிழ் நாட்டில் இருந்த வாசனை போகவில்லை. இந்தி மொழி தெரிந்திருந்த போதிலும் தமிழ்க் குரல் கேட்காதா என்று அலைவேன். அப்போதெல்லாம் சன் டி.வி கூட இல்லை. என் கணவருக்கு இருந்த தெல்லாம் ஒரே ஒரு தமிழ் நண்பர்தான். அவரது குடும்பத்தார் போபாலில் இருந்தனர். வெளியே சாமான் வாங்கச் சென்றால் தமிழ்க்காரர்கள் கண்ணில் படுகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்ப்பேன். யாராவது பெண்மணி தமிழ் நாட்டு டிரேட்மார்க்குடன் தென்பட்டால் உடனே அவர் பக்கமாகச் சென்று தமிழில் உரத்த குரலில் பேசுவேன். அவர்கள் நிமிர்ந்து என்னைப் பார்த்தால் போதும், உடனே தெரியாததைப் போல் "தமிழா?" என்று கேட்பேன். அவர்கள் மேற்கொண்டு பேசினால் "எங்கே இருக்கிறீர்கள்", "பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்" என்றெல்லாம் விசாரித்துத் துருவிவிடுவேன். இது ஏதோ திருட்டுப் பார்ட்டி என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள் என்று என் கணவர் பயமுறுத்துவார்.
தமிழ் ஆட்கள் யாரும் அகப்படவில்லை என்றால் அன்று வெளியே சென்றது போலவே இருக்காது. குறைந்தது தெலுங்கு அல்லது மலையாளம் பேசுவோராவது கிடைத்தாலும் போதும். இதற்காகவே ஐயப்பன் கோவிலுக்கு வாராவாரம் சனிக்கிழமை தவறாமல் போவேன். கோவிலோ இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. ஒரு திண்ணையில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் தமிழ் நாடா, ஆந்திராவா அல்லது கேரளமா என்று நடை உடை பாவனைகளை வைத்துக் கண்டுபிடிப்பேன். இங்கு அட்லாண்டாவில் உள்ள தென்னிந்தியர் களை விட லக்னௌவில் தொகை கம்மிதான். (இங்கும் கோவிலுக்கு அதற்குத் தான் செல்கிறேன்!) காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளின் அழகே தனி. தமிழர்கள் நம்மை அடையாளம் கண்டுகொண்டு தயக்கத்துடன் சிரிப்பதே நமக்கு தனி மகிழ்ச்சிதான்.
ஆனால் எனக்கு ஒரு கெட்ட பழக்கம். யாரேனும் வடநாட்டவர் தப்பு செய்து விட்டால் கோபத்தில் தமிழில் திட்டி விடுவேன். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று எனக்கு இந்தியில் திட்டும் வார்த்தைகள் தெரியாது, இரண்டு, அவர்களுக்குப் புரிந்தால் நான் தொலைந்தேன். ஏனென்றால் உ.பி.காரர்களுக்கு வாய் என்னைவிட நீளம். அப்படித்தான் ஒரு வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் "இந்தச் சாதத்தைக் கொண்டு போய் காக்காவுக்கு வை" யென்று குக்கர் கிண்ணத்தைக் கொடுத்தேன். அவள் கிண்ணத்தோடு சாதத்தைச் சுவரின்மேல் வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
"கிண்ணம் எங்கே?" என்று கேட்டால் "காக்காவுக்கு வைத்து விட்டேன். நீங்கள் தானே சொன்னீர்கள்!" என்றாள். சிரிப்பும் கோபமும் சேர்ந்து தமிழில் திட்டினேன். ஏதோ திட்டுகிறேன் என்று புரிந்து கிண்ணத்தை ஓடிப்போய் எடுத்துக் கொண்டு வந்தாள்.
மற்றொரு முறை கம்பெனிக் காரில் டிரைவருடன் பெரிய ஷாப்பிங் இடத்துக்குச் சென்றோம். கடைகள் அருகில் வண்டியை நிறுத்தாமல் தூரத்தில் உள்ள பார்க்கிங் இடத்தில் காரை நிறுத்தினார் டிரைவர். ஏனென்று கேட்டால், "அங்கேயே நிறுத்தி இருக்கலாம். நீங்கள் சொல்லவில்லை அதான் இங்கு வரைக்கும் வந்துவிட்டேன். நீங்கள் நடந்துத்தான் போகவேண்டும். இது ஒன் வே" என்றார். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எப்படி இவ்வளவு தூரம் நடப்பது என்ற கோபத்தில் தமிழில் "இதை முன்னாடியே சொல்லியிருந்தா நாங்க அங்கேயே இறங்கி இருப்போமில்லையா, மடையா" என்று சொல்லிவிட்டேன். நல்ல வேளை அவனுக்குப் புரியவில்லை. ஆனால் என் கணவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
லக்னௌவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை இரவு நேரம் தீபாவளிக்கு சிக்கன் (chikan work) வேலைசெய்த துணிகள் வாங்கிக்கொண்டு பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக்கொண்டிருக்கையில் ஒரு சிறுவன் சரம் சரமாக மல்லிகைப்பூ விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். உ.பி.யில் குடும்பப் பெண்கள் தலையில் பூ சூடிக்கொள்ள மாட்டார்கள்; வேசிகள்தான் தலையில் பூ வைத்துக்கொள்வர். சென்னை யில் தினமும் பூ வைக்கும் பழக்கம் உள்ள நான் முதல்முறை மல்லிகைப் பூவைப் பார்த்து ஆசைப்பட்டு ஒரு முழம் வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் தீபாவளிக்குத் தலையில் வைத்துக் கொள்ளலாம் என்று அவசரத்தில் கையிலேயே எடுத்துக் கொண்டு பேருந்தை நோக்கி ஓடினேன்.
எதிரில் வந்து கொண்டிருந்தவர்களை நான் பார்க்கவில்லை. அப்போது கணீரென்ற சென்னைத் தமிழ் என்னை நிதானத்துக்கு கொண்டு வந்தது. "பார்றா இந்த பொண்ண. தலைல பூ வெக்காம கைல தொங்கவுட்டுகுனு போவுது. சரியான பேக்கு" என்றது ஒரு ஆண் குரல். "ஆமாம், லூசு" என்றது பெண் குரல். அப்படியே நின்று விட்டேன். எனக்குத் தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் அவர்கள் பேசினர். ஆனால் நான் ஏதும் சொல்லவில்லை. பேருந்து நகர்வதைக் கூடக் கவனிக்கவில்லை.
அன்று முதல் எவரையும் திட்டுவதில்லை - மன்னிக்கவும் ,அவர்களுக்குத் தெரியாத மொழியில் திட்டுவதில்லை - என்று எனக்கு நானே தீர்மானம் செய்துக்கொண்டேன்.
ஷமிளா |