யான் மார்ட்டெல் எழுதிய 'பை-யின் வாழ்க்கை'
கற்பனை செய்து பாருங்கள். முடிவில்லாத பசிபிக் சமுத்திரம். அதில் நீங்கள் குடும்பத்தாருடன் பெரிய கப்பலில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். எல்லாரும் உறங்கிக்கொண்டிருக்கும் ஓர் அதிகாலை வேளையில் கப்பல் மூழ்கிவிடுகிறது. நீங்கள் மட்டும் ஓர் உயிர்காப்பான் படகில் (Life Boat) ஏறித் தப்பிக்கிறீர்கள். உங்கள் கண்முன் பெரிய கப்பல் உடைந்து சிதறுகிறது. அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விடுகிறீர்கள். சிறிது நேர மயக்கத்திற்குப் பிறகு எழுந்து என்ன நடந்தது என்று யோசிக்கிறீர்கள். எல்லாம் ஞாபகம் வருகிறது. எங்கேயிருக்கிறோம் என்று புரிகிறது. உங்கள் சிறு படகைச் சுற்றி முடிவில்லாத கடல். நீங்கள் மட்டும் அதில் தனியாய். இல்லை, சொல்ல மறந்து விட்டேன். நீங்களும் ஒரு 450 பவுண்டுகள் எடையுள்ள வங்காளப் புலியும் மட்டும். உயிருள்ள புலி. கடலின் மேற்பரப்பிலோ அடிக்கடி கத்தி முனை முக்கோணங்கள் தோன்றி மறைந்தவண்ணம் இருக்கின்றன. சுட்டெரிக்கும் வெயில், மழை, காற்று, சூறாவளி, தாகம், பசி, பசித்தபுலி... என்ன செய்வீர்கள்?

கனடா நாட்டு எழுத்தாளர் யான் மார்ட்டெலுக்கு இந்தக் கேள்வி மிகவும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கவேண்டும். உயிர்பிழைப்பதற்கான இந்தச் சிக்கலான போராட்டம் எப்படி நம் நாகரீகத் தோலை உரித்து, நம் மதிப்பீடுகள், வாழ்முறைகள், கொள்கைகள் எல்லாவற்றையும் குலைத்து, வாழ்வின் அடிப்படைகளுக்கு நம்மை இழுத்துச் சென்று நிர்வாணமாய் நிறுத்தி விடுகின்றன! இருந்தும் நம்பிக்கை, மனித (மிருக) நேயம் எல்லாம் அந்த நிர்வாணத் திலிருந்து எழுந்து ஓர் உன்னதத்திற்கு உயர்வதை இந்தப் புதினம் மிக எளிமையாய்க் காட்டிவிட்டு நம்மை ஓர் வியப்பில் ஆழ்த்தி விடுகிறது.

2002-ம் வருட 'மேன் புக்கர்' பரிசு வாங்கிப் பிரபலமடைந்த ஆங்கில நாவல் இது. இதன் கதாநாயகன் பாண்டிச்சேரியில் பிறந்த 'பிஸ்கைன் மோலிட்டர் படேல்' (சுருக்கமாக 'பை படேல்') என்பதால் மட்டும் இங்கே அறிமுகப்படுத்தும் தகுதியைப் பெற்று விடவில்லை. பாண்டிச்சேரியில் தொடங்கி, பசிபிக் சமுத்திரத்தில் ஊர்ந்து, கனடாவில் முடியும் பையின் வாழ்க்கைப் பயணம் குரூர உண்மைகளையும், சுய சோதனைகளையும் உள்ளடக்கி, மிருக-மனித உறவில் புதிய பரிமாணத்தையும், இறை நம்பிக்கையையும் உருவாக்கும் பயணமாய் நம் சிந்தனையில் விரிவது ஒரு பேரனுபவம். அதுதான் இந்த அறிமுகத்திற்கான தூண்டுதல்.

கடவுள் நம்பிக்கை மிகுந்த, வெவ்வேறு தருணங்களில் எல்லா மதங்களையும் கண்டு ஆச்சர்யப்பட்டு, அவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மிக்க பதின் வயது இளைஞனாய் பை படேல் நமக்கு அறிமுகமாகிறார். "ஒரு மதம் மட்டும் எனக்குப் போதாது. எல்லாமே வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நிறைவை உணருகிறேன்" என்று சொல்லி ஐந்து வேளை தொழுகையும், விவிலியத்தின் வரிகளுக்கு மண்டியிடலும், விஷ்ணு பஜனைகளுக்கு நமஸ்காரமும் செய்து எல்லா மதங்களையும் தழுவிக்கொள்கிறார். நாளுக்கு நாள் அவரது இறை நம்பிக்கை பரந்து விரிகிறது.

'இது பாடம் கற்கும் தருணம்' - திடீரென்று ஒரு நாள் அறிவிக்கிறார் பையின் தந்தை. பையையும் அவர் சகோதரனையும் அவர் நடத்திவரும் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கூண்டருகே அழைத்துச் சென்று அவை செல்லப்பிரணியல்ல, எத்தனைக் கொடிய மிருகம் என்பதை அதிர்ச்சிதரும் வகையில் நிரூபிக்கிறார். ஒரு வாரத்திற்குப் பேயடித்தது போன்ற பிரமையில் பை பட்டேல்.

ஏதேதோ காரணங்களுக்காக கனடாவிற்கு குடிபெயர அவர் தந்தை முடிவெடுக்கிறார். அமெரிக்க உயிரியல் கண்காட்சிகளுக்கு எல்லா மிருகங்களையும் விற்க ஏற்பாடுகள் செய்துவிட்டு அவற்றைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறது பையின் குடும்பம். கப்பல் நடுவில் மூழ்கிவிடுகிறது. பை படேலும் இன்னும் சில மிருகங்களும் மட்டும் உயிர் காப்பான் படகில். மையக்கதை இங்கேதான் தொடங்குகிறது.

மனிதன் தன் மிருகக்குடும்ப பூர்வீகத்தை மீள்கண்டுபிடிப்பு செய்வது இத்தகைய தருணத்தில்தான். தன் எல்லையைத் தன் சிறுநீரால் வரைந்து உணர்த்தும் வரிப் புலிக்கும், மனிதனுக்கும் ஒன்றும் வித்தியாசமில்லாமல் போவது இந்த நேரத்தில்தான்.

மீன்பிடித்து, ஆமை பிடித்து, வித விதமான கடல் வாழ் உயிர்களைப் பிடித்து, முடிவில் சக மனித மாமிசத்தைக் கூடத் தின்னக் கூச்சத்தை இழக்கும் பையின் பரிணாம வீழ்ச்சி, உயிர் மேலான ஆசையின் எல்லையற்ற கொடிய குணாதிசயங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. உணவாக மாறி விட்ட அந்த உயிரினங்களின் ஆன்மாவிற்கு நாமும் பையுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்துவிட்டு அவர் உண்பதை ஆமோதித்து வேடிக்கை பார்க்கிறோம்.

பையின் ஆர்வக்கோளாறான மூளைக்கு உயிர்காப்பான் படகின் விசேஷ சுரங்க அறையின் சாமன்கள் பெரிய மோட்சத்தைக் கொடுக்கின்றன. சுத்த நீர்க் குடுவையை உடைத்து முதல் சொட்டை அவர் நாக்கு ருசிக்கும்பொழுது நமக்கும் நீரின் அருமை புலப்படுகிறது.

"புலியே! உன்னை விடப் பலம் வாய்ந்த மிருகம் நான். என்னருகில் வருவது உனக்கு மிகப்பெரும் அபாயம்" - எப்படிப் புலியை இப்படி நம்பவைப்பது?

முதலில் புலியைப் பார்த்துப் பயந்து நடுங்கும் பை படேல், பிறகு நாட்கள் செல்லச் செல்ல அதைத் தன்னருகே நெருங்க விடாமல் பழக்கிவிடும் வித்தையைக் கண்டுபிடிப்பது, வாழ்வின் முனையில் நின்றிருந்தபோதும் உயிராசையினால் மலரும் படைப்பூக்கத்தை நமக்குக் காட்டிச் சிலிர்க்கவைக்கிறது. அதே புலிதான் பையின் தனிமையைப் போக்கும் பற்றுக் கோடாகி, முடிவில் அவரது இருப்பிற்கும், வாழ்வாசைக்கும், உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கும் சூட்சும காரணியாகிறது.

முழுக்கதையையும் இங்கே சொல்லிவிட முடியாது. அது குறிக்கோளும் அல்ல.

திருவனந்தபுரத்து உயிரியல் காட்சிப் பூங்காவில் எத்தனை நாட்கள் செலவிட்டு இருப்பார்? பாண்டிச்சேரியில்? பல்வேறு இந்து மடங்களில்? யான் மார்ட்டெல் இந்தப் புதினத்திற்காக உழைத்த உழைப்பு அபரிமிதமானது. ஓர் இந்திய நாட்டு எழுத்தாளர் எழுதியது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருப்பது அவரது கலையின் சிரத்தையைக் காட்டுகிறது. மிகவும் எளிய ஆங்கில நடை. நாமே பை படேலாக மாறிவிடும் அளவு வருணனைகள் நிஜத்தில் தோய்ந்திருக்கின்றன.

ஒரு கற்பனையான கதை இத்தனை கேள்விகளை எழுப்ப முடியுமா? பேரிருட்டில், தனிமையில், இறப்பின் வாயிலில் நின்றிருக்கும் போதும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைக் கோடி காட்ட இயலுமா?

பையின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.

Life of Pi
Yann Martel
A Harvest Book, Harcourt Inc.
ISBN: 0-15-100811-6

மனுபாரதி

© TamilOnline.com