உறவினர் வட்டமிட இறுதியாக மரணம்
இக்கட்டுரையின் தலைப்பு யாரோ வயதான நோயாளியைக் குறித்துத் தந்தியடித்து உறவினர்களை வரவழைத்துச் சொந்தங்கள் சூழ்ந்திருக்கும் வேளையில் படுக்கையிலேயே உயிர் பிரிந்த செய்தியைத் தெரிவிப்பது போல் தோன்றினால் குறுக்கெழுத்துப் புதிர் வெற்றியடைந்து உள்ளதென்று பொருள்.

இந்த "இழவு வீட்டுக் காட்சி"க்கும் இக்குறிப்புக்கான விடைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை!

இந்தத் தலைப்பை "உறவினர்", "வட்டமிட", "இறுதியாக மரணம்" என்று மூன்று பகுதிகளாகப் பிரிப்போம்.

இரண்டாம் பகுதிக்குப் பொருள்:

வட்டமிட = சுற்ற.

மூன்றாம் பகுதிக்குப் பொருள்:

"இறுதியாக மரணம்" என்பது மரணம் என்ற சொல்லின் இறுதியாக வரும் எழுத்தான 'ம்' என்பதைக் குறிக்கிறது.

இவ்விரண்டு பகுதிகளின் பொருளைச் சேர்ப்போம்: சுற்ற + ம் = சுற்றம். அதுதான் புதிரின் விடை. சுற்றம் என்றால் உறவினர் என்ற முதல் பகுதி வருகிறதா?

இப்படித்தான் குறுக்கெழுத்துப் புதிரில் கதையடித்து ஏமாற்றி வருகிறேன்! ஆம், புதிராளி என்ற வகையில் என்னுடைய தலையாய கடமை உங்களை ஏமாற்றித் திசை திருப்புவதுதான்.

"A crossword clue should say what it means, but need not mean what it says!" என்று ஆங்கிலத்தில் புதிர்களை அமைப்பது குறித்து அழகாகக் கூறிவருகிறார்கள். நியூயார்க் நகரிலிருந்து வெளிவந்த World பத்திரிகையில் 1913 டிசம்பர் 21இல் எல். ஏ. வைன் என்பவர் "word-cross" என்ற பெயரில் எழுதியதுதான் முதற்புதிர் என்கிறார்கள். ஆனால் ஏனோ அமெரிக்கர் கள் குறுக்கெழுத்துப் புதிரில் முன்னோடியாக இருந்தும் பின் தங்கி விட்டார்கள்.

அமெரிக்கச் செய்தித்தாளில் வரும் புதிர்களெல்லாம் வெறும் அகராதி புரட்டித் தீர்த்துவிடக் கூடிய quick clues கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தேர்ந்த கணினி மென்பொருள் வல்லுநரும் புதிராளியும் சேர்ந்தால் அமெரிக்கப் புதிர்களைத் தீர்க்க ஒரு மென்பொருளை உருவாக்கி விட இயலும் என்று நம்புகிறேன். நகைச்சுவைக்குப் பெயர் போன அமெரிக்கர்களிடம் இது பெருங்குறைதான்.

இங்கிலாந்தில் டைம்ஸ், கார்டியன் போன்ற செய்தித்தாள்கள் cryptic clues என்ற வகையில் குயுக்தியான (நாம் பயன் படுத்துவது போன்ற) குறிப்புகளுடன் வெளிவருகின்றன. உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்: One's take-off could be entertaining (8)

கன்கார்டு விமானத்தில், அது ஓடு தளத்திலிருந்து ஒய்யாரமாக மேலெழும்பிச் சென்று கருட வாகனம் போன்ற மூக்கை உயர்த்தும் அழகில், மனதைப் பறிகொடுத்த நமக்கு இதற்கான விடை stripper என்றால் ஏமாற்றியது போலிருக்கும். taking off என்றால் உடைகளைக் களைவது என்ற பொருளுண்டு என்பதைக் கொண்டால் புதிராளியின் திறமை நம்மை வியக்க வைக்கும்.

(சென்ற வாரம் எகனாமிக் டைம்ஸில் வெளிவந்தது)

ஒரு கிழிந்த சால்வையைப் புலவருக்குப் பரிசாக அளித்த செல்வந்தர் அதன் அழகை வியந்து "இதில் பூ இருக்கிறது, காய் இருக் கிறது" என்று அச்சால்வையில் நெய்யப்பட்ட வேலைப்பாட்டைக் குறிப்பிட்டாராம்.

புலவர் ஆமோதித்து "ஆம் அய்யா. பூ, காயென்ன, பிஞ்சுமிருக்கிறது" என்று கூறி அது பிய்ந்திருப்பதைச் சமயோசிதமாகச் சுட்டிக் காட்டினாராம். காளமேகத்தின் சிலேடைகள், பல வஞ்சப் புகழ்ச்சிப் பாடல்கள், விடுகதைகள் இதையெல்லாம் பார்த்த நமக்குச் சொல்களில் விளையாடும் புதிரில் புதிதாய் ஒன்றுமில்லை, ஆங்கிலத் திலிருந்து பெறப்பட்ட கட்ட அமைப்பான வடிவம்தான் புதிது.

எளிமையான வகைக் குறிப்புகள் ஆங்கிலத்தில் anagram எனப்படும் சுழற்சொல் வகை. அதாவது ஒரு சொல்லின் எழுத்து களை வேறுவிதமாக மாற்றியமைத்துப் பெறப்படும் மற்றொரு சொல்.

உதாரணம்:

கண்ணீர் ததும்ப கலங்கிய கமல் (3)

மேலோட்டமாகப் படிக்கையில் நடிகர் கமலஹாசனுக்கு ஏதோ கஷ்டம் போலிருக்கிறது என்று தோன்றும். ஆனால் "கலங்கிய" என்று குறிப்பிட்டிருப்பது சொற்களைக் கலக்கியதால் ஏற்பட்ட விளைவு என்று ஊகிக்கலாம். "கமல்" கலங்க "மல்க" என்ற சுழற்சொல் கிடைக்கும். "மல்க" என்றால் "கண்ணீர் ததும்ப".

மற்றோர் உதாரணம்:

தருமம் சீர் குலைந்த வயல் நாடு (4)

விடை: மருதம் (குறிஞ்சி, முல்லை ஞாபகம் வருகிறதா?) என்பது தருமம் என்பதன் சுழற்சொல்.

தமிழின் பாரம்பரியமான சிலேடை வகையில் ஓர் உதாரணத்தைத் தருகிறேன்: மூன்று மனைவியர்க்கு ஒரு மணிமாலை (5)

இதன் விடை: முத்தாரம்

எப்படி? முத்து + ஆரம் என்று பிரித்தால் உங்களுக்குக் கிடைப்பது மணிமாலை. அதையே மூன்று + தாரம் என்றும் பிரிக்கலாமல்லவா! இப்போது உங்களுக்குக் கிடைப்பது... நான் சொல்லமாட்டேன்.

வெட்டுவகைக் குறிப்புக்கு ஓர் உதாரணம்:

சுரமற்ற அமைச்சர் தாவுவதில் தேர்ந்தவர் (4)

விடை: மந்தி (தாவுவதில் திறமையுடைய விலங்கு). மந்திரி(அமைச்சர்) என்ற சொல்லிலிருந்து "ரி" என்ற கர்நாடக இசைச் சுரத்தை வெட்டினால் விடையைப் பெறலாம்.

சிக்கிய வகைக் குறிப்பு: இதில் விடைச் சொல் குறிப்பிலேயே சிக்கியிருக்கும்.

மாதம் பதினாறு பெற்ற கணவன்-மனைவி (4)

விடை: தம்பதி, "மாதம்-பதினாறு" என்பதில் சிக்கியுள்ளது.

நடு இரவில் சூரியன் (2)

விடை: ரவி (வடமொழிச் சொல்)

பாசிப் பிடித்திருக்கும் கடற்கரையில் காணப்படும் (3)

விடை: சிப்பி

இன்னும் பல சுவையான தந்திரங்களும் உண்டு. அவற்றை வரும் இதழில் கொடுக்கிறேன்.

இவ்வாறான விடைகளை அடையத் தேவையான தமிழறிவு அநேகமாகப் பத்திரிகைகள், கதைகள் செய்தித்தாள் களைப் படிப்பது தமிழ்த் தொலைக் காட்சிச் செய்திகளைக் கேட்பதன் மூலம் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் மற்றொரு முக்கியமாய்த் தேவைப்படும் திறன் வேறு கோணப் பார்வை (lateral thinking).

அதுசரி, இது மாதிரி பைத்தியக்காரத் தனமான சொல் விளையாட்டுகளால் என்ன பிரயோஜனம் என்கிறீர்களா?

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியப் படைகள் தங்கள் ராணுவச் செய்திகளை எனிக்மா (enigma) என்ற எந்திரத்தின் மூலம் சங்கேதமாய் மாற்றி அனுப்பினர். அந்தச் சமிக்ஞைகளை இங்கிலாந்தில் எப்படியோ ஒட்டுக் கேட்கும் கருவிகளைக் கொண்டு பெற்றனர். ஆனால், அவையெல்லாம் வெறும் எழுத்துக் குவியல்களாகவே இருந்தன, சொற்களே இல்லை. அந்தப் புதிரைத் தீர்க்க, புரிந்துகொள்ள பல விதமான வல்லுநர்களடங்கிய குழு அமைக்கப்பட்டது. குறுக்கெழுத்து விற்பன்னர்களும் அதில் இருந்தனர். அது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை அடுத்த இதழில் சொல்கிறேனே.

வாஞ்சிநாதன்

*****


வஞ்சிக்க ஒரு வாஞ்சிநாதன்

தென்றல் இதழில் வரும் குறுக்கெழுத்துப் புதிரை இதழ் கிடைத்ததும் முதல் காரியமாக விடுவிக்க உட்காருபவர்கள் உண்டு. ஒன்றுமே புரிவதில்லை என்பவர்களும் உண்டு. புதிர் என்றாலே புரியாததுதானே? இல்லை, புரியும் என்கிறார் இந்தக் கட்டுரையையும் புதிரையும் எழுதும் வாஞ்சிநாதன்.

தமிழின் முதல் மின்னிதழான ஆறாம்திணையில் (www.aaraamthinai.com) நூறு வாரங்கள் தொடர்ந்து குறுக்கெழுத்துப் புதிர்களை அமைத்து வெளியிட்டார். ஆங்கிலக் குறுக்கெழுத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர். இவர் தன் கல்லூரி நாட்களிலேயே குறுக்கெழுத்துப் புதிரை அமைத்து ஒளிநகலாய்ச் சுற்றுக்கு விட்டதுண்டு. "அதை யார் முதலில் போடுவது என்று நானும் என் தங்கையும் போட்டி போடுவோம்" என்று ஒரு உரையாடலின் போது கீதா பென்னட் குறிப்பிட்டார்.

தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் உள்ள இவர் ஆறாம் திணையில் 'வெண்பா மேடை' என்ற தலைப்பில் தானும் பிறரும் எழுதிய வெண்பாக்களைப் பற்றிச் சுவையாக எழுதிவந்துள்ளார்.

அதுமட்டுமல்ல, நீங்கள் ஒரு வரியை அல்லது பாடலை எழுதிவிட்டு அது வெண்பா இலக்கணத்தின்படி இருக்கிறதா என்று அறிய 'யாப்பறிஞன்' என்ற மென்பொருளை வடிவமைத்திருக்கிறார். www.cmi.ac.in/~vanchi/yxpert.html என்ற இடத்திற்குப் போய்ச் சோதித்துப் பாருங்களேன்.

"இந்தப் பணியில் எனக்கு மிகவும் திருப்தியளிப்பது 'நீங்கள் நன்றாக ஏமாற்றுகிறீர்கள், மேலும் மேலும் ஏமாற்றுங்கள்' என்று கூறி இந்த ஏமாற்று வேலைக்கு மின்னஞ்சலில் வரும் பலவிதமான பாராட்டுரைகள்தான்!" என்கிறார் Chennai Mathematical Instituteஇல் பணிபுரியும் வாஞ்சிநாதன். கணிதத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற இவர் குறுக்கெழுத்தின் மூலம் நம்மை வஞ்சித்தாலும் நாம் வாழ்த்துகிறோம்.

மதுரபாரதி

© TamilOnline.com