சர்க்கரைப் பொங்கல்
இதை இரண்டு வகையாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கிண்ணம்
பயத்தம் பருப்பு -1/2 கிண்ணம்
வெல்லம் - 1 1/2 கிண்ணம்
முந்திரி - 5 அல்லது 6
ஏலக்காய் - 4
நெய் - 1 கிண்ணம்
திராட்சை - 6
பச்சைக் கற்பூரம் -சிறிது

செய்முறை 1

அரிசி, பருப்பை வாணலியில் சிறிது வாசனை வர வறுத்துக் குக்கரில் குழைய வேகவிடவும். பிறகு எடுத்து அதில் வெல்லம் போட்டுக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து வாசனை போகக் கொதித்தவுடன் முந்திரி திராட்சை வறுத்துப் போட்டு ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போடவும். நெய் தேவையானல் விடலாம்.

அரிசி, பருப்பு வேகும் போது 1 டம்ளர் பால் சேர்த்து வேகவிட்டால் பொங்கல் மேலும் சுவையாக இருக்கும்.

பாதி சர்க்கரை, பாதி வெல்லமும் போட்டுச் செய்யலாம்.

செய்முறை 2

அரிசி 1 கிண்ணம் எடுத்து 2 கிண்ணம் பால் விட்டு வேகவிடவும். பிறகு எடுத்து ஒரு வாணலியில் 1 1/4 கிண்ணம் வெல்லம் போட்டுப் பாகு செய்து கொள்ளவும்.

அதில் தேங்காய் துருவல் 1 கிண்ணம் போடவும்.

வெல்லம் கரைந்து ரொம்ப பாகு முற்றவிடாமல் வெந்த சாதத்தை அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

நெய் விட்டு நன்கு சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு முந்திரி, ஏலக்காய் போடவும். திராட்சை தேவையில்லை.

தளதளவென்று ஒன்று சேர்ந்துவரும் போது இறக்கி வைக்கவும். இதுவும் மிகவும் சுவையான பொங்கல்.

தங்கம் ராமசுவாமி

© TamilOnline.com