குறள் கூறும் மேலாண்மை - (பாகம் 2)
ஐசிஐசிஐ இன்ஃபோடெக் ஸ்ரீனிவாசன்

ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனம் வெகு வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய இந்திய மென்பொருள் நிறுவனங்களுள் ஒன்று. அதன் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயலாட்சி அலுவலருமான (Managing Director and Chief Executive Officer) வி. ஸ்ரீனிவாசன் திருக்குறள் காட்டும் மேலாண்மை வழிமுறைகளைப் பற்றி ஒரு தனிப் புத்தகமே எழுத முடியும் என்பவர். கணக்குத் துறையில் சென்னைப் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கத்தை வென்ற இவர் பட்டயக் கணக்கர் (Charted Accountant) தேர்விலும் முன்னணி இடத்தைப் பெற்றவர். விலைமதிப்பீட்டுக் கணக்கர் (Cost Accountant), நிறுமச் செயலர் (Company Secratary) என்ற தகுதிகளையும் பெற்ற இவர் 1980இல் ஐசிஐசிஐ குழுமத்தில் இணைந்தார். தனது திறமையால் ஐசிஐசிஐயின் செய்முறைத் திறனைப் பன்மடங்கு கூட்டி வியக்கத் தக்க சாதனைகள் படைத்த இவர், ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனத்தை 2000 முதல் நடத்தி வருகிறார். உலகப் பொருளாதார மந்த நிலையிலும் ஐசிஐசிஐ இன்·போடெக் நிறுவனத்தை வளர்த்து வரும் திரு ஸ்ரீனிவாசன், இன்று பரபரப்பாகப் பேசப்படும் இந்தியா அவுட்சோர்ஸிங் அலையைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர். இந்தியாவில் பிறந்த ஓர் உலகளாவிய நிறுவனம் எப்படி தரக்கட்டுப்பாடு, பணியாளர் உறவுகள், உற்பத்திச் செலவுகள், வியாபாரச் சிக்கல்கள் போன்றவற்றை அணுகுகிறது? அவுட் சோர்ஸிங் அலையைப் பற்றிக் கவலைப்படும் அமெரிக்கத் தமிழர்களுக்கு இவரது அறிவுரை என்ன?

சென்ற இதழில் தொடங்கிய இந்தச் சுவையான உரையாடல் மேலும் பல கூரிய அலசல்களோடு தொடர்கிறது...

கே: தரம் உயரவேண்டும் என்கிற எண்ணம் வளர நீங்கள் ஐசிஐசிஐ யில் ஏதாவது சிறப்பான பயிற்சி அளிக்கிறீர்களா?

ப: ஐசிஐசிஐயைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டோருக்கு நாங்கள் தனிப் பயிற்சி அளிக்கிறோம். ஏனென்றால் இதில் எல்லாமே தெளிவாக வரையறுக்கப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டது. அந்த டாக்குமெண்டை வாடிக்கையாளர் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்கிறார். அதை நாம் அப்படியே டெலிவரி செய்து, கடைசியாக எதிர்பார்த்த செயல்பாடு வரவில்லை என்றால் கூட அவர் ஒத்துக்கொள்கிறார். நாம் மீண்டும் செய்யும் திருத்திய பணிக்கு அவர்கள் பணம் செலுத்தத் தயாராக இருப்பார்கள்.

ஆனால் இந்திய வாடிக்கையாளர் இதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். நிறைய இடங்களில் நாம் மென்பொருளைக் கொடுத்த பிறகும்கூட அவர்களிடம் நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க முடியாது. 90 அல்லது 95 சதவிகிதம் பணத்தை வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அங்கு மனப்பான்மையே அப்படித்தான். மற்ற நாடுகளில் ஆர்டர் வந்தாலும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் வேலை துவங்க மாட்டோம். இந்தியாவைப் பொறுத்தவரை 25 ஆணைகளில் 20க்கு ஒப்பந்தம் இல்லாமலேயே, ஒரு கொள்முதல் ஆணைக் கடிதத்தின் (purchase order) அடிப்படையில், வேலையை முடித்துவிடுவோம். அதற்குப் பின்னால் "நான் அப்படிச் சொல்ல வில்லை" என்றெல்லாம் வரும். ஆனாலும் எதிலும் கையெழுத்துப் போட ஒரு தயக்கம்.

ஆகவே ஒரு ஒழுங்கு முறையோடு வேலை செய்வது, சரியான தகவல் தொடர்புத் திறமை ஆகியவற்றுக்கான பயிற்சி இருந்தால்தான் அமெரிக்க வேலைகளைக் கையாளமுடியும். புதிதாக வருபவர்களை இந்தியருக்கான திட்டப் பணியில் (project) தான் ஈடுபடுத்துவோம். பிறகு ஓரளவு அனுபவமும் பயிற்சியும் ஆனபின் அமெரிக்கப் புராஜெக்டுகள் கொடுப்போம்.

கே: ஜப்பானில் ஜப்பானியர்களுக்கு நல்ல தரமான பொருட்களைக் கொடுக்கிறார்கள். சுவிட் ஸர்லாந்து, ஜெர்மனியிலும் அப்படித்தான். ஆனால் இந்தியாவில் மட்டும் தரமான பொருட்கள் ஏற்றுமதிக்கு என்று வைத்து விடுகிறார்கள். உள்ளூர் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஏன்?

ப: அதற்கேற்ற விலை கொடுக்க மாட்டார்கள். தனக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்ல மாட்டார்கள். பிறகு எப்படி தரமான பொருள் கிடைக்கும்?

கே: TVS, ABT போன்ற கம்பெனி கள் இந்தியாவில் தமக்கென்று ஒரு தரத்தை அமைத்துக் கொண்டு அதை மக்களுக்கு ஏற்ற விலையில் கொடுத்தார்கள். அதனால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மென்பொருள் துறையில் அப்படிச் சொல்ல முடியுமா?

ப: நீங்கள் சொல்வது சரி. ஆனால் யாரும் இந்தியருக்கு மட்டமானதைத் தரவேண்டும் என நினைத்துச் செய்வதில்லை. வாங்குபவர் கொடுக்கத் தயாராயிருக்கும் விலைக்கேற்ற மதிப்புத்தானே கிடைக்கும். அமெரிக்காவில் என்னதான் நீங்கள் குறைத்துப் போட்டால்கூட ஒரு மணி நேரத்துக்கு (man-hour) 15 அல்லது 20 டாலர்கள் கிடைக்கும். இந்தியாவில் ஓர் ஆள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைக்கு (per man-month) 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கலாம். பத்து மாதம் ஆகுமென்று கணக்கிட்டு மூன்று லட்ச ரூபாய் கொடுத்துவிடுவார்கள். பின் 27 மாதம் ஆனாலும் அதைப் பற்றி அக்கறையில்லை, மேலே பணம் தரமாட்டார்கள்.

மற்றொன்று, எப்போது கூப்பிட்டாலும் போய் இலவசமாகச் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சேவை மற்றும் அறிவுச் சொத்துரிமை (Intellectual Property Rights) இவற்றுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லை.

கே: இந்தியாவில் அறிவுச் சொத்துரிமைக்கு மதிப்பு இல்லை என்றீர்கள். இந்தியப் பின்னணி இருப்பவர்கள் தமது பற்றின் காரணமாக தம் அறிவுச் சொத்துரிமை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு வெளிமண் திட்டப் பணிகளை (offshore projects) இந்தியாவுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் எந்த வித இந்தியப் பாரம்பரியமும் இல்லாத ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் அறிவுச் சொத் துரிமை பாதுகாக்கப்படும் என்று நம்புவதற்கு நீங்கள் எப்படி உத்தரவாதம் அளிக்கிறீர்கள்?

ப: வாடிக்கையாளர் ஒப்பந்தத்தில் அதற்கான உறுதி அளிக்கிறோம். அதுமட்டுமல்ல பணியாளர்களும் அது மாதிரி நடந்துகொள்ள மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளிக்கிறோம். அது தவிர, சில பெரிய நிறுவனங்கள் தமக்கென்று பிரத்தியேக மையங்களைக் கேட்டு வாங்கி, அதில் தம்முடைய மேற்பார்வையாளரை நியமிப்பார்கள். தமது நெட்வொர்க்கை வேறு எதிலும் இணைக்கக்கூடாது என்று சொல்வார்கள். இதைத் தவிர பெரும் பாலான வாடிக்கையாளர்கள் அவர்களின் ஒப்பந்தம் அமெரிக்க அல்லது ஆங்கிலேயச் சட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்படுமே அன்றி இந்தியச் சட்டத்துக்கு உட்படாது என்று நிபந்தனை விதித்து விடுவார்கள். இந்த மாதிரி நிபந்தனைகள் மூலம் அவரவர் IP பாதுகாக்கப்படுகிறது.

ஆனால் அதற்கும் மேல் அதிக அளவில் பாதுகாப்பு வேண்டும் என்றால் தங்களு டைய சொந்தத் துணை நிறுவனங்களை ஆரம்பித்துச் செய்துகொள்கிறார்கள். இப்போது அதுவும் அதிகம் வந்து கொண்டிருக்கிறது.

கே: உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization) உறுப்பினராக இருப்பதால் அதற்கேற்றாற் போல் அறிவுச் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்புக் காப்புரிமை (intellectual property and patent rights) இவற்றையும் மதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதா?

ப: பெரிய நிறுவனங்களில் இருக்கிறது. தமது பெயர் கெட்டுவிடக்கூடாதே என்று கவனமாக இருக்கிறார்கள். ஆனால் சின்ன நிறுவனங்களில் இந்த விழிப்புணர்வு இருக்கிறது என்று சொல்ல முடியாது. அவர்களில் சிலர் ஒரு நிறுவனத்திற்கு எழுதிய நிரலை இன்னொரு கம்பெனிக்கு மாற்றி எழுதி விற்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இன்னும் சிறிது காலத்தில் இதில் மாற்றம் வரும்.

கே: அறிவுச் சொத்து திருட்டு என்றால் இங்கு விரைவில் வழக்கு நடத்தித் தீர்ப்பு வழங்கப் படுகிறது. சிமான்டெக் (Symantec) நிறுவனத்துக்கு எழுதப்பட்ட மூல நிரலை (source code) ஒருவர் கொண்டு போய் அதன் போட்டியாளர் நிறுவனத்தின் நிரலில் சேர்த்து விட்டார். உடனுக்குடன் வழக்குத் தொடுக்க, ஒரு வருடத்துக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்படிப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஏனென்றால் வர்த்தகத்தின் ஆதாரம் அறிவுச்சொத்துரிமை என்ற விழிப்புணர்வு இருக்கிறது. இதற்கு அமெரிக்கச் சட்ட அமைப்பு (Legal System) தருவது போன்ற பாதுகாப்பு இந்தியாவிலும் உள்ளதா?

ப: அது சரிதான். ஆனால், நான் இந்தியாவில் அறிவுச் சொத்துக்கு மதிப்பு இல்லை என்று சொன்னது வேறுவகையில். அதாவது ஒரு மென்பொருள் தயார் செய்து குறுந்தகட்டில் (CD) பதிவுசெய்து விற்றால் இந்தியாவில் இவ்வளவு விலை ஏன் கொடுக்கவேண்டும், குறுந்தகட்டில் பதிவு செய்ய 600-650 ரூபாய்தானே ஆகும் என்று நினைப்பார்கள். ஆனால் அந்த நிறுவனங்களே இந்த மென்பொருள் தயாரிப்பை மிகக் குறைவாக மதிப்பிடும். அதுவே அமெரிக்காவில் அந்த மென்பொருள் தயாரிக்க எவ்வளவு மூளை உழைப்பு தேவைப்படும் என்று உணர்ந்து அந்த விலை கொடுப்பார்கள்.

அமெரிக்காவில் சட்ட அமைப்பு இருந்தாலும் இங்கும் பல குறைபாடுகள் உள்ளன. இந்தியாவைப் போலவே இங்கும் தாமதம் ஆகிறது. நெறிப்படுத்திய குற்றச் செயல் (organized crime) என்பதுபோல இங்கே நெறிப்படுத்திய சட்டரீதியாய்ப் பணம் பிடுங்குதல் நடைபெறுகிறது. பணம் கொடுப்பது காப்பீட்டு நிறுவனம்தான் (insurance company). இப்படியே போனால் பிரீமியம் தொகை ஏறிக்கொண்டே போய், காப்பீடே வேண்டாம் என்று நினைக்கு மளவுக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த அணுகுமுறை வளர்ந்து கொண்டே போனால் அது இந்த அமெரிக்க நாட்டையே நிலைகுலையச் செய்யும். (சிரிக்கிறார்.)

கே: இன்றைக்கு மென்பொருள் சேவையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. வரும் நாட்களில் இந்தியாவுக்கு வளர்ச்சி எந்தத் துறையில் இருக்கும்?

ப: offshore வருவது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவில் 100 கோடி மக்கள் இருக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் 5 அல்லது 10 லட்சம் பேர் வேலை செய்வார்களா? இந்தத் துறை மற்றத் துறைகளுக்கு ஓர் உந்துவிசை என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள், கார், வீடு என்று இவற்றுக்கான தேவை பெருகுகிறது. இவற்றை வாங்க வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் தருகின்றன. இப்படிச் சிற்றலைகள் போல பல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சியும், வாய்ப்புக்களும் பெருகுகின்றன. இதன் சுழல் விளைவு ஏற்படுகிறது பாருங்கள், அதுதான் பொருளாதாரத்தை இன்னும் அசுர வேகத்தில் முன்னுக்குக் கொண்டு செல்லும். இந்தியா முழுவதும் இணைக்கும் வகையில் நான்கு வழிப்பாதை போடுகிறார்கள். அதனால் நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பொருளாதார வளர்ச்சி பரவக்கூடிய வாய்ப்பு அதிகம் ஆகும். இன்னும் பத்து வருடங்களில் இதனால் இந்தியா மேலும் வளரக்கூடும்.

கே: அரசு சாராத தனியார் முயற்சி கள் நாட்டை விரைந்து முன்னேற்ற முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதை அரசியல் வாதிகள் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா?

ப: 1992ல் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. அரசின் தலையீடு இப்போது அதிகம் இல்லை. அரசியல்வாதிகள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் இன்னும் பழைய நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறோம்.

கே: இதைக் கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய பழைய கேள்விக்கே மீண்டும் வருகிறேன். தகவல் தொழில் நுட்பத் துறையின் எந்தப் பகுதியில் அடுத்து வளர்ச்சி ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

ப: அமெரிக்காவில் சென்ற 10 வருடங்களில் எல்லாக் கம்பெனிகளுமே வலைத் திறனுடையவையாய் (web enabled) மாற்றப்பட்டன. இதில் ஓரளவு அரசுத்துறையும், பெருமளவு தனியார் துறையும் அடங்கும். இதுவரை இந்திய மென்பொருள் கம்பெனிகள் செய்யும் வேலையின் 90 சதவிகிதப் பயன் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சென்றது. வலைத்திறன் பெறுதல், வாடிக்கையாளர் தொடர்பு நிர்வாகம் (CRM) மற்றும் வழங்கு தொடர் நிர்வாகம் (SCM) ஆகியவை இன்னும் இந்தியாவில் உயர் நிலை எய்தவில்லை. இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவிலேயே மென் பொருள் துறையின் பங்களிப்புக்கு அரசுத் துறையில் (குறிப்பாக மின்னாளுமை - e-Governance) வாய்ப்புப் பெருகும். அதேபோல் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அதிகம் கணினித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது இந்தியக் கம்பெனிகள் மேலும் வளரும்.

இப்போது இணையப் பரப்பு போல் தந்தியில்லாப் பரப்பு (wireless area) என்று வரலாம். அலைப்பட்டையகலம் (bandwidth) அதிகரிப்பதால் வீடியோ தொடர்பான ஒளிபரப்பு போன்றவை அதிகரிக்கலாம். அதனால் பல புதிய நிறுவனங்கள் வரலாம். குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் இதுவரை வளர்ந்த நாடுகளில் 10 வருடங்களில் என்ன நடந்ததோ அது ஐந்தாறு வருடங்களில் நடக்கும்.

கே: இவையெல்லாம் வளர வேண்டுமானால் அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலைகள், தொலைத் தொடர்பு வசதிகள் பெருக வேண்டுமே. இதை அரசாங்கம் கவனிக்கிறதா?

ப: தொலைத்தொடர்பில் ஏராள வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்சாரம், சாலைகள்தான் கொஞ்சம் குறைபாடு. துறைமுகங்கள் நவீனப்படுத்தப் படுகின்றன. சென்னையிலிருந்து - மும்பை - கோல்கத்தா - டெல்லி தங்க நாற்கரம் (Prime Minister's Golden Quadrilateral) விரைவில் தயாராகிவிடும். இது முக்கியமான விஷயம். உடனே இந்தச் சாலைகளுக்கேற்ற கனரக டிரக்குகள் தேவைப்படும். அதற்கான வேலைகளை அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் செய்கின்றன.

மின்சக்தி போதிய அளவு இல்லாததனால் ஒவ்வொரு தொழில்துறைக்கும் அதிகப் பணமுதலீடு தேவைப்படுகிறது. அரசாங்கமும் இதில் அதிகக் கவனத்தை இப்போது செலுத்துகிறது.

கே: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி யின் பயன் நகரங்களில்தான் இருக்கிறதா, கிராமங்களுக்கும் எட்டியுள்ளதா?

ப: இந்தத் துறை நிறைய கிராமத்து இளைஞர்களை நகரம் நோக்கிக் கவர்ந்துவிட்டதால், ஊரகங்களில் ஆட்கள் குறைந்துவிட்டனர். ஆகவே விவசாயம் போன்ற வேலைகளுக்குச் சம்பளம் தானாகவே கூடிவிடுகிறது. இன்றைக்கு எடுத்துக் கொண்டால் ஒரு பி.ஏ. படித்தவனை விட சமையல்காரருக்கும், சாஸ்திரிகளுக்கும்தான் அதிக வருமானம் கிடைக்கிறது. வட இந்தியாவில் நிறுவன ரீதியான விவசாயம் சார்ந்த தொழில்கள் பெருகிவருகின்றன. தென்னிந்தியாவிலும் இன்னும் கொஞ்சநாளில் வரும். அதனால் விவசாயம் செய்யும் முறையே மாறி வருகிறது.

கே: தகவல் தொழில்நுட்பம் தகவல் தருவதன் மூலம் நமக்குச் சக்தி தருகிறது. 'Knowledge is power' என்கிறார்களே, அதுபோல. வானிலை, பயிர் நிலவரம் போன்றவற்றை முன்கூட்டியே சொல்வதன் மூலம் கிராம மக்களுக்குச் சக்தி யூட்டுகிறதா?

ப: IT மூலமாகப் போகவில்லை. தொலைக்காட்சி மூலமாகப் பல விஷயங்கள் அவர்களைச் சென்றடைகின்றன. கிராமங்களில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருக்கும் தொலைக்காட்சியின் மூலம் தெரிந்து கொள்கிறார்கள். அரசாங்கம், உர நிறுவனங்கள் ஆகியவை வேளாண்மை, உரமிடுதல், பயிர் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை அவர்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

கே: ஆந்திரப் பிரதேசத்தை போல் மற்ற மாநிலங்களில் மின்னாளுமை (e-Governance) குறித்த கண்ணோட்டம் பெருகி இருக்கிறதா?

ப: சந்திரபாபு நாயுடு மின்னாளுமையைப் பெருமளவில் ஆரம்பித்து வைத்தார். இன்று மின்னாளுமை குறித்த கண்ணோட்டம் பல மாநிலங்களிலும் பெருகி விட்டது. கர்நாடகம் தான் மின்னாளுமையில் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு கணிப்பு சொல்கிறது. சொல்லப் போனால் சிக்கிம், திரிபுரா, நாகலாந்து போன்ற மாநிலங்களில் கூட உள்ளது. மத்திய அரசாங்கம் ஒரு திட்டப்பணியை ஒரு மாநிலத்தில் செயல்படுத்தினால், மற்ற மாநிலங்களை 'நீங்கள் எப்போது இதை உங்கள் மாநிலத்தில் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். இன்று மின்னாளுமைக்கு என்று சில கம்பெனிகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் 8 மாநிலங்களைப் பகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். உதாரணமாக நில ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் இன்று பல மாநிலங்களில் கணினிப்படுத்தப் பட்டுள்ளது.

கே: அமெரிக்காவை விட்டு வேலை வெளியே நகரும் போது அது இங்கு வந்து பணிபுரியும் இந்தியர்களையும் கூடத்தான் பாதிக்கிறது. இந்த நிலையில், நீங்கள் இவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: ஒன்று, அவர்கள் இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மை பெறவேண்டும். தொடர்ந்து சில காலம் வசதியாக இருந்து பழகிவிட்டார்கள். சம்பள அளவிலும் மாறுபாட்டுக்குத் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது, தம் தொழிலை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். முன்பெல்லாம் வங்கி வேலை என்றால் கடைசிவரை அதுதான். ஆனால் இன்று அப்படிக் கிடையாது. ஏதாவது குறுகிய காலப் படிப்பின்மூலம் வேறு தொழில்களுக்கும் தயார் படுத்திக் கொள்ளவேண்டும். தகவல் தொழில்நுட்பம் அல்லாத, வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியாத பணிகள் உள்ளன. அவற்றுக்குப் போகத் தயங்கக் கூடாது. நம்மை நாமே தொடர்ந்து அலசி, மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அவசியம். அப்போது நம்மால் எங்கேயும் வாழமுடியும்.

கே: நீங்கள் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுவீர்களாமே. எந்த அளவிற்குத் திருக்குறள் உங்களுக்கு நிர்வாகத்தில் பயன் பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

ப: நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் திருக்குறள் பயன்படுகிறது. உதாரணமாக, திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், செயல் படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் (planning, organizing, execution and control) ஆகியவை நிர்வாகத்தின் நான்கு முக்கிய அம்சங்கள். இவை எல்லாவற்றையும் பற்றித் திருக்குறள் பேசுகிறது. ஒரு தலைமை நிர்வாக அலுவலரின் (CEO) கடமை என்ன என்பது 'இறைமாட்சி'யில் பேசப்படுகிறது. "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு". அரசு என்றால் CEO என்று வைத்துக்கொள்ள வேண்டும். 'இடனறிதல்', 'காலமறிதல்', 'வலியறிதல்' இதெல்லாம் திட்டமிடுதல் பற்றிய அதிகாரங்கள். ஒழுங்கமைத்தல் என்பது எப்படிப்பட்டவர் களைத் தேர்ந்தெடுக்கவெண்டும் என்பது. அது 'தெரிந்து தெளிதல்' என்னும் அதிகாரத்தில் வருகிறது. 'தூது' என்ற அதிகாரத்திலிருந்து நம் கம்பெனியின் ambassador எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தலைமைப் பண்புகள் என்று எடுத்துக் கொண்டால் 'சொல்வன்மை', 'கல்வி', 'கேள்வி' ஆகியவற்றைச் சொல்லலாம். 'வினை செயல் வகை' என்ற ஒரு அதிகாரமே போதும், ஒரு நிறுவனத்தின் விவகாரங்களை நடத்துவது எப்படி என்று சொல்லித் தருகிறது. இதன் முதல் குறள் "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது". ஒரு விஷயத்தை விவாதித்தால் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் நாம் பார்க்கிறோம் பல அலுவலகக் கூட்டங்களின் இறுதியில் முடிவுகளே எடுக்கப்படுவதில்லை. "சரி, மறுபடியும் கூடுவோம்" என்று சொல்லி முடிக்கிறோம். முடிவு எடுத்தபின் அது செயல்படுத்தப் படவேண்டும். அதைத் தாமதித்தல் தீது.

"தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை" என்கிறது அடுத்த குறள். ஒருசில குழப்பமான விஷயங்களைத்தான் தாமதப்படுத்த வேண்டியதாய் இருக்கும். மற்றவற்றை உடனடியாகச் செய்வது அவசியம். அடுத்தது "ஒல்லும் வகையான் வினை நன்றே ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல்". ஒல்லும் வகையான் என்றால் சாதாரணமான நேர் பாதை, அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வழியில் வேலை நடக்காது என்றால், எந்த விதத்தில் குறைந்த எதிர்ப்புகளோடு நடக்குமோ அந்த வழியில் செய்ய வேண்டும்.

இதன் கடைசிக் குறள் mergers and acquisitions என்பவற்றுக்கு அடிப்படை. "உரை சிறியார் உள் நடுங்கலுற்று குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து" என்பது அக்குறள். அதாவது 'நம் சந்தை குறுகிவிட்டது, நம் நிறுவனம் சிறுத்துவிட்டது, இனிமேல் வர்த்தகம் நடத்த முடியுமா, முடியாதா' என்ற நடுக்கம் வரும்போது பெரியவர்களைப் பார்த்து அவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இப்படி M&Aவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னமே விளக்கிச் சொல்லிவிட்டார் திருவள்ளுவர். வினை செயல் வகையின் முதல் 9 குறளில் சொன்னபடி செய்துபார்த்து ஒன்றும் நடக்கவில்லை என்றால் பத்தாவது குறள் சொன்னபடி செய்துவிடுங்கள். இப்படி ஏராளமாக இருக்கிறது. ஒரு புத்தகமே எழுதலாம்.

கே: நீங்கள் திருக்குறள் சொல்லும் நிர்வாகம் பற்றி உங்கள் நிறுவனத்தில் மற்றவர்களுக்குக் கற்பித்தது உண்டா?

ப: ஆமாம். சென்னையில் நிறையச் சொல்லியிருக்கிறேன். மும்பை போன்ற இடங்களில் தமிழ் தெரியாததால் அதிகம் சொல்வது இல்லை. பாட்லிவாலா (Battliwala) என்ற எங்கள் பொதுமக்கள் தொடர்பு பொறுப்பாளர், நான் சொன்னதைக் கேட்டு திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் நேரத்திற்கும், கருத்துக்களைத் தெளிவாகப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி கூறி விடை பெறுகிறோம்.

தொலைபேசிப் பேட்டி: பிரகாஷ் ராமமூர்த்தி, தொழில்நுட்பத் துணைத்தலைவர், ஆப்லிக்ஸ் நிறுவனம்

உதவி: கதிரவன் எழில்மன்னன், ரகு பத்மநாபன், மணி மு. மணிவண்ணன்

தொகுப்பு: கேடிஸ்ரீ, மதுரபாரதி, மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com