"ஒன்றரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளேன்" - P.B. ஸ்ரீனிவாஸ்
'காலங்களில் அவள் வசந்தம்' என்ற பாடல் எப்போது கேட்டாலும் நம்மை ஒரு செவி வழிச் சுவர்க்கத்துக்கு இட்டுப் போய்விடுகிறது. என்றும் இனிக்கும் அந்தத் தேன் குரலுக்குச் சொந்தக்காரர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

PBS என்பதை Play Back Singer என்று விரிக்கலாம். தன்னுடைய குரலால் கேட்பவர்களைக் கட்டிப் போட்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி எனப் பன்மொழிகளிலும் பாடியிருக்கும் பாடகர் மட்டுமல்ல. பன்மொழிக் கவிஞரும் கூட.

73 வயதாகும் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கன்னடத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு இவர் அனைத்துப் பாடல்களையும் பாடி 'பாடகருக்கே பாடகராக' விளங்கினார். பிபிஎஸ் அண்மையில் தமிழ்நாடு அரசால் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே: நீங்கள் இசைக் கலைஞனாக உருவானது எவ்விதம்?

ப: நான் சின்ன வயதிலேயே இசைக் கலைஞனாக ஆனவன். இதற்கு என் அம்மாவின் ஆசிதான் காரணம். அம்மா நல்ல பாடகி. குரல்வளம் உடையவர். வீட்டில் பாடிக்கொண்டிருப்பார். அவரது ஆசிதான் என்னை இசைத்துறையில் வளர்த்துவிட்டது. சினிமாப் பாடல்களை கேட்டுத்தான் நான் என்னை வளர்த்துக் கொண்டேன். எனக்குக் கர்நாடக சங்கீதம் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்து கொண்டேன். ஏனென்றால், அன்று கர்நாடக சங்கீதத்தை சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் முறை எனக்குப் புரிபடவில்லை.

எம்.எஸ்., டி.கே. பட்டம்மாள், செம்மங்குடி, அரியக்குடி, ஜி.என். பாலசுப்பிரமணியம் ஆகியவர்களின் இசையைக் கேட்ட பிறகுதான் கர்நாடக இசையில் எனக்கு ஆர்வம் உண்டானது. பாடுபவர்கள் நன்றாகப் பாடினால் இசை நன்றாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன். கர்நாடக சங்கீதத்தை நான் முறையாகக் கற்றுக் கொள்ளவில்லை என்றாலும் பின்னாளில் ராகங்கள், தாளங்கள் எல்லாவற்றையும் சுயமாக நானே கிரகித்துக் கொண்டு புதுப்புது ராகங்களை உருவாக்கினேன்.

கே: சினிமாவில் நுழைந்தது எப்படி, எப்போது?

ப: நான் சினிமாவில் சேருவதில் என் அப்பாவிற்கு இஷ்டம் இல்லை. ஆனால் எனக்கு சினிமாவின் மேல் ஓர் ஆசை. அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் சினிமாவில் சேர்ந்தால் பிள்ளை கெட்டுப்போய் விடுவான் என்று நினைத்தார். ஆனால் எனக்கோ சினிமாவைத் தவிர வேறு ஒன்றிலும் ஈடுபாடு கிடையாது என்று சொன்னேன். உடனே என் தந்தை ''நீ டிகிரி முடித்துவிடு, அப்புறம் பார்க்கலாம்" என்றார்.

நான் சினிமாவில் சேருவதற்காக என் பட்டப்படிப்பை ஒரு தவம் செய்வதுபோல் முடித்தேன். அதன் பிறகு என்னை ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றார் என் தந்தை. அவர் என் அப்பாவிடம் ''உங்களுக்கு எழுதித் தருகிறேன். இவன் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைக்கமாட்டான்'' என்றார். எனக்குக் கோபம் வந்தது. நான் அவரிடம் கேட்டேன் "நீங்கள் சொல்வது அப்படியே நடக்குமா?" என்று. உடனே அவர் ''இல்லை, சில நேரங்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம்'' என்றார். நான் அப்போது அவரிடம் ''அந்த மாற்றங்களில் நானும் ஒருவன்" என்றேன். "முயற்சி எடுத்துப் பார்ப்போம். அது முடியவில்லை என்றால் விட்டுவிடுவோம். ஆனால் என் மூச்சு இருக்கும்வரை முயற்சி எடுப்போம்" என்று சொன்னேன்.

என்னுடைய இந்த பதில் அவருக்கு பிடித்திருந்தது. உடனே அவர் என் தந்தையிடம் ''நீங்கள் இவனை சினிமாவில் சேர்த்துவிடுங்கள். இவனுக்கு ஆர்வம் இருக்கு. திறமை இருக்கு. ஆண்டவனை நான் வேண்டிக் கொள்கிறேன். கண்டிப்பாக இவன் முன்னுக்கு வருவான்'' என்றார்.

அதன்பின் என் தந்தை என்னை ஜெமினி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார். 1952ம் வருடம் முதன்முதலாக சினிமா உலகிற்குள் நான் நுழைந்தேன். பத்மஸ்ரீ யேமானி சங்கர சாஸ்திரி, பி.எஸ்.கலான் ஆகியோர் 'மிஸ்டர் சம்பத்' என்ற இந்திப் படத்தில் என்னை பாடவைத்தனர். தமிழில் 'மிஸ் மாலினி' என்று வந்த படமே இது. அப்படத்தில் இரண்டு வரிகள் பாடினேன். இப்படித்தான் என் திரைப் பின்னணிப் பிரவேசம் ஆனது.

கே: கன்னடப் படவுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பல படங்களில் அவருக்குப் பின்னணி பாடியுள்ளீர்கள்? ராஜ்குமார் ஒரு சிறந்த பாடகர். அப்படி இருக்கையில் அவருக்கு நீங்கள் பின்னணி பாடியதைக் கன்னடப் படவுலகம் எப்படி வரவேற்றது?

ப: ஜெமினியில் ஏவி.எம்.ஆர். நாகேந்திராவ் ஆல் ரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார். அவர் 'ஜாதகம்' என்ற படத்தைத் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் எடுத்தார். அப்போது ஜி.கே. வெங்கட் என்னை ராஜ்குமாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். "நல்ல குரல் வளம் மிக்க இந்த இளைஞர் என் நண்பர். இவருக்கு உங்கள் படத்தில் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். உடனே ராஜ்குமார் 'கோகிலேஸ்வரர்' என்ற படத்தில் எனக்குப் பாட சந்தர்ப்பம் அளித்தார். அந்தப் படத்தில் ஒரு ஸ்லோகம், ஒரு தனிப்பாடல் நான் பாடினேன். என் பாடலைக் கேட்ட ராஜ்குமார் ''வெங்கடேஷ், நீ எனக்கு நல்ல பின்னணிக் குரல் ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாய்'' என்று ரொம்பவும் பாராட்டினார்.

இதன் பின்பு 'பக்த கனகதாசா' என்ற படம் டி.ஆர். நாயுடு தயாரிப்பில் உருவானது. படத்தின் இசை எம்.வி. ராஜூ. எல்லாமே கனகதாசர் பாடல்கள்தான் அப்படத்தில். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அப்போது ராஜ்குமார் "இனி படங்களுக்கு நான் பின்னணி பாடமாட்டேன். எனக்காக பி.பி. ஸ்ரீனிவாஸ்தான் பாடுவார்" என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். அன்று முதல் கிட்டத்தட்ட 20 வருடம் சுமார் 200 பாடல்களுக்கு மேல் நான் அவருக்காகப் பாடினேன். இன்று கன்னடப் படவுலகில் நான் பேசப்படுகிறேன் என்றால் அதன் முழுப்பொறுப்பும் ராஜ்குமார் அவர்களையே சேரும். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கே: தமிழ்த் திரை உலகில் உங்கள் பிரவேசம் எப்போது?

ப: ஏற்கெனவே நான் 'ஜாதகம்' மூலம் தமிழ்த் திரை உலகில் நுழைந்துவிட்டாலும் 'பிரேமபாசம்' படத்தில் நான் தனியாகவும், பி. லீலாவுடன் சேர்ந்தும் பாடினேன். ஆனால் என்னைத் தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது வெள்ளிவிழா கண்ட 'பாவமன்னிப்பு' படத்தில் நான் பாடிய 'காலங்களில் அவள் வசந்தம்' பாட்டிற்குப் பின்தான். கண்ணதாசன் எழுதி, விஸ்வ நாதன் ராமமூர்த்தி இசையில் நான் பாடிய அந்தப் பாடல் மிகப் பிரபலமானது.

கே: எப்படி கன்னடப் படவுலகில் ராஜ்குமாருக்கு உங்கள் குரல் பொருந்தியதோ, அதுபோல் தமிழில் ஜெமினி கணேசனுக்குப் பொருந்தியது. இதற்காக நீங்கள் விசேஷ கவனம் எடுத்துக் கொண்டீர்களா?

ப: அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பாவமன்னிப்பு படத்தில் நான் ஜெமினி கணேசனுக்குப் பாடி, அது பிரபலமாவதற்கு முன்பே அஞ்சலி பிக்சர்சின் 'அடுத்தவீட்டுப் பெண்' படத்தில் நான் நிறையப் பாடல்கள் பாடியுள்ளேன். நானும் ஜானகியும் பாடிய ஜப்பான் பாடல் ஒன்று மிகவும் பிரபலமானது. நான் அதிக அளவில் ஜெமினி கணேசனுக்குப் பாடவில்லை. ஆனால் நான் அவருக்காகப் பாடிய அத்தனை பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைத் தந்தன. உதாரணமாக ஆடாத மனமும் ஆடுதே..., சின்னச் சின்ன கண்ணனுக்கு..., வளர்த்த கதை மறந்துவிட்டாள்... போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

கே: இந்திப் பட உலகில் எப்படி அறிமுகம் ஆனீர்கள்?

ப: காலங்களில் அவள் வசந்தம் பாடிய பிறகு ஏ.வி.எம். செட்டியாருக்கு அந்தப் பாடல் பிடித்துப் போய்விட்டது. அதிலிருந்தே அவர் என்னை எப்படியாவது இந்தித் திரைப்படத்தில் பாட வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதனால் சித்ரகுப்தனிடம் என்னை ஒருமாதம் ஒத்திகை பார்க்கச் சொன்னார். ஆனால் சித்ரகுப்தன் நான் பாடிய முதல் தடவையிலேயே எனக்கு ஓகே சொல்லி விட்டார்.

'மைன் பீ லடுக்கி ஹ¥ன்' என்கிற இந்திப் படம் ஒன்றைச் செட்டியார் தயாரித்தார். என்னை இந்தியில் தர்மேந்திராவுக்குப் பாட வைக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை இந்தப் படத்தில் நிறைவேற்றிக் கொண்டார். மீனாகுமாரிக்கு லதா மங்கேஷ்கர் பாடினார். எனக்கு ரொம்ப நாட்களாக லதாவுடன் பாட வேண்டும் என்பது கனவு. அந்தக் கனவு செட்டியார் அவர்கள் மூலம் நிறைவேறியது எனக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஒருதடவை லதாவின் சகோதரி உஷா பாடிய பாடல் ஒன்றின் ஒரு தவறு இருந்ததை நான் எடுத்துச்சொன்னேன். அதை கேட்ட வி.என். சர்மாஜி 'சென்னையிலிருந்து வந்த இவன் எனக்கு சொல்கிறானே' என்று ஆச்சர்யப்பட்டார். அவர் மீண்டும் அதைப் போட்டுக் கேட்டார். நான் சொல்லிய குறையைக் கண்டுபிடித்து அதை மாற்றினார். அந்த நிகழ்ச்சியில் ஆச்சர்யமடைந்த அவர் சில இந்திப் படங்களில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். இதுவும் நான் ஹிந்திப்பட உலகில் நுழைவதற்கு ஒரு காரணம் எனலாம்.

என் குரல் லதாவிற்கு பிடித்துப்போக அவர் என்னை கிட்டத்தட்ட 15, 16 ஹிந்தி இசையமைப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார். ஆனால் என்னால் ஹிந்தியில் அதிக அளவில் பாடமுடியவில்லை. பிறகு தமிழ், கன்னடம் என்று பாட ஆரம்பித்தேன். தென்னிந்திய மொழிகளில் தமிழ், கன்னடத்தில் நான் அதிக அளவிலும், தெலுங்கு, மலையாளத்தில் கொஞ்சமும் பாடியுள்ளேன்.

கே: நீங்கள் எழுதிய கவிதைகள், பாடல்கள் பற்றிச் சொல்லுங்கள்...

ப: நான் இதுவரை 8 இந்திய மொழிகளில் நிறையப் பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளேன். இதுவரை ஒன்றரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளேன். அதுபோல் ஒன்றரை லட்சம் புதிய மெட்டுகளை உருவாக்கியுள்ளேன். என் மெட்டுக்கள் பலவற்றை வானொலியிலும், தொலைக்காட்சியிலும், ஒலிப்பேழை, குறுந்தகடு மூலமாகவும் ரசிகர்களுக்கு அளித்துள்ளேன்.

நான் பாடிய சாரதா புஜங்க ஸ்தோத்திரம், சமஸ்கிருத பக்தி பாடல்கள், புரந்தரதாஸ் பாடல்கள், ஸ்ரீ வெங்கேடச சுப்ரபாதம், முகுந்தமாலை, மலையாளத்தில் நைவேத்தியம், சிவபரிவார ஸ்தோத்திரம் என்று பல எல்லோராலும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

கே: நீங்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் பற்றி...

ப: 'சந்தஸ்' என்ற தலைப்பில் கவிதை இலக்கணம் பற்றி எழுதியுள்ளேன். 'ஸ்ரீனிவாச காயத்ரி விருத்தம்', சித்ரகவிதை முறையில் 'தசா கீதா கீதா சந்தேசம்' (Dasa Geetha Geetha Sandesam) என்கிற புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறேன். இதை வீணை காயத்திரியுடன் இணைந்து ஒலிப்பேழையாகவும் வெளியிட்டிருக்கிறேன். அதுமட்டுமல்ல 'Man has set his foot on Moon' என்ற புத்தத்கத்தின் EP ஒலித்தட்டை அதிபர் நிக்சன் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் இருவருக்கும் அனுப்பி வைத்திருந்தேன். அவர்களிடமிருந்து பாராட்டுக் கடிதம் கிடைத்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அதில் "man to moon.. moon to god" என்று எழுதியிருந்தேன்.

அதுமட்டுமல்லாமல் Lovely Love Songs, White Shadows, Srinivasa Gayathri Virutham, Gayakudi Geyaalu, பிரணவம் என்று 5 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன்.

கே: நீங்கள் பெற்ற விருதுகள் ஏராளம் இருக்குமே?

ப: தமிழக அரசின் கலைமாமணி விருது, அரிசோனா மாநிலப் பல்கலைக் கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டம், கர்நாடக அரசின் 'கர்நாடக ராஜ்யோத்சவ விருது', ஆந்திர அரசின் 'உகாதி புரஸ்கார்' ஆகியவற்றைப் பெற்றிருக்கிறேன்.

கே: நீங்கள் கஜல் (Ghazals) எழுதிப் பாடியுள்ளீர்களாமே?

ப: எட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான கஜல்களை எழுதி மெட்டமைத்திருக்கிறேன். இவை பெரிதும் காதல் பாடல்கள்தாம். தனியாகவும், E.V.S. தேவி ராமமூர்த்தி அவர்களுடன் இணைந்தும் நான் பாடிய கஜல் ஒலிப்பேழைகள் வெளிவந்துள்ளன. கஜல் பிரியர்களிடம் இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலம். என்னுடன் இணைந்து பாடும் தேவி யேமானி சங்கர சாஸ்திரி அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கே: ஆரம்பத்தில் நீங்களே நிறைய ராகங்களை அமைத்துள்ளதாகக் கூறினீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப: கர்நாடக சங்கீதத்தை நான் முறையாகக் கற்றுக்கொள்ள வில்லையென்றாலும் பல பெரிய இசைக் கலைஞர்களைக் கூர்ந்து கவனித்து என் இசை ஞானத்தை வளர்த்துக்கொண்டேன். 'நவநீத சும சுதா' (Navaneetha Suma Sudha) என்கிற புதிய ராகத்தை உருவாக்கியுள்ளேன். அதுபோல் சித்திரக் கவிதை நடையில் ரொம்பவும் அழகாகத் தியாகராஜரைப் பற்றி கீர்த்தனைகள் எழுதியுள்ளேன்.

கே: லயமான (melody) இசையை அதிகம் நீங்கள் விரும்புவதற்குக் காரணம் உண்டா?

ப: அத்தகைய பாடல்கள் பலதரப் பட்டவர்களால் அதிகம் விரும்பப்படுவது முக்கியம். மறுபடியும் திரைப்படங்களில் இத்தகைய இசை வருவதை நான் வரவேற்கிறேன். கர்நாடக இசையிலும் இது போன்ற பாடல்கள் வரவேண்டும். மியூசிக் என்பதில் முதல் எழுத்தான 'M' மெலடி என்பதையே குறிக்கிறது. நாம் 'M' ஐ எடுத்துவிட்டால் அது 'சிக்' (பிணியுற்றது) ஆகிவிடும். ஆகையால் இசைக்கு லயம் ரொம்பவும் முக்கியம்.

கே: நீங்கள் ஏராளமான பாடகர்களுடன் இணைந்து பாடுயிருப்பீர்களே. அவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப: தென்னிந்திய லதா மங்கேஷ்கர் என்று சொல்லும் பெருமை வாய்ந்த திருமதி பி. சுசீலா அவர்களுடன் நான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பலமொழிகளில் இணைந்து பாடியுள்ளேன். நாங்கள் பாடிய பல பாடல்கள் பிரபல மடைந்துள்ளன. பி. பானுமதி, எஸ். வரலட்சுமி, எஸ். ஜானகி என்று பலருடன் நான் பாடியுள்ளேன். அன்றைய காலக்கட்டத்தில் பிரபலமாக விளங்கிய பல பின்னணிப் பாடகர்களுடனும் நான் இணைந்து பாடியுள்ளேன்.

கே: உங்களுடைய இசை வாரிசுகள் என்று சொல்லக்கூடியவர்கள் உள்ளனரா?

ப: என் பிள்ளைகள் எல்லோருக்குமே நன்றாகப் பாடவரும். என் அக்கா மகன் V.G. மதுசூதனன் இப்போது என்னுடன் பல மேடைகளில் பாடி வருகிறான். அவன் என்னைப் போலவே பாடுகிறான். என் அடுத்த வாரிசு என்று சொல்ல வேண்டுமானால் அவனைக் குறிப்பிடலாம். என் பழைய பாடல்களை அவன் குரலில் பதிவு செய்து நான் ஒருமுறை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அதைக் கேட்ட அவர் ''உங்கள் குரல் அன்று இருந்ததுபோலவே இருக்கிறது'' என்று என்னிடம் கூறினார். நான் அவரிடம் "அது நான் பாடவில்லை, என் மருமகன் பாடியது" என்று சொன்னவுடன் அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டார்.

இவர் மட்டுமல்ல என் பேரன் ஆனந்த வரதன் இரண்டு நந்தினி விருதுகளைக் குழந்தை நட்சத்திரம் என்ற வகையில் பெற்றுள்ளான். என்னுடைய மற்றப் பேரன்கள் (நரசிம்மன், சுதர்சன்) புல்லாங்குழலிலும், மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்று உள்ளனர். என்னுடைய சகோதரன் ராமனுஜம் ரொம்பவும் நன்றாகப் பாடக் கூடியவர். என் சகோதரனின் மகன் பாபு மற்றும் என்னுடைய இரண்டாவது சகோதரியின் மகள் லட்சுமி ஆகியோரும் பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள்.

கே: வெளிநாட்டு அனுபவங்கள் பற்றி கூறுங்கள்...

ப: நான் ஜெமினி கணேசன், நடனமணி கமலா, எம்.எஸ். விஸ்வநாதன் இவர்களோடு பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். குறிப்பாக தென்னாப்பிரிக்கா, கனடா, மற்றும் சில மேற்கத்திய நாடுகள் சென்றிருக்கிறேன். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன்.

கே: சமீபத்தில் நீங்கள் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருக்கும்?

ப: இதுவரை தலைவராக டி.எம்.செளந்தரராஜன் இருந்து வந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை அடுத்து அப்பதவிக்கு என்னை நியமித்துள்ளனர். 2 வருடத்திற்கு முன் 2001 டிசம்பரில் நான் இசைப்பள்ளியில் ஆலோசகராகப் பொறுப்பேற்றேன். இப்போது எனக்கு இந்தப் பதவியை கொடுத்து கெளரவப்படுத்தியிருக்கிறார்கள். நான் இதற்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி கூறுகிறேன். என்னிடம் இத்தனை பெரிய பொறுப்பை அளித்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இயல், இசை, நாடக மன்றத்திற்கு நிறையச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான வேலைகளிலும் இப்போது முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன். நான் என்ன செய்யப் போகிறேன் என்று இப்போது சொல்லப்போவதில்லை.

கே: இப்போது நீங்கள் அதிகம் திரைப் பாடல்கள் பாடுவதில்லையே, ஏன்?

ப: நான் இன்றும் பாட ஆசைப்படுகிறேன். என் குரல் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் இன்று புதிய பாடகர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்குப் புதிய இசையமைப்பாளர்கள் வாய்ப்பு அளிக்கிறார்கள். இன்று புதிய குரல்களை ரசிகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். நான் அதிகம் பாடவில்லையென்றாலும் எப்போதும் பிஸியாக உள்ளேன். என்னை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்கிறேன்.

கே: உங்கள் எதிர்கால ஆசை, புதிய பாடகர்களுக்கு உங்கள் அறிவுரை...

ப: கல்லூரிகளில் திரையிசைப் பாடல்களையும், மெல்லிசைப் பாடல்களையும், கர்நாடக இசைப் பாடல்களையும் பாடுவதற்குப் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இதன் மூலம் மாணவர்களின் பாடும் திறமையை வளர்க்க வேண்டும். அவர்களை இசையில் இன்னும் அதிகம் மிளிர வைக்க வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக மெல்லிசைக் கல்லூரிகள் அமைக்க வேண்டும். அதில் புதிய பாடலாசிரியர் களையும், இசை அமைப்பவர்களையும் உருவாக்க வேண்டும் என்றும் நான் ஆசைப்படுவதுண்டு.

குரல் வளம்தான் பாடகருக்கு முக்கியம். ஆகையால் பாடகர்கள் தங்கள் குரல் வளத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டும். குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். எப்போதும் மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.

*****


பி.பி.எஸ்ஸின் புதிய ராகம்

'நவநீத சும சுதா' (Navaneetha Suma Sudha) என்கிற புதிய ராகத்தை உருவாக்கியுள்ளேன். இந்த ராகத்திற்கு ஜன்யராக ஜன்யம் என்று பெயர் வைத்திருக்கிறார் ஜி.எஸ் மணி. ஏனென்றால் சரஸ்வதி ராகம் பாடும் போது உருவானது இந்த ராகம். நவநீத சும சுதா ராகம் என்பது

நவரச கானடா - ந
வசந்தா - வ
நீதிமதி - நீ
தபஸ்வனி - த
சுவர்ணாங்கி - சு
மலையமாருதம் - ம
சுனாதவிநோதினி - சு
தன்யாசி - தா

இந்த 8 ராகங்களின் முதல் எழுத்தையும் சேர்த்து உருவானதுதான் 'நவநீத சும சுதா'.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி

© TamilOnline.com