பத்மாவதி சரித்திரம்
தமிழில் ஆரம்பகாலப் புதினங்களில் ஒன்று பத்மாவதி சரித்திரம். அதன் முதல் இரண்டு அதிகாரங்களிலிருந்து ஒரு சுவையான நீதிமன்றக் காட்சியை இங்கே பார்க்கிறோம்...

ஒரு தமிழ் நாட்டுக் கதை

முதலாவது அதிகாரம்

பாண்டிய நாட்டிலே, திருநெல்வேலி ஜில்லாவிலே, சிறுகுளம் என்ற ஊரிலுள்ள சுமார் இருநூறு வீடுகளில், வேளாளராலும் 'கீழ்ச்சாதி' களாலும் குடியிருக்கப் பெற்ற அறுபது வீடுகளைத் தவிர, மிகுதியாவும் பிராமணர் கிரகங்களே. குக்கிராம வழக்கம் போல், விப்பிரர் வசிக்கும் வீதிகளிரண்டும், மற்றைக் குடிகளின் வீதிகளினின்றும் விலகியிருக்கின்றன. அவ்வூரில், வீட்டுப் புறக்கடைகளைத் தவிர வேறு கடைகளொன்றும் இல்லை. வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுக்கு, மிளகு, திப்பிலி முதலிய சாமான்கள் வாங்குவதற்குங்கூட, ஒரு மைல் தூரத்துக் கப்பாலுள்ள இறங்கல் என்னும் கடல் துறைமுக நகருக்குத்தான் போக வேண்டும்.

இச்சிறுகுளத்தலே சீதாபதி ஐயர் என்றொருவரிருந்தார். அவருக்குச் சொற்ப நிலமிருந்தது. அவர் அந்நிலத்தை முக்கிய ஆதாரமாகக் கொண்டு, மேற்செலவுக்கு ஏதாவது கையாலானமட்டும் சம்பாத்தியஞ் செய்து, உபாய கால§க்ஷபம் பண்ணிக் கொண்டு வந்தார். அவர் பொருள் தேடிய வழியோ கொண்டாடத் தக்கதன்று. கள்ளச் சாக்ஷ¢கள் சொல்வதிலும், 'தயார்' செய்வதிலும், உருட்டுப் புரட்டுக்கள் பண்ணுவதிலும், கையொப்பமில்லாத 'மொட்டை மனு'க்கள் எழுதிக் குற்றமில்லாரைக் குற்றப்படுத்துவதிலும், ஏழைகளைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதிலும், அவரை வெல்வதரிது. சட்ட திட்டங்களில் தேர்ந்தில்லா சாதாரண கிராமவாசிகளைப் போலவே, 'சர்க்கார்' உத்தியோகஸ்தருங்கூட அவர் பெயரைக் கேட்டால் நடுங்குவார்கள். இடமாற்று, தாழ்ச்சி, பரிசோதனை இகழ்ச்சி முதலிய இடையூறுகளுக்கு அவர் மூலமாக உட்பட்ட உத்தியோகஸ்தர் பலர். தமக்கு விரோத மாயிருந்த ஒரு 'துப்பட்டிக் கல்கட்டரை'க் கூடத் தாம் குற்றப்படுத்தி மாற்றி விட்டதாகவும் ஊர் விளைந்தாலும் காய்ந்தாலும் தம் 'பேனா' உள்ளவரை தமக்கு ஒரு குறைவும் நேரிடாதென்றும், அவர் பெருமை கூறுவதுண்டு. ஒரு நாள் இரவு ஊண் செய்தானபின், சீதாபதி ஐயர் தம் வீட்டு வாசலில் ஒரு நார்க் கட்டிலின்மேல் உட்கார்ந்து தாம்பூலம் மென்று கொண்டிருந்தார். கிருஷ்ணையர், இராமப்பிள்ளை என்ற இருவர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது கிருஷ்ணய்யர், ''ஆமாம், ஓய் சீதாபதி, நீ சொல்வது யதார்த்தம்தான். ஆனால், இந்தக் கும்பமாஸத்துச் சந்திரிகை அதி தாவள்ளியமாய் வீசின போதிலும், சரீர சுகத்துக்கு அவ்வளவு சிலாக்கியமானதில்லையே! போன கும்ப மாஸந்தான், ஒருநாள் இராத்திரி நல்ல சந்திரிகையில் - இன்றிலும் பிரகாசமாயிருந்தது - இறங்கல் சிவராமையருடைய தாயார் விரத சமாப்திக்குப் போய்ப் பலகாரஞ் செய்துவிட்டு, நானும் மேலத் தெரு நாணுவுமா ஊருக்கு வந்தோம். நாணு, தீக்ஷ¢தரவர்கள் கிருதிகளைப் பாடிக்கொண்டே வந்தான். வெகு உல்லாசமாயிருந்தது. அன்று பிடித்த சளியும் ஜூரமும், ஒரு வாரமாயும் விடாமல், நாட்டுப்புறத்து ஒளஷதங்களுக்கும் அடங்காமல், அத்யந்தம், இறங்கல் 'அப்பா வாத்துக் கறி'யா, அல்லது சாம்பையர் சொல்கிறபடி 'அபவாத ஹரி'யா அவனிடத்திற்கு போய் மருந்து சாப்பிட்ட பின்தான் போயிற்று. அந்த வெற்றிலைப் பையை இங்கே தள்ளும்; எங்கே, கொஞ்சம் குப்பான் பிள்ளை கடைப்பொடி எடும் பார்ப்போம்' என்று சொன்னார்.

அதற்கு இராமப்பிள்ளை ''ஆமாம், சாமி! அதெல்லாம் சும்மா வம்புப் பேச்சு. உங்கள் கூட நாணுவையன் வந்தார்களே, அவர்களுக்கேன் காய்ச்சல் வரவில்லை? எவனோ போக்கற்ற பயல், 'மாசி நிலவும் மதியாதார் முற்றமும், வேசியுறவும் வியாபாரி நேசமும்' ஆகாதென்று பாடி வைத்தான். வேலை வேண்டுமே!'' என்றார்.

''அதென்ன வியாபாரி நேசம் ஆகாதென்று சொன்னான்?'' என்று சீதாபதி ஐயர் கேட்டார்.

உடனே கிருஷ்ணையர், ''இதைப் பாரும். இறங்கலில் மெய்யாராவுத்தன் என்னும் ஒரு வியாபாரி, 'கம்பெனி'க்குப் பங்காளிகள் சேர்க்கிறதாகச் சொல்லி எல்லாரையும் 'குல்லாப் போட்டுவிட்டு'ப் பதினாயிரம் ரூபாய் வரை தட்டிக்கொண்டு, எங்கேயோ மக்கத்துக்கு ஓடிப் போய்விட்டான். அவன் நாசமாய்ப் போக, எனக்குக்கூட ஐம்பது ரூபாய் நஷ்டம்; வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று சும்மா இருக்கிறேன். வியாபாரி நேசம் இப்படித்தானிருக்கும்.'' என்று சொன்னார்.

இதற்குள், வாசல் திண்ணையில் படுத்திருந்த சீதாபதி ஐயர் குமாரனாகிய நாராயணன் என்னும் சிறுவன், எழுந்து வந்து சொன்னதாவது: ''இல்லை அப்பா! எல்லாரும் அப்படியேயிருப்பார்களா? இப்பொழுது நம்மை ஆளுகை செய்யும் ஆங்கிலேயர் வியாபாரிகளே! அவர்களுக்குள் பெரிய சக்கரவர்த்திகளைவிட அதிகப் பணமுள்ள வர்த்தகர்கள் இருக்கிறார்களாம். சிலர், இராச்சியங்களுக்குக் கடன் கொடாமல், யுத்தங்களைக்கூட நிறுத்திவிட வல்லவர்களாம். அவர்கள் எல்லாரும் என்ன அயோக்கியர்களா? நம்மை எவ்வளவு நியாயத்தோடு ஆளுகை செய்து...''

இதற்குள் கிருஷ்ணையர், ''ஆமாம், ஆமாம் எல்லாம் நியாயந்தான். தருமபுத்திரருக்கும் பதில்தான் கேட்பானேன்.. நேற்றுத்தான், 'இஞ்சி நீர் ஆபீஸ் ஓவரிசி'க்கு முப்பது ரூபாய் கடன் வாங்கி வாய்க்கரிசி போட்டேன். ஒரு நியாயம் இல்லை, எட்டு (அ)நியாயம் பொருந்தியிருக்கிறது'' என்றார்.

நாராயணன் ''அதெல்லாம் நம்முடைய குற்றந்தானே? அவர்கள் என்ன செய்வார்கள்? தகுந்த சம்பளங்களை ஏற்படுத்தி நம்மை வேலைக்கு வைக்கிறார்கள். நாமே அநியாயஞ் செய்தால் அவர்களைக் குற்றஞ் சொல்லலாமா? பகிரங்கப்பட்டால் தண்டியாமலிருக்கிறார்களா? நம்முடைய அயோக்கியதைக்காக வர்த்தகர்களையும் வாணிபத்தையும் முற்றிலும் பழிக்கிறதா?'' என்று சொன்னான்.

இதுவரையும் பேசாமலிருந்த இராமப் பிள்ளை, ''இதெல்லாம் ஏன் சாமி? 'பகல் பக்கம் பார்த்துச் சொல்; இராத்திரி அதுவும் சொல்லாதே' என்பது பழமொழி. வியாபாரிகளை மட்டுஞ் சொல்லுவானேன்? மற்றவர்கள் யோக்கியர்கள்தானோ? நமக்குள்ளேயே எத்தனை குடிகேடர்கள், எத்தனை ஆயிரப் புளுகர்கள், எத்தனை தலைப்பா மாற்றிகள் எல்லாம் இருக்கிறார்கள்? உயர்குலத்திலே பிறந்து பூணூலைப் போட்டுக் கொண்டு திரிகிற பிராமணரே பழி, கொலை, அசத்தியம் முதலியவைகளுக்குப் பயப்படுகிறது இல்லையே; இவர்களுக் கெல்லாம் தங்கள் கொடுந்தொழில்களைத் தவிர வேறென்ன வியாபாரம்?'' என்று சொன்னார்.

பிந்திய வாசகங்களைக் கூறும்பொழுது, இராமப்பிள்ளை சில வருஷங்களுக்கு முன் சீதாபதி ஐயரால் தமக்கு நேர்ந்த பெரிய அபாயத்தையும் பொருள் நாசத்தையும் மனதில் நினைத்தவராய், அவர் நாவுக்குப் பயந்தவராயினும் சீதாபதி ஐயரை நோக்கி, நயவஞ்சகமாய் உரத்துப் பேசினார். குற்றமுள்ள நெஞ்சையுடைய சீதாபதி ஐயர் உடனே கொதித்தெழுந்து, ''ஆமாம்பிலே? வெள்ளான் பயலே! என்ன, கொழுத்துப் போய் விட்டதோ? தில்லும் பில்லும் பேசலாச்சா! பிலே! எங்கே, இன்னும் ஒருதரம் சொல்லு. உன் நாக்கை அறுத்துவிடுகிறேன்'' என்று கூப்பாடு போட்டார்.

இவ்வளவு பேசுவதன்முன், சீதாபதி ஐயர் வாயிலிருந்த வெற்றிலைத் தாம்பலமெல்லாம் பக்கத்திலிருந்த கிருஷ்ணய்யர் தலைமேல் அபிஷேகமாய் விட்டது. இராமப்பிள்ளை கொஞ்சம் பயம் கொண்ட போதிலும் அவமானமும் அகங்காரமும் மிகுந்து ''என்ன சாமி, பயல் பரட்டையென்று பேசுகிறீ(ர்) கள்? உங்களை நான் என்ன சொன்னேன்? இதோ கிருட்டினையனும் கேட்டுக்கொண்டு தானேயிருக்கிறா(ர்)கள்; என்ன, 'பூசணி¢க்காய் களவாண்டவன் தோளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டகதை'யாயிருக்கிறதே'' என்றார்.

சினமுறும்பொழுது புத்தி குன்றுவது இயல்பு. சீதாபதி ஐயருக்குக் கோபம் வந்துவிட்டாலோ, அவருக்கு அமைந்த சொற்ப அறிவும் பயந்தோடிவிடும்.

இராமப்பிள்ளை வாய் மூடுமுன், அவர் வெறிகொண்டு துள்ளியெழுந்து ''நானாடா, பிலே! பூசணிக்காய் களவாண்டேன்?'' என்று சொல்லி, இராமப்பிள்ளையைக் கன்னத்திற் படீரென்றடித்தார். அவர் கூக்குரலிட்டு இவரையடிக்க, இவர் அவரையடிக்கப் பெரிய கலகம் விளைந்தது. இடம் பூசுரம் தெருவாயிருந்ததனாலும், சீதாபதி ஐயருக்குப் பயந்தும், சில பிராமணர் சேர்ந்து, இராமப்பிள்ளையைக் கொடூரமான காயங்கள் உண்டாகும்படி அடித்து விட்டார்கள். அவர் இரத்தம் மேலெல்லாம் பெருகப் பலவிதமாய்த் திட்டிக்கொண்டும் தம் வீட்டுக்குப் போய், வேளாளர்களிற் சிலரைக் கூட்டிக்கொண்டு மெள்ள மெள்ளத் தள்ளாடி, இறங்கல் சப்மேஜிஸ்தி ரேட்டருடைய வீட்டுக்கு நேராகப் போய்விட்டார். சீதாபதி ஐயர் அரிதில் தம்மினத்தாரால் சாந்தஞ் செய்யப்பட்டு, வீட்டுள் போய்ப் படுத்துக் கொண்டார். இராமப்பிள்ளை இறங்கலுக்குப் போன சங்கதி அவருக்குத் தெரியாது; அவர் மனைவி அன்றிரவு தூங்கவேயில்லை.

இரண்டாவது அதிகாரம்

இறங்கல் சப்மாஜிஸ்திரேட் நரசிம்ம முதலியார் சிறிதும் இரக்கமில்லாத நியாயாதிபதி. அவ்வூரிலுள்ள துஷ்டர்கள், அவர் கொடூரத்தினால்தான் அடங்கி யொழுகுவதாகச் சொல்வதுண்டு. அநேக ஆண்டுகளாய் அவ்வூரிலேயே உத்தியோகமாயிருந்தததால், அங்கும், தன்னதிகாரத்திற்குட்பட்ட மற்ற ஊர்களிலும், வசிக்கும் வம்பர் வீணர்களைப் பற்றி அவருக்கு நன்றாய்த் தெரியும். அவர் பொதுவாய்ப் பொருளாசை கொண்டு நீதிபிறழ்வதில்லை. முன்பு செந்தூரில் வேலையாயிருக்கையில் ஆழ்வாரையர் கொலைக் 'கேசில்' ஐயாயிர ரூபாய் வாங்கினாரென்றும், அதில் ஏற்பட்ட சந்தேகத்தின் பொருட்டே அவ்விடம் விட்டு மாற்றப்பட்டா ரென்றும் சொல்வார் சிலர். ஆனால் கலெக்டரைத் தாம் வருந்தி வேண்டிக் கொண்டதின் பேரில் மாற்றப்பட்டதாக அவர் சொல்வதினாலும், அவ்வளவு உயர்ந்த உத்தியோகஸ்தர் பொய் சொல்வாரென்று நம்புவதற்கு இடமில்லையாதலாலும், அவ்வுரையை நாம் மெய்யெனக் கொள்வோம். இறங்கலில் வந்த பிறகுங்கூட ருசி கண்ட நாவு சும்மா இராதாகையால் ரூபாயாக வாங்கா விட்டாலும், இரண்டொரு 'கேசு'களில் இஷ்டர்களுடைய கட்டாயத்தின் பேரில், ஒரு பெட்டி வண்டியும் மாடுகளும், நாலைந்து கறவைப் பசுக்களும், சில பட்டுப் பீதாம் பரங்களும், பெற்றுக் கொண்டதாகக் கூறுவாருமுளர். ஊர்வாயை மூட உலை மூடியுண்டா? பொறாமைக்காரரான உலகத்தார் பலவிதமாய்த்தான் பேசுவார் கள்; நாம் காதில் விழுந்ததையெல்லாம் வேதவாக்காகக் கொள்ள வேண்டியதில்லை.

பொதுவாய், நரசிம்ம முதலியார் மற்றுஞ் சில சப்மாஜிஸ்திரேட்டுகளைப் போல் அரிசி, வாழைக்காய், இலை, விறகு முதலிய சாமான்களையும்கூட, 'வந்ததை வரப்பற்று' என்ற கொள்கையின் பேரில், இச்சிக்கப் பட்டவரல்லர். கூடிய மட்டிலும் யோக்கியரென்றே கூறவேண்டும். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் ஒளிவு மறைவு இன்றி அளவிறந்த ஆசையுடையவர். எல்லாம் வல்ல திரிமூர்த்திகளே காமன் கணைக் குட்படுவதாகப் புராணங்களிற் கூறப் படுகிறார்களே! 'மெய்ஞ்ஞான விளக்க'த்தில் தன் வீரலாபத்தைப் பிரஸ்தாபிக்கும் பொழுது,

''வேதாவும் முகம் வெளுத்து, விண்டுவும் மார்பகஞ்சி வந்து, விண்டவல்லோனும், பாதாதி கேசாந்தம் பாதியுடல் கறுத்து, வச்ரபாணி வேந்தும், போதாமல் முகத் திருகண் பறத்துமோ ராயிரங்கண் புகுதப்பெற்ற, ஏதாவெலன் கணை துரத்தி வீடுபடா தெவரெவரே யிலக்காகாரே?''

என்று மன்மதன் பெருமை கூறவில்லையா? கேவலம் அழியத்தக்க ஸ்தூல சரீதரத்தை யுடைய மனிதன், தன்னைப் படைத் தளிக்குந் தேவர்களினும் மேன்மைபடைதல் சாத்தியமன்று. "மலரில் மணம் போலும், எள்ளில் எண்ணெய் போலும், மணியில் ஓசை போலும், பெண்டிராசை ஆண் மகனது ஸ்தூல சரீரத்துடன் பிறந்து, அச்சரீரத்துடன் தான் அழியும்'' என்று அவர் சொல்வதுண்டு. ஆனால் நரசிம்ம முதலியாருக்கு எல்லாரிலும் உயர்ந்த அதிகாரத்துடன், யாவரினும் மிக்க காமமும் அமைந்திருந்தது. அவர் பேச்சு ஒவ்வொன்றிலும் இக்குணந் தொனிக்கும்.

நரசிம்ம முதலியார் வெகுநாள்களாகச் சீதாபதி ஐயர் மேற் கண்ணுடைய வராயிருந்தார். முன்பொரு காலத்தில் அவர் தம்முன் குற்றவாளியாய் வந்தபோது, சாக்ஷ¢ பலக்குறைவால் அவரை விட்டாரேயொழிய அவரைச் சிறிதும் மறந்திலர். ஓடுமீனாட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு'' என்பதுபோல, அற்றம் நோக்கிக் காத்திருந்தார். அன்றியும், இராமப்பிள்ளை வைப்பாட்டி அதிரூபவதி அவர் சொல் சிறிதும் தட்டவே மாட்டாள்.

பங்குனி மாதம் ஒன்பதாவது தேதியன்று சீதாபதி ஐயர் 'கேசு' விசாரணை தொடங்கப்பட்டது. இராமப்பிள்ளை 'கோர்ட்டார்' முன் பகிரங்கமாகச் சங்கதிகளை எடுத்துப் பேசும் பொருட்டுத் திருவடியாபிள்ளையென்ற ஒரு 'வக்கிலை'த் திட்டஞ் செய்திருந்தார். பிரதிவாதிகள் பக்கம் சாமினாதய்யர், மாடன் துரை என்ற இரண்டு 'வக்கீல்'கள்.

வாதி பக்கம் இரண்டாவது சாக்ஷ¢, சீதாபதி ஐயர் மகன் நாரயணனே, அவன் படியேறிப் பிராமணஞ் செய்தானவுடன், 'என் பெயர் நாராயணன் நான் அதோ நிற்கிறாரே, எங்கள் அப்பா பிள்ளை; (கோர்ட்டில் யாவருஞ் சிரித்தல்) ஊர் சிறுகுளம்; எனக்குப் பதினாலு வயதாச்சுது; நான் பள்ளிப் பையன்'' என்று சொன்னான்.

கோர்ட்டார்: ஓய் ஐயரே! சமைந்த பெண்ணைப் போலத் தலையைக் குனியாதேயும், நிமிர்ந்து நில்லும் பார்ப்போம். நாளை ஆய்ச்சி வந்தால் இப்படியா நிற்பீர்? நல்லது; யார் உம்மை இவ்விதம் சொல்லச் சொன்னது?

நாராயணன்: வக்கீல் சாமினாதய்யர் இப்படித்தான் சொல்லச் சொன்னார்.

கோர்ட்டார்: சரி, சரி! ஐயர் பாடஞ் சொல்லி வைத்துப் போட்டார்! நல்லது; உமக்கு இந்தக் கேசைப் பற்றி என்ன தெரியும்?

நாராயணன்: சண்டை நடந்த தினம் என் தகப்பனார் ஊரிலேயேயில்லை; குறும் பொற்றையூருக்கு மாடு வாங்கப் போயிருந்தார்.

கோர்ட்டார்: நல்லது, சண்டை நடந்த அன்று உம்முடைய ஐயா ஊரிலில்லை என்றீரே, யாருக்கும் யாருக்கும் சண்டை? பயப்டாதேயும் சும்மா சொல்லும் புதுப்பொண் போல தலையைக் குனியா தேயும். என்னைப் பார்த்துச் சொல்லும்..

நாராயணன்: சண்டையா? இராமப் பிள்ளைக்கும், இராமப்பிள்ளைக்கும் - இராமப்பிள்ளைக்கும் - எனக்குத் தெரியாது; வக்கீல் சாமினாதய்யரைக் கேட்டால் சொல்லுவார்...

'கோர்ட்டி'லுள்ள யாவரும் கல்லென்று சிரித்தார்கள். பொய் புகலக்கூடாதென்றும், ஒரு குற்றத்தை மறைக்கும் பொருட்டு ஒருவன் ஒரு பொய் கூறினால், அக்குற்றம் அவ்வண்ணம் மறைபடாததுந் தவிர, இரட்டித்துப் பெருகுமென்றும், நாராயணன் புத்தகங்களில் வாசித்திருந்தான். அவன் தாயாகிய சீதையம்மாள், தன் கணவனுடைய தீயவொழுக்கத்தை முற்றிலும் வெறுத்தவளாய் குழந்தைப் பருவமுதல் தன் மகனுக்குச் சன்மார்க்க போதனைகள் புகட்டி, வெகு கவனத்துடன் சத்தியத்திலேயே அவனைப் பழக்கி வந்தாள். தான் ஒரு பண்டத்தைப் பிறர் அறியாமல் எடுத்து தின்றுவிட்டபின், தான் எடுக்கவில்லையென்று பொய் புகன்றால், தாயின் கோபத்தைத் தவிர மற்றொன்றுங் கிடையாதென்றும், உண்மை கூறி மன்னிப்பு வேண்டினால், தனக்கு இன்னும் அப்பண்டம் கிடைப்பதுடன், ஓர் அருமை முத்தமும் சித்திக்குமென்றும், அவனுக்கு நன்றாக தெரியும். அன்றியும் அவன் உபாத்தியாயராகிய இராஜகோபாலையரும், தம் பள்ளிப் பிள்ளைகளிடத்தில் நற்குணத்தை விருத்தி செய்வதில் வெகு சிரத்தையுள்ளவர். தன் தகப்பனார் குறும்பொற்றையூருக்குப் போயிருந்ததாகத் தன்னைப் பொய் சாக்ஷ¢ கூறச் சொன்னதற்கு, நாராயணன் எளிதில் இணங்கவில்லை.

சீதாபதி ஐயருடைய நன்மையைக் கருதி, அவர் இல்லாளும், இராஜ கோபாலையரும் கூட, அவனிடத்தில் மிகவும் வேண்டிக் கொண்டார்கள். ஒரு கன்றுமரத்தை முதலில் வேண்டிய வழி வளைத்து வளர்க்கலாம். ஆனால் ஒரு திசை நோக்கி வளைந்து பலத்த பின், மாறி, வளைத்தல் அரிது. கடைசியில் நாராயணன் தன் தகப்பனுக்கு நேரிடக் கூடிய கேட்டை நினைத்துப் பயந்து, ஒருவாறு இணங்கினபோதிலும், தன்னைத் துயருழப்பிக்கும் மனச்சாட்சியைத் திருப்தி செய்யும் பொருட்டுத் தனக்குச் சாட்சி சொல்லி வைத்தது 'வக்கீல்' சாமினாதய்ய ரென்றும் 'கோர்ட்டில்' வெளியிட்டு அவ்வண்ணம் தான் கூறப் புகும் பொய்யின் பாரத்தை ஒருவாறு நீக்கிகொள்ள நினைத்திருந்தான். அதனால் விளையுந் தீங்கு அவனுக்குத் தோன்றவில்லை.

கோர்ட்டார்: ஓய் ஐயரே! நல்லது, உம்முடைய பெயரென்ன, நாராயண ஐயரா? நல்லது; இந்த ஒரு சங்கதி மட்டும் ஒளியாமல் சொல்லிவிடும் பார்ப்போம்; நீர் மற்றப் பார்ப்பாரப் பசல்களைப்போல இல்லை; யோக்கிராகயிருக்கிறீர்! இதுமட்டுஞ் சொல்லும் போதும்; சண்டையில் இராமப் பிள்ளைதான் முதலில் உம்முடைய அய்யாவையடித்தாரா? அல்லது உம்முடைய அய்யாதான் கை நீட்டினாரா?

நாராயணன்: (கண்ணீர் தளும்ப) இராமப் பிள்ளை தானே முதலில் தாறுமாறாய்ப் பேசினார்.

கோர்ட்டார்: ஆமாம்; அது மெய்தான்; இராமப்பிள்ளைதான் முதலில் பேசினார்; அவர் சுத்த அயோக்கியரென்பது எனக்குத் தெரியும். அடித்ததோ?

நாராயணன்: இராமப்பிள்ளைதான் முதலில் சத்தம் போட்டார்; அதற்காக அப்பா ஓர் அடி அடித்தார். அவரும் பதிலடித்தார். சண்டை யுண்டாச்சு...

மற்றக் குற்றவாளிகளைப்பற்றிச் சில கேள்விகள் கேட்டான பின், நாராயணன் விசாரணை முடிந்தது. 'வக்கீல்'கள் ஒருவருக்கும் அதிக சிரமமேயில்லை. நரசிம்ம முதலியாரே அவர்கள் வேலையையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டார். இதைப்பற்றி மாடன் துரை ஆ§க்ஷபித்த போதிலும் ஒன்றும் பயன்படவில்லை. இன்னும் ஒரு சாக்ஷ¢யின் விசாரணையை மட்டும் கொஞ்சம் விவரிப்போம்.

அடுத்துக் கோர்ட்டார் பஞ்சாங்கம் பப்பு சாஸ்திரி என்கிற வைதிகப் பிராம்மணரை விசாரிக்கின்றனர். அவர் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் சாட்சி சொல்ல, சீதாபதி ஐயர்தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்படுகிறது. மேலே படியுங்கள்...

இவ்விதமாக ஒருவாரம் வரை விசாரணை நடந்தது. கடைசியில் சீதாபதி ஐயருக்கு ஆறுமாதச் கடுஞ்சிறையும், நூறு ரூபாய் அபராதமும், கிருஷ்ணய்யருக்கும் வேறு மூன்று பிராமணர்களுக்கும் ஆளுக்கு ஐம்பது ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

இதற்குள் 'வக்கீல் பீசும்' 'போலீஸ் காசு'மாகச் சீதாபதி ஐயருக்கு நானூறு ரூபாய் வரை செலவாகிவிட்டது. மேல் 'கோர்ட்டில்' 'அப்பீல்' செய்தார். அங்கும் நூறுரூபாய் வரை செலவானபின் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இவ்விதமாகச் சிறைப்பட்டவுடன், சீதாபதி ஐயருடைய விரோதிகள் பலரும் தைரியமடைந்து, அவர் சிறை மீளு முன்னமே, அநேகம் பிராதுகள் செய்தார்கள். அம்மூலமாயும் பொருள் நாசமுண்டாயிற்று. கள்ளப் கையொப்பமிட்டுப் பணம் பெற்றுக் கொண்டதாகவும், சில கள்ளப் 'பத்திரங்கள்' உண்டு பண்ணினதாகவும், ஒரு வியாபாரி, அவர் பேரில் 'பிராது' செய்தான். அவர் சிறைச்சாலையிலிருந்ததனாலும், எதிரிகள் பலத்தினாலும் உண்மை வெளியாகிக் குற்றம் ருசுவாகி, அவர் 'ஜில்லாக் கோர்ட்டாரால்' முன் தண்டனை கழிவதற்குள் இன்னும் நாலு வருஷம் கடுஞ்சிறை விதிக்கப்பட்டார்.

அவருக்கிருந்த சொற்ப நிலம், வீடு, தோட்டம் முதலிய யாவும் விரயமாகிக் குடும்பத்துக்குக் குடிக்கக் கஞ்சியின்றிப் போய்விட்டதுந் தவிர, அவர் மனைவி கழுத்திலிருந்து திருமாங்கல்யம் நீங்கலாக, மிகுதி நகைகளுங்கூடப் போய்விட்டன. சீதாபதி ஐயருக்கு வாழ்க்கைப்பட்டதற்கு அடையாளமாக, அப்புண்ணியவதிக்கு மஞ்சள் நூலில் கோத்த ஒரு சிறு தாலி மட்டுமிருந்தது. நாராயணனும் இருந்தான்.

அ.மாதவையா

© TamilOnline.com