அ.மாதவையா
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் பத்திரிகைகள் தோன்றத் தொடங்கின. அவற்றில் பிரசுரிக்கக் கதைகள் எழுதப்படலாயின. இவ்வாறு எழுதப்பட்ட கதைகளே தமிழ்ச் சிறுகதையின் உருவச் செழுமைக்கு முன்னோடியாக அமைந்தன. இவ்வாறு எழுதிய ஆரம்பகால முன்னோடிகளாக பாரதியார், அ.மாதவையா, வ.வே.சு. ஐயர் ஆகியோர் வருகின்றனர்.

அ. மாதவையா ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் திறமை பெற்றவர். பல சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை 'குசிகர் குட்டிக்கதைகள்' என்ற தொகுதியாக 1924இல் வெளிவந்தது. இவற்றில் பெரும்பாலான கதைகள் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 'இந்து' பத்திரிகையில் வெளிவந்தவை. பின்னர் மாதவையா தான் நடத்தி வந்த 'பஞ்சாமிர்தம்' சஞ்சிகையில் அக்கதை களைத் தமிழில் வெளியிட்டார்.

மாதவையா 1872இல் பிறந்தவர். இவரது மூதாதையர் தெலுங்கு பிராமணக் குடும்பத்தினர். திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் பெருங்குளம் என்னும் ஊரில் குடியேறி வாழ்ந்தனர். இக்குடும்பத்தில் வந்த மாதவையா கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும் சமூகச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை கொண்டவராகவும் வளர்ந்தார்.

ஆங்கிலப் புலமையும் தமிழ்ப் புலமையும் ஒருசேரப் பெற்றவராயிருந்தார். பி.ஏ., எம்.ஏ. பட்டங்கள் வரை பெற்றார். ஓராண்டுக் காலம் சென்னை கிறித்தவக் கல்லூரியில் (1892) ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அக்கல்லூரி மலரில் ஆங்கிலக் கவிதை எழுதினார். அதே ஆண்டு விவேக சிந்தாமணி மாத இதழில் சுந்தரம்பிள்ளையின் மனோன் மணீயம் நாடகத்தைத் திறனாய்வு செய்து நீண்ட கட்டுரை எழுதினார்.

தம்காலச் சமுதாயச் சீர்கேடுகளுக்கு எதிராக கருத்துக் கொண்டிருந்ததால் தனது எழுத்தை சமுதாய மறுமலர்ச்சிக்கு உரிய எழுத்தாகப் பயன்படுத்திக் கொண்டார். 1892 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய மாதவையா தம்முடைய இறுதிவரை (1925, அக்டோபர் 22) எழுதிக் கொண்டு இருந்தார். அவர் வாழ்ந்த காலம் பல்வேறு துறைகளிலும் மறுமலர்ச்சி வேண்டி நின்ற காலம். ஆகவே மாதவையா போன்றவர்கள் பழமைப் பிடிப்பிலும் மூடத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கக் கூடியவர்களாக அல்லாமல் வாழ்வின் புதிய மதிப்பீடுகளுக்காக உழைக்க வேண்டியவர்களாக இருந்தார்கள்.

சாவித்திரி சரித்திரம், பத்மாவதி சரித்திரம் உள்ளிட்ட நாவல்களை எழுதித் தமிழ்ச் சூழலில் நன்கு அறியப்பட்டவராக ஆனார். உரைநடையிலும், புனைகதையிலும் மாதவையா அதிகமாகவே அக்கறை கொண்டார். தமிழர்களிடையே புரட்சிகரமான கருத்துக்கள் சென்றடையத் தனது எழுத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார். தாம் பிறந்த பிராமணச் சமுதாயத்தில் காணப்பட்ட பல்வேறு சீர் கேடுகளையும் திருத்த விழைந்தார். தன் சமூகத்தில் காணப்பட்ட போலி வேடப் பண்பு, படாடோபத்திற்காக ஊதாரித்தனமான செலவு போன்ற நடைமுறைகளையும் கிராமங்களில் மூத்த தலைமுறை பிராமணர்களிடம் காணப்பட்ட சாதி வேறுபாடு காட்டும் வழக்கத்தையும் மாதவையா தனது நாவல்களில் கண்டித்தார்.

அவரது பாத்திர உருவாக்கம், கதை நிகழும் களம் மற்றும் உரையாடல்களில் கூர்மையான விமரிசன நோக்கு வெளிப்படுகிறது. அக்காலத்துக்குரிய அரிய சிந்தனைகளையும் தனது படைப்புகளில் ஆங்காங்கு பதித்து விடுவார். பத்மாவதி சரித்திரம் நாவலில் ''மதம் மாறுவது தானா, சமூக வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டுகளுக்கு மருந்து? மதம் என்ன ஒரு கோட்டா, தொப்பியா கிலுக்கினால் மாற்றிட? அவரவர் நாகரிகத்துக்கும், பயிற்சிக்கும் அங்கீகார மாயிருப்பது மதம் தானே? மதம் சம்பந்தமில்லாத விஷயங்களையும் மதம், மதம் என்று பாராட்டி அபிமானிப்பதால் தான் இப்படிப்பட்ட தர்மசங்கடங்களும் விபரீதங்களும் ஏற்படுகின்றன. அதைச் சீர்திருத்த வேண்டுமே அல்லது, மதம் மாறுவதெப்படி? மதம் அவரவரைப் பொறுத்தது என்று நமக்குள்ளும் ஆக வேண்டும். அதற்கு வேண்டிய முயற்சி செய்ய வேண்டும்" என்று எழுதியிருக்கிறார். இக்கருத்தை அவர் வாழ்ந்த காலப் பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்ளும் போது தான் மாதவையாவின் படைப்பு மனநிலை எவ்வாறு இயங்கியுள்ளது என்பது புரியும்.

பிராமண சமுதாயத்தில் அக்காலத்தில் காணப்பட்ட பால்ய விவாகம், விதவைகள் பட்ட துயர், வரதட்சணைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைத் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தார். பெண்களின் சுதந்திரம் மற்றும் சுயமரியாதைக்காக மாதவையா தீவிரமாகச் செயல்பட்டார்.

'குசிகர் குட்டிக் கதைக'ளில் ஒன்றான 'திரெளபதி கனவு' என்ற கதையை மாதவையா ஒரு சுயசரிதை வடிவில் எழுதியிருக்கிறார். அக்கதை ஆரம்பிக்கும் உத்தியே கதையின் உயிர்நாடியைத் தொட்டுவிடுகிறது.

''நான் ஒரு பிராமணக் கைம்பெண். எனக்கு முதல் முதல் ஞாபகத்துக்கு வருவதில் நான் குழந்தையாயிருக்கும் பொழுது ஒருநாள் நான் பல்லக்கேறி ஊர்கோலம் வந்ததும், மறுநாள் என்னுடன் பல்லக்கேறிய பையனைப் பாடையில் தூக்கிச் சென்றதும் ஞாபகமிருப்பதனால் நான் பிறக்கும் போதே கைம்பெண்ணாகப் பிறக்கவில்லை என்று நம்புகின்றேன்''.

மாதவையாவின் சிறுகதைகள் பற்றி பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவதை இவ்விடத்தில் நோக்குவது பொருத்தமாக இருக்கும். "மாதவையாவினது கதைகளை வாசிக்கும் பொழுது அவை சமூக இன்னல்களைக் கண்டு ஆற்றாத உணர்ச்சி" என்கிறார். தமிழில் சிறுகதை என்னும் வடிவம் அறிமுகமாகி தமிழ்ச்சிறுகதை என்று பேசப்படுவதற்கான அத்தகைய உணர்வை தரத்தக்க கதைகளை எழுதிய முன்னோடிகளுள் அ. மாத¨யாவும் ஒருவர்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com