பிரியா சங்கர் நடன அரங்கேற்றம்
மேடையில் 18 படிகளின் உச்சியில் ஐயப்பன் படம். பி.வி. நடராஜன் இயற்றிய பாடலைப் பாடும் ஆஷா ரமேஷின் குரலில் உருக்கம். பார்வையாளர்கள் சிலரது கண்களில் கண்ணீர். அந்தப் பாடலுக்கு அபிநயம் பிடித்த பிரியா ஷங்கர் பார்வையாளர்களைச் சபரிமலைக்கே அழைத்து சென்றார் என்றால் அது மிகையாகாது.

ஓலோனி காலேஜில் ஜனவரி 10 ம் தேதி நடந்த நாட்டிய நிகழ்ச்சி பிரியாவின் அரங்கேற்றம் என்பதை நம்ப முடியவில்லை. இந்த வருடம் 15வது ஆண்டு நிறைவைக் கொண்டாடப் போகும் நிருத்யோல்லாசா பள்ளியிலிருந்து அரங்கேறும் 23வது மாணவி இவர்.

'மஹாதேவ சிவசம்போ' பாட்டிற்குக் குதித்து ஆடிய லாகவமும், 'அசைந்தாடும் மயிலொன்று' பாட்டிற்கு அவரது அபிநயங்களும் அவர் இந்துமதி கணேஷின் மாணவி என்பதை உறுதிப்படுத்தின. பிரியாவின் கண் அசைவுகள் அருமை. அவரது சிரிப்பிற்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் தரலாம். கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த புஷ்பாஞ்சலியிலிருந்து கடைசியாக ஆடிய விருத்தத்துடன் ஆரம்பித்த தில்லானா வரை அவரது புன்னகை மாறா முகம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது. ஜதிஸ்வரத்திலும் வர்ணத்திலும் அவரது கால்களின் லாகவத்தை காண முடிந்தது.

பிரியா விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்திற்காகவும், கோவில்களிலும் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக் கிறார். FIA, சிலிகான் ஆந்திரா, TANA, BATA நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றிருக்கிறார். கலிபோர்னியா செனேட்டர் Liz Figueroa மற்றும் Pleasanton Cultural Arts Council வழங்கிய 'Young Artist Award' வாங்கிய பெருமையும் இவருக்கு உண்டு. Children of the World என்ற சிங்கப்பூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு, நடனத்திற்காக அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் இவரும் ஒருவர்.

இந்த நிகழ்ச்சிக்கு இந்துமதி கணேஷ் நட்டுவாங்கம் செய்ய, ஆஷா ரமேஷ் பாடினார். நாராயணனின் மிருதங்கம், சாந்தி நாராயணனின் வயலின், ரஞ்சனி நரசிம்மனின் புல்லாங்குழல் இசை ஆகியவை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின.

© TamilOnline.com