நியூயார்க்கில் தமிழர் திருநாள்
நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் திருநாள் நிகழ்ச்சி ஜனவரி 17-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. பல்சுவை நிகழ்ச்சிகள், பாடல்கள், விளையாட்டுகள் இவை தவிர, அமெரிக்கத் தமிழர்களுக்குப் பெருமை தரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியும் நிறைவேறியது. அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்தியச் சங்கங்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் ஒரு பெரிய அமைப்பு: இந்தியச் சங்கங்களின் ஒருங்கிணைப்பு (Federation of Indian Associations). முதல் முறையாக ராதாகிருஷ்ணன் என்ற தமிழர் இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றிருக்கிறார். நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர் இவர். (வாழ்த்துச் செய்திகள் அனுப்ப மின்னஞ்சல் முகவரி: info@nytamilsangam.org) தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் மூத்த தலைவர் சண்முகம் மற்றும் பொறுப்பாளர்கள் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்த்துப் பட்டயம் வழங்கி கெளரவித்தனர்.

சிவராஜ் நடத்திய கேளிக்கை விளையாட்டுகளுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 'கலைந்த சொல்' விளையாட்டில் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு பல சொற்களைக் கண்டு பிடித்தனர். திருமதிகள் பிரஹஷிதா மற்றும் வனஜா நடத்திய 'கோலம் போடலாம், வாங்க!' போட்டி அமெரிக்காவில் வீட்டு வாசலில் கோலம் போட முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக இருந்தது.

சுமதி ஹரன் மற்றும் ரங்கநாயகியின் மாணவர்கள் கர்நாடகப் பாடல்கள் பாடினார்கள். சாதனா பராஞ்சி மற்றும் விக்னேஷ்வரியின் மாணவர்கள் பரத நாட்டியம் ஆடினார்கள். சாவித்திரியின் மாணவிகள் 'சப்தஸ்வரங்கள்' என்னும் பாடல் நிகழ்ச்சியை அளித்தனர்.

'சுட்ட பழம்' என்ற நாட்டிய நாடகத்தை ராஜேஸ்வரியின் மாணவிகள் மிகச் சிறப்பாக வழங்கினார்கள். ஒளவையாராகவும், முருகனாகவும் நடித்த சிறுமிகள் பத்மா மற்றும் சம்யுக்தா அருமையாகச் செய்து "வாவ்" போட வைத்தார்கள்! பிரஹஷிதா மற்றும் ரத்தினம் நடத்திய 'ஜோடிப் பொருத்தம்' நிகழ்ச்சி சபையைக் கலக்கியது.

'பொங்கல் இசைத்தென்றல்' நிகழ்ச்சியில் நிவேதிதா சிவராஜ் வீணையில் சில அருமையான பாடல்கள் வழங்கினார். மேற்கத்திய தாளங்கள் மற்றும் கோரஸ் குழுவினருடன் வீணை இசை பிரமாதமாக இருந்தது.

தமிழ் கிறிஸ்தவ சபையின் குழுவினர் அருமையான கரோல் பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய குழந்தைகள் தமிழிலேயே பேசியது இனிமையாகவும், பெருமையாகவும் இருந்தது! குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள, இது போன்ற வாய்ப்புக்கள் மிக உதவியாக இருக்கும். நிகழ்ச்சிகளை மேற்பார்வை செய்த சங்கத்தலைவி காஞ்சனா பூலா வரவேற்புரை வழங்கி, லாட்டரிக் குலுக்கல் நடத்திப் பரிசுகள் வழங்கினார்.

விழா இறுதியில் ஆற்காட் தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்த மணம் மிகுந்த அறுசுவை உணவு மற்றும் சில உறுப்பினர்கள் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலுடன் அனைவருக்கும் சிறப்பான விருந்து.

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினரா வதற்கும், சங்க நிகழ்ச்சிகள் பற்றித் தெரிந்து கொள்வதற்கும்: www.nytamilsangam.org

சிவராஜ் வெங்கட்ராம்,
துணைத்தலைவர், நியூயார்க் தமிழ்ச்சங்கம்.

© TamilOnline.com