பிப்ரவரி 2004: வாசகர் கடிதம்
எனக்குத் தவறாமல் வரும் தென்றல் இதழ்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன் என்பதில் மகிழ்கிறேன். உங்கள் மாத இதழ், பக்க வடிவமைப்பு, அச்சு, பொருளடக்கம் என்று எல்லா வகைகளிலுமே மிக நன்றாய் இருக்கிறது. வட அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களின் கதைகளும் கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்கின்றன. பல துறைகளிலிருந்து மேன்மையானவர்கள், சாதனையாளர்களின் நேர்காணல்களை வெளியிடுவதைக் கண்டு மகிழ்கிறேன்.

ஜனவரி இதழில் தமிழ்ப் புனை கதையின் ஒரு முன்னோடியான ஆ. மாதவையாவைப் பற்றிக் கூறுவதோடு மட்டுமின்றி, அவரது சிறந்த கதையிலிருந்து சில பகுதிகளையும் மீண்டும் பதித்திருப்பது பாராட்டுக்குரியது. ஏன், தென்றலில் வரும் விளம்பரங்கள்கூட, உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்லாமல், அவ்வப்போது அமெரிக்கா வந்து போய்க் கொண்டிருக்கும் என் போன்றவர்க்கும் சுவையான தகவல்களைத் தருகின்றன!

நமது காலத்தின் மூத்த பாடகரான பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களைப் பேட்டி கண்டதற்கும் உங்களைப் பாராட்டியே தீரவேண்டும். உங்கள் ஆசிரியர் குழுவுக்கும், எழுத்தாளர்ளுக்கும் குறிப்பாக என் நெடுநாளைய சிநேகிதியான சித்ரா வைத்தீஸ்வரனுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

சிவசங்கரி

*****


ஜனவரி 2004 இதழில் சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி விபரமாக எழுதி இருக்கிறீர்கள். சொத்துக் குவிப்பு புதிதல்ல. அது ஒரு தொற்றுவியாதி. அதை அளவுடன் செய்வது, அளவில்லாமல் செய்வது, பகிரங்கமாகச் செய்வது, ரகசியமாகச் செய்வது என வர்ணிக்கலாம். காலஞ்சென்ற திரு. சத்திய நாராயணரைச் சுலபமாக மறக்கமுடியாது. நம் கை வெகுசுத்தமாக இருந்தால் தான் பிறர் கையை அசுத்தம் என சொல்ல உரிமை உண்டு.

மாநில முதல்வராகக் கலைஞர் இருந்த காலத்தில் தற்போது உள்ள முதல்வரை எப்படிக் கையாண்டார் என்பதும் மக்கள் அறிந்த விஷயம். பெண் என்றால் பேயும் இறங்கும். இங்குள்ள மக்கள் மேற்கொண்டு நடந்த சம்பவங்களைத் தொலைக்காட்சி மூலம் பல நாட்கள் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.

தமிழ்நாட்டில் இரண்டு பிரபல கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதைத் தவிர, ஆட்சிக்கு வருவதை தவிர, மக்களுக்கு நிரந்தரமான சேவை செய்ததாகத் தெரியவில்லை என்பதையும் மிக வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியதாக இருக்கிறது.

நியாயத்திற்கும் தர்மத்திற்கும் உட்பட்டு நடந்தால்தான் வாழ்க்கையில் சுகம், நிம்மதி கிடைக்கும் என கூறி முடிக்கிறேன்.

அட்லாண்டா ராஜன்

*****


நான் கனடாவில் உள்ள எட்மன்டன் நகரில் 27 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்.
சென்ற அக்டோபரில் அட்லாண்டாவில் என் தங்கை வீட்டிற்கு வந்தபோது அவள் நிறைய 'தென்றல்' இதழ்களைப் படிப்பதற்காக எனக்குக் கொடுத்தாள். படிக்கப் படிக்கச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அமெரிக்காவில் இப்படி ஒரு பத்திரிகை உருவாகித் தொண்டு செய்வது, அதுவும் இலவசமாக, என்பதைப் பார்க்க ஆச்சர்யம் தாங்கவில்லை. நான் 2 வாரமே அங்கு இருந்ததால் எல்லா இதழ்களையும் என்னுடன் எடுத்து வந்துவிட்டேன்.

'தென்றல்' எட்மன்டனுக்கும் வீச ஆசைப் படுகிறேன்.

தனம் கோச்சாய்

*****


தமிழ் நாட்டில் கோவையைச் சேர்ந்தவன் நான். கடந்த சில ஆண்டுகளில் கலி·போர்னியா வரும் சமயங்களில் 'தென்றல்' திங்கள் இதழைப் படித்து மகிழும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். தென்றலின் தரமும், மொழிநடையும், வளர்ச்சியும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

கலி·போர்னியா விரிகுடாப் பகுதியிலும் அமெரிக்காவில் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள் தாய்மொழிப் பற்றும், ஆர்வமும் கொண்டு, கணினித் தொழில்நுட்பத் துறையைப் பயன்படுத்தி, மொழி வளர்ச்சிக்கு ஊக்கமூட்டி வருவது மகிழ்ச்சி தருகிறது.

செ. நாராயணசாமி.

*****


இரண்டில் ஆரம்பம் நான்கில்முடிவு
முன் இரண்டு உழைப்பு, உயர்வு
பின் நான்கு சமத்துவம், சகோதரத்துவம்
சந்தோஷம், சமாதானம்
கண் இரண்டு உன் நடுவில்
வேண்டுகிறேன் அவ்விரண்டை
நோயற்ற வாழ்வு
குறைவற்ற செல்வம்
யாருக்காக?

'தென்றல்' ஆசிரியர், நிர்வாகத்தினர் வாசகர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்காக.

ப. மாரியப்பன்

*****

© TamilOnline.com