தமிழகத்தில் தத்தளிக்கும் பா.ஜ.க.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கைவிட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் அ.இ.அ.தி. மு.க வைத்தான் பெரிதும் நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

தனித்துப் போட்டியிட்டு அதிகத் தொகுதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு இல்லை என்கிற நிலையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஜெயலலிதா தலைமையேற்க வேண்டும் என்று பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

பா.ஜ.க.வின் மற்றொரு தமிழக மந்திரி திருநாவுக்கரசரும், வருகிற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன என்று கூறியுள்ளார். ஆனால் இதுவரை அ.இ.அ.தி.மு.க மெளனம் காத்து வருகிறது. ஜெயலலிதாவின் நேர்காணல் முடிவடைந்ததும் இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சு வார்த்தை நடைபெறலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் ஐதரபாத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தேசியச் செயற்குழுக் கூட்டத்தில் வருகிற ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்று வாஜ்பாய் அறிவித்துள்ளார். வருகிற வாரங்கள் பரபரப்பாக இருக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com