பிப்ரவரி 2004: ஜோக்ஸ்
''பாட்டி, நம்ம கோபுமாமா பையன் சீனு சமையல் கலையிலே பிஎச்டி பண்ணப்போறானாம்''

''பாவமே, அவனுக்கு ஒரு பச்சடி கூட பண்ணத்தெரியாதே, பிஎச்டி எப்படிப் பண்ணுவான்!"

*****


நானும் எனது நண்பனும் இந்தியாவிலிருந்து முதன்முறையாக வரும் அவனது மனைவியை வரவேற்க சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் காத்திருந்தோம். சுங்கச் சோதனை முடிந்து அவர் வெளியே வந்தபோது, எங்கள் பக்கத்தில் இருந்த ஓர் அமெரிக்கர் அவரைப் பார்த்து ''நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்'' எனப் புகழ்ந்தார்.

அதைக்கேட்ட அவர் நாணத்துடன் தலைகுனிய எனது நண்பன் பெரு மிதத்துடன் ''அவள் என் மனைவி'' என்றான்.

அதைக் கேட்ட அந்த அமெரிக்கர் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ''அதனால் என்ன, அப்படி இருந்தும் கூட அவங்க அழகுதான்'' என ஒரு போடுபோட்டாரே பார்க்கலாம். எனது நண்பனின் முகத்தில் அசடு வழிந்தது கேலன் கணக்கில்!

*****


ராமுவின் மனைவி லதா அமெரிக்கா வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. ராமு பக்கத்தில் இருந்த கடைக்கு அவளை நடத்திக் கூட்டிச் சென்றான். அப்போது லதா தரையை உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

ராமு: ''அப்படி என்ன பாக்கறே தரையிலே!''

லதா: ''ஏங்க, நாம இருக்கற தேசம் அமெரிக்காதானே?''

ராமு: ''ஆமாம்... அதுலே என்ன சந்தேகம்?''

லதா: '' பின்ன எதுக்கு சாக் கட்டியிலே ''USA" ன்னு எல்லா இடத்திலேயும் கிறுக்கி இருக்காங்க? இந்தியாலேகூட இப்படி எழுத மாட்டாங்களே?''

ராமுவுக்கோ சிரிப்புத் தாங்க வில்லை!

''USA அப்படீனா Underground Safety Alertன்னு அர்த்தம். கீழே தண்ணீர், காஸ், மின்சாரக் குழாய்கள் ஏதோ இருக்கு. அதனாலே இங்கே தோண்டறதுக்கு முன்னாலே கவனமா இருன்னு எச்சரிக்கை!"

ஹெர்கூலிஸ் சுந்தரம்

© TamilOnline.com