பொறுமை அன்பை வளர்க்கும்
சமீபத்தில் ஒரு தென்றல் இதழில் ஒரு பெண்மணி தன் கோபக்காரக் கணவரின் ஆதிக்கம் பொறுக்க முடியாமல், மகனிடம் இங்கே (USA) வந்து விட்டதாகவும், அவருக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் கூடத் திரும்பிப் போக விரும்பாமல், தனக்கிருந்த கசப்பு உணர்வை வெளிப்படுத்தினார். அந்தக் கடிதம் படித்ததிலிருந்து எனக்குள் ஒரு நெருடல்.

நான் மிகவும் முன்கோபி. என் மனைவி பொறுமைசாலி. என்னளவு படித்தவள். காதல் திருமணம் அல்ல. பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள். அமெரிக்க வாழ்க்கைக்குப் படிப்பு முக்கியம் என்று நானும் ஒத்துக்கொண்டேன். முதலில் ஒன்றும் அவ்வளவு ஈடுபாடு இல்லை. பிறகு, மெள்ள என் கோபத்துக்குப் பதிலடி கொடுக்காமல் இருக்கிறாளே என்று பரிதாப்பட்டு நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உதாரணமாக, மூன்று வருடம் முன்பு அவள் இந்தியா போனபோது, அப்படி ஒன்றும் அவளை 'மிஸ்' பண்ணவில்லை. ஆனால் சமீபத்தில் கிறிஸ்துமஸ் சமயத்தில் போயிருந்தாள். 2 வாரம் என்று போன போது அவள் பிரிவு என்னைப் பாதித்தது. ஆகவே, 1 வாரம் அதிகமாகத் தங்கித் திரும்பி வந்தபோது, கோபத்தில் விளாசி விட்டேன். என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அந்தப் பெண்மணி எழுதியதைப் போல, என் மனைவியும் உள்ளுக்குள் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக் கொண்டு பொறுமையாக இருந்து, கடைசிக் காலத்தில் என்னை நிராதரவாக விட்டுவிடப் போகிறாளோ என்று எனக்குள் ஒரு மாதிரியான உணர்வு. பயம் இல்லை. ஒரு 'sense of discomfort' என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கோபத்தை எப்படி அடக்கிக் கொள்வது என்று வழி சொல்லுங்களேன்.

அன்புள்ள சிநேகிதரே,

கோபம் என்பது ஒரு மனித உணர்ச்சி. வியாதியில்லாத மனிதரைப் பார்ப்பது அரிது; அதுபோல, கோபம் வராமல் இருப்பவரைப் பார்ப்பதும் கடினம். கோபம், பொறாமை, வெறுப்பு, கசப்பு, ஆத்திரம், அகங்காரம், தற்பெருமை போன்ற குணங்களை நான் சின்னச் சின்ன மனவியாதிகளாக நினைக்கிறேன். (உடம்பிற்கு ஜலதோஷம், தலைவலி, இருமல் என்று வருவதில்லையா!) உங்கள் கோபத்தை நீங்களே உணர்ந்து அதற்குத் தீர்வு காண முயற்சி செய்வதே உங்களுடைய இந்த வியாதியைப் பாதி குறைத்து விடும்.

சகிப்புத்தன்மை குறைய, கோபம் வளரும். பாசம், பரிவு பெருகும்போது சகிப்புத்தன்மை வளரும். கோபம் குறையும். நீங்கள் திருமணம் புரிந்துக்கொண்ட புதிதில் நீங்கள் எதிர்பார்த்த கனவுப் பெண்ணாக உங்கள் மனைவி இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய பொறுமை உங்கள் அன்பை வளர்த்திருக்கிறது. கோபம் இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், சில வழிகளைச் சொல்லுகிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

முதலில் கோபம் வரும்போது, நாக்கை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள். கோபத்திற்கு முதல் எதிரி நாக்கு. அது மனைவியோ, இல்லை மானேஜரோ, நாக்கு கோபத்தின் ஆணையின்படி, சுடச்சுடப் பொறியத் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே 2-3 முறை உள்ளிழுத்துக் கொள்ளுங்கள்.

கோபம் வரும்போது, அடக்கப் பார்க்காதீர்கள். உங்களால் முடியாது. Because it is spontaneous. So, don't try to control. Try to manage it. கோபம் வந்தவுடனேயே இருக்கும் இடத்தைவிட்டு நகர்ந்து விடுங்கள். தனியறையிலோ, பாத்ரூமிலோ மூச்சை 10-12 முறை ஆழ்ந்து, இழுத்துப் பாருங்கள். கண்ணாடி இருந்தால் உங்கள் முகத்தைப் பார்த்துக் கொண்டு செய்யுங்கள். (கண் ணாடி என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், though anger is human nature, it is an animal instinct. உங்களுக்கு ஒரு மிருகத்துடன் சண்டை போடுவது போல் ஒரு ஆவேசம் இருந்து வெற்றி காணுவீர்கள்). முன்கோபம் ஒரு 'புஸ்வாணம்' போல. நாக்கையும், மூச்சையும் பயன்படுத்தி அதை அப்போதே அகற்றிவிட்டால், நாம் பிறகு வருத்தப்பட வேண்டிய நிலைமை வராது.

முன் கோபம் இருப்பவர்கள் தியானம் செய்வது நல்ல பலனைத் தருகிறது. உங்களால் தினம் ஒரு 5 நிமிடம் ஒதுக்க முடியுமா என்று பாருங்கள்.

ஒரு டயரி வைத்துக் கொண்டு, உங்கள் கோபம், எப்போது, எதனால், யாரால் வந்தது, எவ்வளவு நேரம் இருந்தது, பின்விளைவுகள் என்ன என்று நாட் குறிப்புப் போல் எழுதி வாருங்கள். உங்களுக்கு வரும் கோபத்தை நீங்களே ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கும்போது (ஒரு மூன்று மாதம் செய்து பாருங்கள்), படிப்படியாக உங்கள் கோபம் குறைந்து வருவதை உணர்வீர்கள்.

படித்த, பண்புள்ள, சகிப்புத்தன்மை நிறைந்த மனைவியையே ஆலோசனை கேளுங்கள். கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்.

உங்கள் அடிப்படைக் குணம் கோபமாக இருந்தால், அதை முழுதாக விலக்குவது சிறிது கடினம். மிளகாயின் காரத்தைக் குறைக்கப் புளிப்பைச் சேர்க்கலாம், உப்பைச் சேர்க்கலாம். சிலருக்குக் கோபம் வரும்போது தன்மானம் அடிபட்டு, ஒரு உந்துதல் வந்து அவர்கள் வளர்ச்சிக்கு உதவும். உங்கள் கோபத்தை அது போன்ற வளர்ச்சிக்கு உபயோகப்படுத்துங்கள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com